ஆஸ்திரேலிய விலங்குகளிலேயே மனிதர்களின் வசிப்பிடங்களில் பயமின்றி புழங்கும் மரவாழ் இரவு விலங்குகள் போஸம்கள். இவை குடியிருப்புகளைக் குறிவைப்பதில் கைதேர்ந்தவை. வீடுகளின் மேற்கூரைகளைப் பிரித்து உள்ளே இறங்கி அடுக்களையை சூறையாடுவதும், தோட்டங்களைப் பாழ்படுத்துவதும், குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகளை பீறாய்ந்து வெளியில் எறிந்து அசுத்தப்படுத்துவதும், கண்ட இடங்களிலும் கழிவுகளிட்டு நாறடிப்பதுமாக அவற்றின் தொல்லைகள் நம்மூரில் குரங்குத்தொல்லைக்கு நிகரானவை. ஒரு அங்குல நீளத்துக்கு பென்சில் மொத்தத்தில் கரும்பச்சை நிறத்தில் காணப்படும் போஸம் புழுக்கைகள் நமக்கு சுகாதாரக்கேடு விளைவிப்பவை. ஆஸ்திரேலியாவில் மட்டும் சுமார் 23 வகை போஸம்கள் உள்ளன.
ஆஸ்திரேலியப் போஸம்களுள் மிகப் பெரியது தூரிகைவால் போஸம் (brushtail possum). தூரிகை போன்று புசுபுசுவென்ற வால் இருப்பதால் இப்பெயர். இரண்டாவது பெரியது வளையவால் போஸம் (ringtail possum) வளையம் போன்று வளைவான வாலைக் கொண்டிருப்பதால் இப்பெயர். எல்லாவற்றிலும் மிகச்சிறியது பத்தே கிராம் எடையுள்ள டாஸ்மேனியன் பிக்மி போஸம் எனப்படும் குள்ளப்போஸம் (Tasmanian pygmy possum).
போஸம் இனத்தில் உணவுப்பழக்கம் இனத்துக்கு இனம் வித்தியாசப்படும். தூரிகைவால் போஸம் ஒரு அனைத்துண்ணி. கிரேட்டர் கிளைடர் யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே தின்று வாழும் தாவர உண்ணி. பிக்மி போஸம் ஒரு பூச்சித்தின்னி. ஹனி போஸம் பூந்தேனை மட்டுமே உண்ணக்கூடியது.
Advertisement
போஸம் தனது மார்பில் உள்ள வாசனை சுரப்பியிலிருந்து சுரக்கும் செந்நிற திரவத்தால் வாசனை பரப்பியும், ஒலியெழுப்பியும் தன் எல்லைக்குட்பட்ட பகுதியை மற்ற போஸம்களுக்கு உணர்த்துகிறது. இவற்றுக்கு மரக்கிளைகளும் பொந்துகளும் பாறையிடுக்குகளும்தான் இயற்கை உறைவிடங்கள் என்றாலும் பெரும்பான்மையானவை வீடுகளின் மேற்கூரைகளையே தங்கள் உறைவிடங்களாக அமைத்துக்கொள்கின்றன.
போஸம்கள் சில குடும்பமாய் வாழ்கின்றன. குடும்பத்தின் ஆணும் பெண்ணும் இணைந்தே கூடுகட்டுகின்றன. தங்கள் வாலில் கூடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களைச் சுருட்டி எடுத்துக்கொண்டுவந்து மரக்கிளைகளில் பெரிய கோள வடிவிலான கூட்டைக்கட்டுகின்றன. உள்ளே புற்களையும் மரச்செதில்களையும் கொண்டு மெத்தையமைக்கின்றன.
போஸத்தின் கர்ப்பகாலம் பதினாறு முதல் பதினெட்டு நாட்கள்தாம். அதன்பின் பட்டாணி அளவிலான குட்டிகளை ஈனும். மார்சுபியல் இனங்களின் வழக்கப்படி கண்திறவாத முழுவளர்ச்சியடையாத குட்டி, தானே முன்னேறிப் பயணித்து தாயின் வயிற்றுப் பையை அடையும். நான்கைந்து மாதங்கள் தாயின் வயிற்றுப்பைக்குள் பாலைக்குடித்து வளரும் குட்டிகள் அதன் பிறகு, ஆறு மாதங்களுக்கு தாய் தந்தை இருவரது முதுகிலும் சவாரி செய்தபடி வலம் வருகின்றன.
வீடுகளின் கூரைகளிலிருக்கும் விரிசல்களைப் பெரிதாக்கி உள்ளே நுழைவதும் புகைப்போக்கிகள் வழியே வீட்டுக்குள் பொத்தென்று விழுவதும் சர்வசாதாரணம். அம்மாதிரி சமயங்களில் அவற்றை நெருங்குவது ஆபத்து. எனவே அமைதியாகக் கதவைத் திறந்து விட்டு அவை வெளியேற வழி அமைத்துக்கொடுத்தல் வேண்டும். இவை மரவாழ் உயிரினங்கள் என்பதால் மரங்கள் மூலம் வீடுகளின் மேற்கூரைகளை எளிதில் அடைந்துவிடுகின்றன. இவை வீடுகளைத் தஞ்சம் புகுவதைத் தடுக்கவிரும்பினால் வீட்டையொட்டி உள்ள மரக்கிளைகளை அகற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
என்ன செய்தாலும் போஸம்கள் தங்கள் வீட்டு வளாகத்தை விட்டுப் போவதாய்க் காணோம் என்று ஆயாசப்படுபவர்களுக்கு ஒரு ஆலோசனையாய் போஸம் பெட்டிகள் பற்றி அறிவுறுத்தப்படுகின்றது. இப்பெட்டிகளை மரங்களை ஒட்டி அமைத்து போஸம்களுக்கு புதிய குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வீடுகளின் கூரைகள் பாதுகாக்கப்படுகின்றனவாம். வீட்டின் மேற்கூரைகளில் மின்விளக்குப் பொருத்துவதும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாய் சில நாட்களுக்கு எரியவிடுவதும் மற்றொரு ஆலோசனை.
குடியிருப்புகளில் தொல்லை தருவதாகவும், இரவில் தூங்கமுடியாமல் கூரைகளில் கொட்டமடிப்பதாகவும் புகார் செய்யப்பட்டால், இவற்றைப் பிடிக்க சட்டபூர்வமான நிறுவனங்கள் நாடுமுழுவதிலும் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் போஸம்களைப் பிடிப்பதோடு அவற்றால் பாதிக்கப்பட்ட கூரைகளையும் சீராக்கித் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் போஸம்களை என்ன செய்வார்கள்? எதுவும் செய்யமாட்டார்கள். அவற்றைப் பிடித்த அன்று மாலையே பிடித்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் விட்டுவிடவேண்டும் என்பது ஆஸ்திரேலிய வனத்துறையின் பொதுவிதி. தெற்கு ஆஸ்திரேலியாவிலோ அவை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்பதால் அரசின் அனுமதியின்றி வீடுகளில் பொறிவைத்து போஸம்களைப் பிடித்தலும் கூடாது.
ஆஸ்திரேலியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நியூசிலாந்தில் இவை தொல்லைதரும் பிராணியாக அறிவிக்கப்பட்டு பெருமளவில் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவிலும் 1996 வரை வருடத்துக்கு இரண்டு மில்லியன் போஸம்கள் அவற்றின் ரோமங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. தூரிகை வால் போஸத்தின் ரோமத்தோடு மிக நேர்த்தியான ஆட்டுரோமத்தையும் இழைத்து நெய்யப்பட்ட மேலாடைகள், படுக்கை விரிப்புகள், கையுறைகள் போன்றவை மிகப்பெரும் அளவில் விற்பனையாகியுள்ளன. ஆனால் தற்போது போஸம்களைத் துன்புறுத்துவதோ, கொல்வதோ ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். நியூ சௌத் வேல்ஸ் விதிகளின்படி குற்றவாளிக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது 22,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
போஸம்களின் இந்த இரவு வாழ்க்கைக்குக் காரணம் என்ன தெரியுமா?
பூர்வகுடிகளின் கனவுக்காலக் கதையொன்று சொல்கிறது. பூர்வகுடி சகோதரர்கள் இருவர் மீன்பிடித்தலில் தேர்ச்சி பெற்றவர்கள். எத்தனைக் காலம்தான் கரையிலேயே இருந்துகொண்டு மீன் பிடிப்பது? போதுமான மீன்களும் சிக்கவில்லை என்பதால் ஒரு யோசனை செய்தனர். ஒரு பெரிய மரத்தைக் கூரிய கல்லால் குடைந்து படகுபோலாக்கி அதில் கடலில் சற்றுதூரம் பயணித்துச் சென்று மீன் பிடிக்கத் தொடங்கினர். ஓரளவு பலன் கிடைத்தது. வெயில் அதிகமாக இருந்ததால் கரையிலிருந்து மரக்கிளை ஒன்றை படகின் ஓரத்தில் நிழலுக்காக கட்டிவைத்தனர். அது பாய்மரம் போல செயல்பட்டு படகை வேகமாக இழுத்துச்சென்றது. நிறைய மீன்கள் பிடித்து தங்கள் இருப்பிடம் திரும்பவும் உதவியது. அவர்களுக்கும் அவர்களுடைய ஊரார்க்கும் போக ஏராளமாய் மீன்கள் மிஞ்சின. மிஞ்சிய மீன்களை அருகிலிருந்த குட்டையில் விட்டு சேமித்தனர். மீன் கிடைக்காத காலத்தில் பயன்படுத்திக்கொள்ள எண்ணியிருந்தனர்.
அப்போது ஒரு புதியவன் அவ்வூருக்கு வந்தான். அவன் மீன்கள் இருக்கும் குட்டையைப் பார்த்தான். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் தனக்கு வேண்டிய மீன்களை அதிலிருந்தே திருடியெடுத்துத் தின்றான். மீன்கள் குறைந்துவருவதை ஊர்மக்கள் கவனித்தனர். திருடன் யாரென்று அறிய மறைந்து காத்திருந்தனர். வழக்கம்போல புதியவன், மீன்களைத் திருடுவதற்கு இரவுநேரத்தில் வந்தான். மக்கள் அவனைக் கண்டறிந்து துரத்த ஆரம்பித்தனர். நினைத்தால் நினைத்த உருவை அடையும் மந்திரமொன்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அதைப்பயன்படுத்தி ஒரு விலங்காக மாறினான். அவன் கையிலிருந்த ஈட்டியை வாலாக்கி அதன் உதவியுடன் வேகமான மரமேறிக் கொண்டான். மனிதர்களால் ஏறமுடியாத செங்குத்தான வழுவழுப்பான மரங்களிலும் அவனால் ஏற முடிந்தது. பார்த்துக் கொண்டிருந்த ஊர்மக்கள் தாங்களும் ஒரு மந்திரத்தைப் பயன்படுத்தி அவன் மீண்டும் மனித உரு எடுக்காமல் அதே விலங்கு உருவிலேயே இருக்குமாறு சபித்துவிட்டனர். அன்றுமுதல் அவனும் அவன் வம்சமும் போஸம்களாகி, இரவில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இரைதேடி வாழும் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனராம்.