கானா பிரபா எழுதிய "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி "பயண வரலாற்று நூலுக்கு பிரபல எழுத்தாளர் பாரா (பா.ராகவன்) வழங்கிய முன்னுரையில் இருந்து ஒரு பகுதி:
கானா பிரபாவின் இந்த பாலித்தீவுப் பயணக் குறிப்புகளை வாசிக்கும்போது இவர் ஏகே செட்டியாருக்கும் பாஸ்கரத் தொண்டமானுக்கும் நடுவே குறுக்குச் சால் ஓட்டுகிற மனிதரென்று தோன்றியது.
ஒரு இஸ்லாமிய தேசத்தின் அங்கமாக இருப்பினும் பெரிதும் ஹிந்து கலாசாரப் பின்புலம் கொண்டு இயங்குவது பாலித் தீவு. ராமாயண, மகாபாரதக் கதைகள் காலம் தொட்டு இந்தியத் துணைக்கண்டத் தொடர்பு கொண்ட மண். கானா எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுக் காலம் தொடங்கி பாலியின் வரலாறைப் பிடித்துவிட்டார். கடோத்கஜனுக்கும் பீமனுக்கும் பிரம்மாண்டமான சிலைகள் வைத்துக் கொண்டாடும் தீவு. சரஸ்வதிக்குக் கோயில் கட்டிக் கும்பிடும் தீவு. பிறக்கிற பிள்ளைகளுக்கு பாரதத்திலிருந்தே பெரிதும் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் தீவு.
என்னதான் கானா பிரபா பாலியின் கடற்கரை குறித்தும் விடுதிகள் குறித்தும் மற்றவை குறித்தும் எழுதினாலும், மனத்தின் மிக ஆழத்தில் தங்குவதென்னவோ அந்தத் தீவின் கோயிலழகுகளும் இதிகாச லயிப்புகளும் மண்ணையும் மக்களையும் அவை எவ்வாறு பாதித்து அவர்களின் வாழ்க்கை முறையைத் தீர்மானித்திருக்கின்றன என்கிற சுட்டிக்காட்டல்களும் அவற்றின் சரித்திர முக்கியத்துவமும்தான். இதனால்தான் கானாவை செட்டியாருக்கும் பாஸ்கரத் தொண்டமானுக்கும் நடுவே ஒரு சாலை போடுபவர் என்று சொன்னேன்.
மிக முக்கியம், கானாவின் மொழி. ஈழத் தமிழுக்கே ஒரு பேரெழில் உண்டு. நானெல்லாம் சென்னைக்காரன். காது வழி புகை வெளியேறுமளவுக்கு அம்மொழி பேசுவோரைக் கண்டு பொறாமைத்தீ கொள்கிறவன். தமிழின் புதைபேரெழிலையெல்லாம் தோண்டியெடுத்து வைக்கிற திருப்பணியை ஈழத்து எழுத்தாளர்கள் காலகாலமாகச் செய்து வருபவர்கள். கானாவை இணையத்து எழுத்தாளராகத்தான் எனக்கு முதலில் தெரியும்.
ம்ஹும். இரண்டுமே தப்பு. அவர் ஆஸ்திரேலியாவில் - சே, அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் வேறெங்கு இருந்து எழுதினாலும் அவரது மொழி ஈழத்து மண்ணுக்கே உரிய நளினங்கள் கொண்டது. நீங்கள் நாஸ்திகராக இருந்து, பாலியின் கோயில்கள் உங்கள் ஆர்வத்தைக் கவராதவை என்றாலும் பாதகமில்லை. கானாவின் மொழி உங்களைக் கட்டி வைக்கும். இந்தத் தமிழுக்கு எதையும் தரலாம் என்று சொல்லவைக்கும். அதற்காகவாவது இந்நூலைப் படித்துவிடுங்கள்.