ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது உங்கள் மாணவர் விசாவிற்கான நிபந்தனையைப் பூர்த்திசெய்வதாகவும் உங்களது எதிர்கால கல்வி நோக்கங்களுக்கான பாதையாகவும் செயல்படும். இது உங்கள் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தவும்கூடும்.
ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அல்லது நமது ஆங்கிலமொழித் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு ஏராளமான தெரிவுகள் விருப்பங்கள் மற்றும் முறைசாரா கற்றல் வாய்ப்புகள் இருப்பதால், தடைகளைத் தாண்டி, உங்கள் ஆங்கில மொழித் திறனைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
ஆங்கிலத்தில் சரளமாக தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஆஸ்திரேலிய உச்சரிப்பு மற்றும் சிலசொற்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
எனவே, புதிதாக ஆங்கிலம் பேசக்கற்றுக்கொள்பவர்கள் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக பயம் எல்லாவற்றிலும்பார்க்க மிகப்பெரிய தடையாக இருக்கலாம் என்கிறார் ஆஸ்திரேலிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் Adult Migrant English Program (AMEP)இன் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் Marcella Aguilar.
ஆங்கிலம் பேசும் போது நீங்கள் தவறுவிட்டால் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள் எனவும் மொழி என்பது தொடர்புகொள்வதற்கானது என்பதால் நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்களால் கற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் ஊக்குவிக்கிறார்.
அன்றாட வாழ்வினூடாக ஆங்கிலத்தை மேம்படுத்தும் போது, மக்கள் முறையாகக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று Langports ஆங்கில மொழிக் கல்லூரியில் ஆய்வுப் பணிப்பாளராக உள்ள Alison Lennon கூறுகிறார்.
இதன்மூலம் ஆங்கிலத்தில் மிகவும் உறுதியான அடித்தளத்தைப் பெறுகிறார்கள் என்று தான் நினைப்பதாகவும் ஆங்கிலப் பயிற்சியைப் பெறுவது எதிர்கால வேலைகளுக்கும், எதிர்கால ஒருங்கிணைப்புக்கும் மற்றும் எதிர்கால படிப்புகளுக்கும் உதவும் எனவும் அவர் சொல்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயரும் சிலர் அவர்களது விசாவைப் பொறுத்து, ஆங்கிலப் புலமைக்கான சான்றுகளை வழங்க வேண்டியிருக்கலாம்.
ஆஸ்திரேலிய அரசு விசா விண்ணப்பங்களுக்கான பல ஆங்கில மொழி சோதனைகளை அங்கீகரிக்கிறது. IELTS, CAE மற்றும் TOEFL ஆகியவை பல்கலைக்கழகங்கள், TAFES, தனியார் கல்லூரிகள் மற்றும் மொழி மையங்களால் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்புகளில் சிலவாகும்.
இவற்றில் நீங்கள் எந்த ஆங்கில கற்கைநெறியைப் படிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதில் தெளிவான புரிதல் முக்கியமானது என்று ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளரான Hester Mostert கூறுகிறார்.
அதை நீங்கள் ஏன் படிக்க விரும்புகிறீர்கள், எவ்வளவு காலம் படிக்க விரும்புகிறீர்கள், எவ்வளவு காலம் படிக்க வேண்டும், படிப்புக்கான செலவு எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தியவுடன் கற்கைநெறியைத் தேர்வுசெய்யலாம் என அவர் ஊக்குவிக்கிறார்.
அதேநேரம் மாணவர் விசாவில் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, மாணவர்கள் வாரத்திற்கு குறைந்தது 20 மணிநேர நேருக்கு நேர் வகுப்புகளைக் கொண்ட ஒரு மொழிப் பள்ளியில் சேரவேண்டியிருக்கலாம்.
மாணவர்கள் நேரடியாக மேற்படிப்புகளுக்குச் செல்லும் முன் ஆங்கிலம் படிக்கும் வழிமுறைகளை சில மொழிப் பள்ளிகள் வழங்குகின்றன. பிற கற்கைநெறிகள் ஆங்கில புலமைத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன என Alison Lennon விளக்குகிறார்.
ஆஸ்திரேலிய அரசினால் நாடு முழுவதும் நடத்தப்படும் Adult Migrant English Program (AMEP) புலம்பெயர்ந்தோர் மற்றும் மனிதாபிமான ரீதியில் நாட்டுக்குள் உள்வாங்கப்பட்டோர் தமது ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த உதவுகிறது.
AMEP கல்வித் திட்டத்தில் பங்கேற்பவர்களை அவர்களுக்கான ஆசிரியர்களுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Marcella Aguilar, இத்திட்டமூடாக ஆங்கிலக் கல்வி மட்டுமல்லாமல் சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நட்பு மற்றும் ஊக்கம் கிடைப்பதாகவும் சமூகத்துடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள உதவிகிடைப்பதாகவும் கூறுகிறார்.

உங்களுக்கு அருகிலுள்ள Navitas Skilled Futures கல்லூரிக்குச் சென்று அங்குள்ள ஊழியர் ஒருவருடன் பேசி நீங்கள் ஆங்கில கற்கைநெறித் திட்டத்திற்குத் தகுதியானவரா என்பதை அறிந்துகொண்டு அதற்கடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி பயிற்சியே என்கிறார் Marcella Aguilar.
முதலாவதாக நீங்கள் தொலைக்காட்சி பார்க்கும்போது teletext எனப்படும் subtitleகளையும் பார்க்கக்கூடிய வசதி இருக்கும்பட்சத்தில், ஒலியோடு சேர்த்து வார்த்தைகளையும் வாசித்துப்பார்ப்பது ஆஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும் என அவர் ஆலோசனை சொல்கிறார்.
இரண்டாவதாக, ஆங்கிலம் கற்கக் கிடைக்கும் இலவச கல்வி Apps- செயலிகளையும் பயன்படுத்தலாம் என Marcella Aguilar ஆலோசனை சொல்கிறார்.
இந்தச் செயலிகள் உங்கள் மொழிப் படிப்புகளுக்குத் துணையாக இருக்கும் அதேநேரம் மொழி கற்றல் வளங்களுக்கான அணுகலை வழங்குவதற்கான மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும் என்கிறார் Marcella Aguilar.

ஆடியோ புத்தகங்களைக் கேட்பது மூன்றாவது சிறந்த வழி என Marcella Aguilar சொல்கிறார்.
உங்களை வசீகரிக்கும் கதைகள் அல்லது மதிப்புமிக்க உள்ளடக்கத்தை கேட்கும் போது அதைப் புரிந்துகொள்வதையும் உச்சரிப்பை பயிற்சி செய்வதையும் ஆடியோ புத்தகங்கள் எளிதாக்கும் என்கிறார் அவர்.
இவை தவிர ABC மற்றும் SBS வழங்கும் இலவச ஆன்லைன் கற்றல் வழிமுறைகளையும் ஆராயுங்கள்.
SBS Learn English வழங்கும் வீடியோ, Text மற்றும் Podcasts மூலம் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தைப் பற்றி அறிவது மட்டுமல்லாமல் இதனூடாக உங்கள் ஆங்கிலத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
இணையவழியாக மாத்திரமன்றி சமூகத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் வழியாகவும் ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம்.
உதாரணமாக நீங்கள் பல்பொருள் அங்காடிக்குச் செல்லும்போது அல்லது ஊபரில் செல்லும்போது ஆங்கிலத்தில் பேசி பயிற்சி செய்யலாம் என ஆங்கில மொழி பயிற்றுவிப்பாளரான Hester Mostert ஊக்குவிக்கிறார்.
சமூக மற்றும் தன்னார்வக் குழுக்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொழுதுபோக்குக் குழுக்களில் சேர்ந்து அவற்றில் பங்கேற்பது ஆங்கில மொழியறிவை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு ஆலோசனையாகும். இது மொழி பயிற்சி மற்றும் அர்த்தமுள்ள இணைப்புகளை வளர்க்கிறது.
Acronyms
* International English Language Testing System (IELTS)
* Cambridge English: Advanced (CAE)
* Test of English as a Foreign Language (TOEFL)
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.







