Key Points
- கடுமையான புயல் அல்லது வெள்ளத்திற்கு தயாராக, பல நாட்கள் ஆகலாம்.
- முதலில் நீங்கள் வசிக்கும் இடம் எவ்வளவு அபாயத்தில் உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதன்படி, நீங்கள் அவசரகால திட்டத்தை தயார் செய்து கொள்ளலாம்.
- உங்கள் வீட்டிலுள்ள அனைவரும் அவசரகாலத் திட்டம் பற்றி அறிந்திருப்பதை உறுதிசெய்யவும். அவர்கள் வீட்டில் தனியாக இருக்கும் பட்சத்தில் அது உதவும்.
- வானிலை நிலமையைக் கண்காணித்து, புயல் தாக்கும் முன்னரே உங்கள் வீட்டைத் தயார் செய்யுங்கள்.
- அவசரகாலத்தில் தேவைப்படும் பொருட்களைத் தயாராக வைத்திருங்கள். வீடிலேயே தங்க வேண்டிய அல்லது வெளியேற வேண்டியிருந்தால் அவை உதவும்.
கடுமையான மழை காரணமாக ஆறுகள் பல நிரம்பி வழிவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்பவர்களின் உட்கட்டமைப்பு, வீடுகள் பேரழிவுகரமான சேதத்தை சந்தித்துள்ளன மற்றும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே, வானிலை மோசமாகி நீங்கள் வசிக்குமிடத்தில் பாரிய அழிவு ஏற்படப் போகிறது என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம், அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? யாரிடம் உதவி கேட்கலாம்? உங்கள் இருப்பிடத்திலேயே தங்க முடியுமா அல்லது வெளியேற வேண்டுமா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
விளக்குகிறது இந்த கட்டுரை.
கடுமையான புயல் அல்லது வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, SES தன்னார்வலர்கள் குடியிருப்பாளர்களை எச்சரிக்க அவர்களின் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டுகிறார்கள்.
குடியிருப்பாளர்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறுவதற்கான நடைமுறைகள் குறித்தும் அவர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றியும் தகவல்களை வழங்குகிறார்கள். அபாயகரமான பொருட்களை அகற்றுவதற்கும், வெள்ள நீர் வீடுகளுக்குள் வராமல் தடுக்க மணல் மூட்டைகளைத் தயாரிக்கவும், சொத்துக்கள் அல்லது உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் அவர்கள் உதவக்கூடும்.
NSW மாநில SES அமைப்பின் சமூக திறன் அதிகாரியாக Dorothy Tran என்பவர் கடமையாற்றுகிறார். புயல் வெள்ளத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான முதல் படி தயார் நிலை என்று அவர் கூறுகிறார். மக்கள் தங்கள் இடர் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும், அதனால் பேரிடர் ஏற்படும் போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை விவரிக்கும் அவசரகால உத்தியை உருவாக்கலாம்.
நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் பெரு மழை பெய்யும் போது அல்லது வெள்ளம் வரும்போது வானிலை ஆய்வு மையத்தின் அல்லது SES அமைப்பின் செயலிகள் மற்றும் இணைய தளங்கள் அல்லது அவர்களின் சமூக ஊடகங்கள் மூலம் சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளைக் கண்காணிக்க முடியும்.
தண்ணீர் உயரும் முன் அவர்கள் அவசர காலத் திட்டங்களை செயல்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்குக் குழந்தைகள், செல்லப் பிராணிகள் அல்லது கால்நடைகள் இருந்தால், எப்படி, எங்கு பாதுகாப்பாக அவற்றை அழைத்துச் செல்லலாம் என்பதை முன்கூட்டியே அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
அபாயத்தின் அளவைப் பொறுத்து, அவர்கள் வெளியேற வேண்டியிருக்கலாம். மாறாக, அவர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே தங்கி தங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்கவும் முடிவு செய்யலாம்.
எப்படியிருந்தாலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு என்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே பரிசீலித்து, அவசர காலத்திற்குத் தேவையான பொருட்கள் நிரப்பிய பொதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
அவசரகால தொடர்பு எண்களை எளிதில் அறியக் கூடியதாக வைத்திருக்க வேண்டும். உங்கள் அவசர காலத் திட்டங்களை மற்றவர்கள் முன்பே அறிந்திருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும். பேட்டரிகள், மின்விளக்குகள், மெழுகுவர்த்திகள், மழையிலிருந்து பாதுகாக்கத் தேவையான பொருட்கள், போர்வைகள் மற்றும் toiletries எனப்படும் குளியலறைப் பொருட்கள் ஆகியவையும் நீங்கள் எடுத்து வைக்க வேண்டிய பிற பொருட்கள்.

அத்துடன், முதலுதவிப் பெட்டி, கடவுச் சீட்டுகள் அல்லது பிற அடையாள அட்டைகள், வங்கி அல்லது காப்பீட்டுத் தகவல் போன்ற முக்கியமான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் அல்லது குடும்ப புகைப்படங்கள் போன்ற பிற மதிப்புமிக்க பொருட்கள் என்பவற்றையும் நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரு வெள்ளம் ஏற்படும் போது, மக்கள் வெளியேற வேண்டும் என்பதுதான் SES இன் முதன்மையான பரிந்துரை என்றாலும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுபவம் கொண்ட சிலர், தத்தம் வீடுகளிலே தங்குவதற்கு முடிவு செய்கிறார்கள்.
அவசரகால தொடர்பு எண்களை எளிதில் அறியக் கூடியதாக வைத்திருக்க வேண்டும் என்றும், உங்கள் அவசர காலத் திட்டங்களை மற்றவர்கள் முன்பே அறிந்திருப்பதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.

கடுமையான புயலுக்கு உங்கள் வீட்டை தயார்படுத்த சில எளிய வழிமுறைகள் உள்ளன.
அடைப்புகளைத் தடுக்க சாக்கடைகள் மற்றும் வடிகால்களில் இருந்து இலைகளை சுத்தம் செய்தல், பலத்த காற்றில் பறந்து செல்லக்கூடிய எதையும் கட்டி வைத்தல் என்பன இதில் அடங்கும். உடைந்த அல்லது காணாமல் போன ஓடுகள் உட்பட, உங்கள் கூரையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனே சரி செய்யவும்.
வெளி உலகத்துடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியமானது.
வெள்ளத்தின் போது தொலைபேசிகள், மொபைல் ஃபோன்கள் மற்றும் இணையம் என்பன செயலிழப்பதால், சிலர் walkie-talkieகளைப் பயன்படுத்துகின்றனர்.

மரங்களுக்கு அடியில், வடிகால்களுக்கு அருகில் அல்லது சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதற்கும் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
வெள்ளநீரில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதே மிக முக்கியமான மற்றும் உயிர் காக்கும் அறிவுரை.
கலங்கிய நீரில் குப்பைகள் மறைந்து இருக்கலாம் அல்லது சாலைகளின் கீழே கண்ணுக்குத் தெரியாமல் சேதங்கள் இருக்கலாம்... அல்லது வாகனங்களைக் கீழே இழுத்து வீழ்த்தக்கூடிய ஆபத்தான நீரோட்டங்கள் கூட சாலைகளின் அடியில் இருக்கலாம்.
அவை மட்டுமல்ல, பாம்பு தேள் போன்ற சில எதிர்பாராத விருந்தாளிகளும் வாகனங்களில் ஏறிக்கொள்ளலாம்.
உங்கள் காப்பீட்டுக் கொள்கை புதிப்பிக்கப்பட்டுள்ளதா மற்றும் போதுமானதா என்பதைச் சரிபார்ப்பதும் முக்கியம். உங்கள் இருப்பிடத்தில் குறிப்பிட்ட அழிவுகள் நிகழ்ந்தால் அவற்றையும் உங்கள் காப்பீடு உள்ளடக்குமா என்பதை உறுதிப்படுத்தவும். திடீர் வெள்ளம், புயல் நீர், நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் அல்லது விழும் பொருட்களால் ஏற்படும் சேதங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

கூடுதல் தகவலுக்கு, உங்கள் உள்ளூர் மாநில மற்றும் பிராந்திய அவசர சேவை இணையதளங்களைப் பார்வையிடவும்:
- New South Wales (NSW SES)
- Victoria (VICSES)
- South Australia (SASES)
- Western Australia (DFES)
- Tasmania (TASSES)
- Queensland (Fire and Emergency Services)
- Australian Capital Territory (ESA)
- Northern Territory (NTES)
அவசர நேரத்தில் 000-ஐ அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




