Key Points
- கொடுமைப் படுத்துதல் நடவடிக்கை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியிருக்கலாம், மேலும் ‘பாதிப்பில்லாத’ பாடசாலை வயது கிண்டல் என்று கருதப்படுவதும் சூழ்நிலையைப் பொறுத்து சில வேளைகளில் கொடுமைப்படுத்துதலாக இருக்கலாம்.
- பாடசாலைகளில் கொடுமைப்படுத்துதலைத் தடுப்பதற்கும் பதிலளிப்பதற்கும் செயல்முறைகள் உள்ளன.
- இந் நாட்டில் இணைய வழியாக கொடுமைப் படுத்தப்பட்டால் அது குறித்து முறையிட முடியும்
ஆஸ்திரேலியாவில் ஆண்டு 4 முதல் ஆண்டு 9 வரை கற்கும் நான்கில் ஒரு மாணவர், ஒவ்வொரு வாரமும் கொடுமைப்படுத்தப்படுவதாக, தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் Education Futures துறையைச் சேர்ந்த Dr Deborah Green குறிப்பிடுகிறார்.
இருப்பினும், கொடுமைப்படுத்துதல் நடத்தைகள் எந்த வயதினரையும் குறிவைத்து நடத்தப்படலாம். அத்துடன், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் ஆகிய இரண்டிலும் நீடித்த தாக்கத்தை அது ஏற்படுத்தலாம்.
“கொடுமைப்படுத்துதலால் சமூகத்திற்கு 2.3 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குழந்தை பாடசாலையில் இருக்கும்போது மட்டுமல்ல பட்டம் பெற்ற 20 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்படுகிறது,” என்று பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவத் தேவைகளுக்காக ஏற்படும் செலவுகளை Dr Deborah Green குறிப்பிடுகிறார்.
“ஆனால் மிக முக்கியமாக, இந்த நடத்தை ஒருவரின் மன ஆரோக்கியம், வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றில், பட்டப்படிப்பு முடிந்து பல ஆண்டுகளாகவும் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார் அவர்.

மிரட்டுதல் மற்றும் இணைய மிரட்டல் என்றால் என்ன?
எல்லா கொடுமைப்படுத்துதல் நடத்தைகளையும் நாம் நேரடியாக இனம் காண முடியாது. குழந்தைகளிடையே விளையாட்டுத்தனமான கிண்டல் கூட சில சமயங்களில் எல்லைகளை மீறக்கூடும் என்று Dr Deborah Green கூறுகிறார்.
“தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் வாய்மொழி, உடல், உளவியல், மற்றும் / அல்லது சமூக நடத்தை மூலம் உறவுகளில் அதிகாரத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துவது – என்று கொடுமைப்படுத்துதலுக்கான தற்போதைய ஆஸ்திரேலிய வரையறை கூறுகிறது.”
உள்நோக்கம், பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் திரும்பத் திரும்பக் கூறுதல் ஆகியவற்றின் கூறுகள் கிண்டல் செய்வதிலிருந்தும், கேவலமாக நடத்துவதற்கும் வேறுபாடு இருக்கின்றன என்பதை அவர் விளக்குகிறார்.
“ஆனால் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் கிண்டல் செய்யும் நடத்தை, அதை அனுபவிக்கும் ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது மட்டுமல்லாமல் ஒரு எல்லையைத் தாண்டும் போது அது கொடுமைப் படுத்தலாக மாறுகிறது,” என்கிறார் Dr Deborah Green.
இணையவழி கொடுமைப் படுத்துதலிற்கும் இது பொருந்தும், மோசமான கருத்துகளில் ஆரம்பித்து வேறு தீவிரமான வடிவங்கள் எடுப்பது வரை அது எப்படியும் இருக்கலாம்.

இணையவழி கொடுமைப் படுத்துதல் குறித்துப் புகாரளித்தல்
இணையவழி கொடுமைப்படுத்துதல் குறித்த புகார் ஒன்றை eSafety புலனாய்வாளர்கள் பெறும் போது, சம்பவத்தின் உள்ளடக்கம் மற்றும் சூழல் இரண்டையும் மதிப்பாய்வு செய்த பின்னர்தான் அவர்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கிறார்கள் என்று, இணையவழி கொடுமைப்படுத்துதலை அனுபவிக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு உதவும் அரச நிறுவனமான eSafety ஆணையத்தில் கல்வி, தடுப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான நிர்வாக மேலாளராகக் கடமையாற்றும் Paul Clark கூறுகிறார்.
“ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு சிறுவனுக்கு பேரூந்துகள் (bus) மீதிருந்த அதீத ஆர்வத்தைக் கேலி செய்து அடையாளம் காணப்படாத சிலர் தொடர்ச்சியாக கருத்துகளை இடுகை செய்கிறார்கள் என்று ஒரு பெற்றோர் எம்மிடம் முறையீடு செய்தார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது மிகவும் அற்பமான ஒரு விடயமாகத் தோன்றுகிறது, ஆனால் சூழல் முக்கியமானது. இந்த சிறுவன் ஒரு மாற்றுத் திறனாளி என்பதுடன் இணைய வழியாக பல்வேறு துன்புறுத்தலுக்கு அவன் ஆளாகியிருந்தான்.”
“எனவே, இந்த முறையீடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் புலனாய்வாளர்கள் தீர்மானித்து, வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்தார்கள்.”
தடுப்பு முயற்சிகள்
நாடு முழுவதும் கொடுமைப்படுத்துதலை நிறுத்த முயற்சிக்கும் அரசின் முன்னெடுப்பான Bullying No Way என்ற குழுவின் ஆராய்ச்சித் திட்டத்தில் Dr Deborah Green அவர்கள் Dr Carmel Taddeo என்பவருடன் இணைந்து பணியாற்றுகிறார்.

பாடசாலையில் கொடுமைப்படுத்துதல் சம்பவம் புகாரளிக்கப்பட்டால் எப்படியான நடவடிக்கைகள் வழக்கமாக எடுக்கப்படும் என்பதை Dr Carmel Taddeo கோடிட்டுக் காட்டுகிறார்.
“பொதுவாக, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு எவ்வாறு சிறந்த முறையில் தலையிடுவது மற்றும் என்ன தேவை என்பதை நிறுவ தகவல் சேகரிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்படும், அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு ஆதரவு மற்றும் சேவைகள் வழங்குவதற்கும் பரிந்துரைக்கப் படலாம்."
பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்
முன்மொழியப்பட்ட தீர்வுகளில் திருப்தியில்லை அல்லது கொடுமைப்படுத்துதல் நடத்தை தொடர்கிறது என்றால் பாடசாலை தலைமை நிர்வாகிகளுடன் சந்திப்பை மேற்கொள்ளலாம், அல்லது பாடசாலையில் முறையான புகாரைத் தாக்கல் செய்யலாம்.
“ஒரு பாடசாலையின் நடவடிக்கைகள் போதாது என்று நினைத்தால் கல்வித் துறையிடம் புகாரளிக்கலாம்” என்றும்,
“கொடுமைப் படுத்துவது சட்டவிரோதமானது, Youth Law Australia என்ற இளைஞர் குறித்த சட்டங்கள் பற்றிய இணையதளத்தில் இளைஞர்களுக்குப் பயனுள்ள, இலவச மற்றும் ரகசிய சட்ட ஆலோசனைகளைப் பெற முடியும்” என்று Dr Carmel Taddeo மேலும் கூறுகிறார்.

ஒரு குழந்தை கொடுமைப் படுத்தலை அனுபவிக்கும் போது, பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள் அந்தக் குழந்தைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அந்தக் குழந்தைக்கு உறுதியளிக்க வேண்டும்.
குழந்தையின் ஆசிரியர் அல்லது பாடசாலை ஆலோசகர் (councillor) உடன் ஒரு சந்திப்பைக் கோருவது தொடங்கி, பாடசாலையில் முறைப்பாடு செய்யும் செயல்முறையை அமைதியாகவும் பயனுள்ளதாகவும் வழி நடத்துவது எப்படி என்பதற்கான சில நடைமுறை ஆலோசனைகளை Dr Carmel Taddeo வழங்குகிறார்.
“பாடசாலை ஊழியர்களைச் சந்திக்கும் போது, உங்கள் குறிப்புகளைக் கொண்டு வருவது முக்கியம், என்ன நடந்தது என்பதை விளக்குவது அவசியம், உங்கள் முறைப்பாடு குறித்து என்ன நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்று கேட்பது முக்கியம். அவர்கள் உங்கள் முறைப்பாடு குறித்து விசாரிப்பார்கள் என்றால், உங்கள் குழந்தையின் அடையாளம் மறைக்கப்படுமா, விசாரணையின் இரகசியத்தன்மை மற்றும் உங்கள் குழந்தைக்குக் கிடைக்கக்கூடிய வேறு ஏதேனும் ஆதரவு இருக்கிறதா என்பது பற்றிக் கேளுங்கள்.
“அத்துடன், ஒவ்வொரு முறை நீங்கள் பாடசாலை ஊழியர்களைச் சந்திக்கும் போதும் அந்த சந்திப்பு குறித்த குறிப்புகளை வைத்திருங்கள். அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.”
இணையவழி கொடுமைப்படுத்துதல் என்று வரும்போது, இணைய மிரட்டல் சம்பவம் நிகழும்போது அது குறித்த நடவடிக்கை எடுக்கத் தேவைப்படும் முக்கிய விடயங்களை eSafety இன் Paul Clark கோடிட்டுக் காட்டுகிறார்.
“இணைய கணக்குகளை முடக்க அல்லது தடுக்க முன்னர், அந்தந்த பக்கங்களை (screenshot) படமெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கொடுமைப்படுத்துதல் நடக்கும் தளங்களில் அது குறித்து நீங்கள் புகாரளித்து, அதற்கு அந்தத் தளத்தை இயக்குபவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அதை esafety.gov.au என்ற எமது தளத்தில் புகாரளிக்கவும். தீவிரமான தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்குத் தேவையான அதிகாரங்கள் எமக்கு இருக்கிறது” என்று Paul Clark கூறுகிறார். மேலும், சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட எந்தவொரு இணைய வழியாக ஒரு குழந்தை கொடுமைப் படுத்தப்படும் சந்தர்ப்பத்திலும், பெற்றோருக்குத் தான் வழங்கும் முக்கிய அறிவுரை என்று அவர் கூறுவது, “இப்படியான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தையின் சாதனத்தை அவர்களிடமிருந்து பிரிக்க வேண்டாம்" என்பதுதான்.
அப்படி செய்தால், “எதிர்காலத்தில் குழந்தைகள் உதவி கேட்பதைத் தவிர்க்கக் கூடும். ஏனெனில், அப்படி உதவி கேட்கும் போது, அவர்கள் தங்கள் சாதனம் பறிக்கப்படும் என்று அவர்கள் பயப்படக்கூடும். அதற்குப் பதிலாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பூரண ஆதரவை வழங்கும் சூழ்நிலையை உருவாக்கி அவர்களுக்குத் தேவையான ஆதரவளிப்பதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்” என்கிறார் அவர்.

இணைய வழியாகவும், தொலைபேசி வழியாகவும் சேவை வழங்கும் Kids Helpline, சிறுவர்களுக்கு – ஐந்து வயதானவர்களுக்குக் கூட – தேவையான ஆலோசனையை வாரத்தில் ஏழு நாட்களும் எந்த நேரமும் இலவசமாக ஆலோசனை வழங்குகிறது. அதில் ஒரு ஆலோசகராக Jamie Kendall கடமையாற்றுகிறார்.
குழந்தைகள் எப்போதாவது தம் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடத்தையை அவதானித்தால் பெரியவர்களின் ஆதரவைத் தேடும் படி குழந்தைகளை Jamie Kendall ஊக்குவிக்கிறார்.
“அப்படியான நடத்தை தொடங்கியவுடன் ஒருவருடன் பேசுவது, அதைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆதரவைப் பெறுவதற்கும் சிறந்த வழியாகும். வீட்டில் இருக்கும் பெரியவரிடம் அல்லது நம்பகமான பெரியவர்களிடம், ‘இப்போது நான் இதை சொந்தமாக சமாளிக்க முயற்சிக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில், அது தொடர்ந்தால், எனக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்’ என்று கூறுவது முதல் கட்டம் என்று கூறலாம்.”
குழந்தைகள் தமக்கு என்ன நடக்கிறது என்பது குறித்துக் குரல் கொடுக்க பெரியவர்கள் வாய்ப்பளிப்பது தான் பெரியவர்கள் முதலில் செய்ய வேண்டியது.
கொடுமைப் படுத்தல் நடக்கிறது என்பதை பெரியவர்கள் சந்தேகிக்கும்போது – குழந்தை அப்படி நடக்கவில்லை என்று மறுத்தால் கூட – அது குறித்து, அவர்களுடன் ஒரு உரையாடலை எப்படி நடத்தலாம் என்ற வழிகளை Jamie Kendall பரிந்துரைக்கிறார்.
“நம்பகமான ஒரு பெரியவர், ஒரு குழந்தையிடம், ‘ஒன்றும் நடக்கவில்லை என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் ஏதோ நடக்கலாம் என்ற ஒரு உணர்வு எனக்கு இன்னும் இருக்கிறது. பாடசாலையில் உங்கள் ஆசிரியர்களில் ஒருவரிடம் நான் இது பற்றி பேசலாம் என்றிருக்கிறேன். உங்கள் பாடசாலைப் படிப்பு எப்படிப் போகிறது என்று அவரிடம் கேட்டால் அவர் வேறு ஏதாவது சொல்வாரா என்று பார்க்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்கலாம்.’’
இறுதியாக, ஒரு குழந்தையின் வாழ்க்கையில் கொடுமைப்படுத்துதலைக் கையாள்வதற்கு நம்பகமான பெரியவர்களின் கூட்டு உள்ளீடு தேவைப்படுகிறது என்கிறார் Jamie Kendall.
“எனவே, கொடுமைப்படுத்துதலை அனுபவிக்கும் இளைஞர்களுக்கு உதவ நாங்கள் ஒரு சமூகமாக பணியாற்ற முடியும். அவர்கள் ஒருவருடன் பேசுவது மட்டுமல்லாமல், நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற முடியும்" என்கிறார் அவர்.

- கொடுமைப்படுத்தலைத் தடுக்க மற்றும் அதற்குப் பதிலளிக்க ஒவ்வொரு அதிகார வரம்பிலும் எப்படியான கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும் பாடசாலை அதிகாரிகள் யார் என்று அறிந்து கொள்ளவும் https://bullyingnoway.gov.au/responding-to-bullying/legislation-and-policy என்ற தளத்தைப் பார்வையிடவும்
- இணையவழி கொடுமைப் படுத்துதல் குறித்த தகவல் மற்றும் ஆதரவுக்கு https://www.esafety.gov.au என்ற தளத்தைப் பார்வையிடவும்
- Kids Helpline என்பது 5 முதல் 25 வயதுடைய இளைஞர்களுக்கான இலவச ரகசியமான 24/7 இணையவழி மற்றும் தொலைபேசி ஆலோசனைச் சேவையாகும். அவர்களைத் தொடர்பு கொள்ள அல்லது ஒரு ஆலோசகரிடம் பேச, 1800 55 1800 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது https://kidshelpline.com.au என்ற தளத்தைப் பார்வையிடவும்.






