காதல். இந்த ஒற்றை வார்த்தைகளுக்கு எங்கும் எதிலும் தெளிவான பொருள் சொல்லப்படவில்லை. ஆனால் எல்லோரையும், எக்கணத்திலும் சிலிர்க்கவைக்கும் உணர்வு ஒன்று உள்ளது என்றால் அது காதல்தான். பெரும்பாலானவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் காதல்வயப்பட்டிருப்பார்கள், இப்போது காதலுடன் வாழ்கின்றார்கள் அல்லது காதலை கடந்துள்ளார்கள்.
காதலைப் பேசாத சங்க இலக்கியமும் இல்லை, சரித்திரமும் இல்லை. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. எத்தனை காதலர் தினம் வந்துபோனாலும் தொடர்ந்தும் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்' என்பதை மதம், மொழி மற்றும் கலாச்சாரம் தாண்டி காதலித்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை மூலம் நிரூபித்து வருக்கிறார்கள் கன்பராவில் வாழும் கார்லோ-சந்திரா தம்பதி.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் சந்திரா. இத்தாலியைப் பூர்வீகமாகக்கொண்டவர் கார்லோ. மெல்பனில் பல்கலைக்கழக கல்வியை மேற்கொண்டபோது சந்தித்துக்கொண்ட இவர்கள் இருவருக்குமிடையில் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட அதுவே காதலாக பரிணமித்திருக்கிறது.

Source: Carlo & Chandra
மூன்று ஆண்டு காதலித்த பின்னர் திருமண பந்தத்தில் இணைவதற்குத் தீர்மானித்தவர்களுக்கு வில்லனாக கோவிட் கட்டுப்பாடுகள் காணப்பட 5 நண்பர்களுடன் மட்டும் மெல்பனில் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவ்வருட இறுதியில் சென்னை சென்று அங்கு உறவினர்கள் சூழ இந்து முறைப்படி திருமண விழாவொன்றை நடத்துவதற்கு கார்லோ- சந்திரா தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவையும் இத்தாலியையும் இணைத்த இவர்களது காதலை இவர்களது பெற்றோர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
காதலிக்கும் போது துரும்பாகத் தெரியும் சில பிரச்சினைகள் குடும்பம் என்று ஆன பின் மலை போல மாறிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் வெவ்வேறு நாடுகள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரப்பின்னணி கொண்ட இவர்களது வாழ்வில் உணவு உட்பட எந்த விடயத்திலும் அவ்வாறு எந்த பிரச்சினைகளும் சவால்களும் இல்லையெனவும் இருவருக்கும் இடையில் பல விடயங்களில் ஒற்றுமையே காணப்பட்டதாகவும் சந்திராவும் கார்லோவும் தெரிவித்தனர்.
இதேவேளை கார்லோ தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். இதற்குக் காரணம் சந்திராவின் குடும்பத்துடன் நெருங்கிப்பழக இது உதவும் என்பதுடன் தமது எதிர்கால சந்ததிக்கு அதைக் கடத்த வேண்டுமென்பதற்காகவுமே என கார்லோ தெரிவித்தார். பதிலுக்கு சந்திராவும் தன்னாலியன்றவகையில் இத்தாலிய மொழியைப் பேசுவதற்கு முயற்சிக்கிறார்.

Carlo & Chandra Source: Supplied
சந்திரா-கார்லோ தம்பதியின் காதல் மொழிக்கு கலாச்சாரம் ஒரு தடையாக இல்லாத பின்னணியில் தமது பிள்ளைகளையும் இரு கலாச்சார பின்னணிகளோடு வளர்ப்பதற்கு இவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
காதல் வாழும் வரை காதலர்களும் காதல் தம்பதிகளும் வாழ்வார்கள்.. காலம் காதலை வாழ வைத்துக் கொண்டேதான் இருக்கும். ஒருவரையொருவர் புரிந்து அன்பையும் துணையையும் வழங்கி ஒருவருக்காக ஒருவர் வாழும் கார்லோ சந்திரா தம்பதியின் காதல் வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியாக அமைய எமது வாழ்த்துக்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.