SBS தமிழ்

ஆஸ்திரேலிய சின்னம் ஈம்யு பறவை பற்றிய அரிய தகவல்கள்

SBS தமிழ்

Emu

Source: Geetha Mathivanan


Published 1 December 2019 at 10:04pm
By Raysel
Source: SBS

உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது பெரிய பறவை ஈம்யு. கங்காருவைப்போலவே ஈம்யு பறவையும் ஆஸ்திரேலியாவின் தேசிய, கலாசார அடையாளங்களுள் முக்கியமானது. இது ஆஸ்திரேலிய அரசின் முத்திரையில் இடம்பெற்றிருப்பதோடு நாணயங்களிலும், தபால் தலைகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய ஈம்யு பறவை குறித்த அரிய தகவல்களைத் தொகுத்து “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சியாக்கிப் படைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.


Published 1 December 2019 at 10:04pm
By Raysel
Source: SBS


ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் பல பாரம்பரியக் கதைகளோடும், கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது ஈம்யு. டைனோசார் காலத்திலிருந்தே வாழ்ந்துவரும் இந்தப் பறவையினத்தில்  மூன்று பிரிவுகள் இருந்திருக்கின்றன. இரண்டு பிரிவுகள் அழிந்துபோய், இப்போது எஞ்சியிருப்பது இது ஒன்றுதான்.

பொதுவாக ஆண் ஈம்யுவை விடவும் பெண் ஈம்யு அளவில் பெரியதாக இருக்கும். பறக்க இயலாவிட்டாலும் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. ஈம்யுவுக்கென்று ஒரு குறிப்பிட்ட வாழும் எல்லை கிடையாது. நாடோடியைப் போல உணவு கிடைக்குமிடத்தில் திரிந்து வாழக்கூடியது. இது புல், இலை,தழை, பூச்சிகள் போன்றவற்றைத் தின்னும். அதே சமயம் உணவில்லாமலும் பல வாரங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும். உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பை உடலில் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. தண்ணீருக்காகவும் தவிக்காது. ஆனால் கிடைக்கும்போது தாராளமாய்க் குடித்துக்கொள்ளும். ஈம்யு தன் உணவோடு சின்ன சின்னக் கற்கள், கண்ணாடித்துண்டுகள், இரும்புத்துண்டு என்று கண்ணில் படுவதையெல்லாம் முழுங்கிவிடும். அவை அதன் இரைப்பையில் தங்கி உணவைச் செரிக்கவைக்க உதவுகின்றனவாம்.

ஈம்யுவின் கண்கள் மிகச்சிறியவை. ஒட்டகத்தைப் போலவே இதற்கும் சிமிட்ட ஒன்றும் தூசுகளினின்று பாதுகாக்க ஒன்றுமாய் இரண்டு சோடி இமைகள் உண்டு. ஈம்யுவுக்கு கூர்மையான கண்பார்வையும் செவித்திறனும் இருப்பதால் வரவிருக்கும் ஆபத்தைத் தொலைவிலேயே கண்டுணரமுடியும். உடனே தன் பாதுகாப்புக்காக ஆயத்தமாகிடும். இதனுடைய இறக்கைகளும் இது வாழும் சூழலுக்கேற்றபடி அமைந்துள்ளன. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் ஈம்யுவின் இறக்கைகள் இதனுடைய உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன. அதனால்தான்  ஈம்யுவால் நல்ல வெயில் நேரத்திலும் சுறுசுறுப்பாக இயங்கமுடிகிறது. ஈம்யு பெரும்பாலான நேரம் தன் இறக்கையைக் கோதிக்கொண்டே இருக்கும். ஈம்யுவுக்கு நன்றாக நீந்தத் தெரியும் என்றாலும் தண்ணீரில் சும்மா உட்கார்ந்திருப்பதை அதிகம் விரும்பும். குழந்தைகள் போல் தண்ணீரிலும் சேற்றிலும் விளையாடும்.

Advertisement
ஈம்யு தூங்கும்போது கால்களை மடக்கி அதன்மேல் அமர்ந்து, தன்னுடைய நீண்ட கழுத்தை இறக்கைக்குள் நுழைத்துத் தூங்கும். அப்போது தூரத்திலிருந்து பார்த்தால் சிறு மணற்குன்று போல தெரியும். தூங்கும்போது எதிரிகள் கவனத்தில் படாமலிருக்க இப்படி ஒரு உபாயம்.

பயிர்களை அச்சுறுத்தும் எலிகள், வெட்டுக்கிளிகள், கம்பளிப்பூச்சிகள் போன்றவற்றைத் தின்று விவசாயிகளுக்கு நன்மை புரியும் ஈம்யு பறவைகளே பல சமயம் தங்களையறியாமல் நாம் விரும்பாதவற்றையும் செய்துவிடுகின்றன. ஈம்யுக்கள் கள்ளிச்செடியின் பழங்களைத் தின்று போகுமிடங்களிலெல்லாம் அவற்றின் விதைகளை எச்சத்தின் மூலம் பரப்ப, விளைநிலங்களில் எல்லாம் தேவையில்லாத அச்செடி வளர்ந்து பெருந்தொந்தரவாகிவிட்டதாம்.  ஆஸ்திரேலிய அரசால் 1930 – 1940 களில் மிகப்பெரிய அளவில் ஈம்யு மீதான தொடர்வேட்டைகள் நடத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாம்.

ஆண் ஈம்யு பறவைகள் பன்றியைப் போல் உறுமல் ஒலி எழுப்பும். பெண்பறவைகள் பெரிதாய் முழங்கும்.  இவை மே, ஜூன் மாதங்களில் முட்டையிடும். இவற்றின் கூடு ஒன்றரை மீட்டர் அகலம் வரை இருக்கும். கூட்டைக் கட்டுவதும் முட்டைகளை அடைகாப்பதும் குஞ்சுகளைப் பராமரிப்பதும் ஆண்பறவைதான். பெண்பறவை பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும். பொதுவாக ஒரு ஈட்டுக்கு இருபது முட்டைகள் வரை இடும். முட்டைகள் கரும்பச்சை நிறத்திலும், ஒவ்வொன்றும் 700 முதல் 900 கிராம் வரையிலான எடையோடும் இருக்கும். ஒரு ஈம்யு முட்டை பன்னிரண்டு கோழிமுட்டைகளின் எடைக்கு சமமாக இருக்கும்.

அடைகாக்கும்போது ஆண்பறவை  உணவு எதுவும் உட்கொள்ளாது. விடிகாலைப் பனித்துளிகளை அருந்தி தொண்டையை நனைத்துக்கொள்ளும். உணவுண்ணாமல் உடலில் சேமித்துவைக்கப்பட்டுள்ள கொழுப்பும் கரைந்துவிடும்.  ஆனாலும் மிகவும் சிரத்தையுடன் அடைகாக்கும். ஒருநாளைக்கு பத்துமுறை எழுந்து நின்று முட்டைகளைத் திருப்பிவிட்டு சரியான வெப்பத்தைப் பேணும். எட்டுவாரங்கள் கழித்து பொரிந்துவரும் குஞ்சுகள்  ஒரு அடி உயரத்தில் உடல் முழுக்க கறுப்பு வெள்ளை வரிகளுடன் இருக்கும். மூன்று மாதங்களுக்குப் பின் மெல்ல மெல்ல நிறம் மாறி முழுவளர்ச்சியடையும்.

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஈம்யு, அமெரிக்காவின் உயிரியல் பூங்காவுக்கென அங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தில் முக்கியப்பங்கு வகிப்பது மறுக்கமுடியாத உண்மை. உலகச்சந்தையில் ஒரு முதலீடாகவே ஈம்யு கணிக்கப்படுகிறது. ஈம்யு முட்டையோடுகள் அலங்காரப்பொருட்கள் செய்யவும் அணிகலன்கள் செய்யவும் பயன்படுகின்றன. ஈம்யுவின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் ஈம்யு எண்ணெய் நுண்ணுயிர்க்கொல்லியாகவும், தீக்காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. பல சரும நிவாரண மற்றும் சரும அழகு சாதனங்களில் ஈம்யு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஈம்யுவின் தோல், காலணிகள், கைப்பைகள் மற்றும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் தோல் எந்தவிதமான சாயத்தையும் ஏற்கும் திறன் கொண்டிருப்பதால் தோல்சந்தையிலும் ஆடை வடிவமைப்பாளர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்னதான் விதவிதமாக விளம்பரப்படுத்தினாலும் இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் மோசடி வணிகர்களால் ஈமு பண்ணை என்னும் முயற்சி பெரும் சரிவையும் நஷ்டத்தையும் சந்தித்துள்ளது.

எட்டுகோடி வருடங்களுக்கு முன்பிருந்தே ஆஸ்திரேலிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் பறவையினமான இவை பூர்வகுடி மக்களால் உணவுக்காகவும் உடைக்காகவும் வேட்டையாடப்பட்டுவந்தன. அவற்றின் கொழுப்பு, வலிநிவாரணியாக பயன்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் ஒருவகை காவிமண்ணுடன் ஈம்யு எண்ணெய் கலந்து உடல்களில் ஓவியம் தீட்டி அலங்கரித்துக்கொண்டு பாரம்பரிய விழாக்களைக் கொண்டாடுவது பழங்கால பூர்வகுடி மக்களின் வழக்கம். அவர்களுடைய கொண்டாட்டங்களுள் ஈம்யு நடனத்துக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பூர்வகுடி மக்களின் புராணக்கதைகளோடு பெரும் தொடர்புடைய ஈம்யுவுக்கு மதிப்பளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய அரசு, மலைகள், ஆறுகள், வாய்க்கால்கள், ஊர்கள் போன்று கிட்டத்தட்ட அறுநூறு இடங்களுக்கு ஈம்யுவின் பெயரை வைத்து சிறப்பித்துள்ளது.

ஈம்யு எப்படி உருவானதென்ற பூர்வகுடி கதை என்னவென்று பார்ப்போமா?

முன்னொரு காலத்தில் கந்த்ஜி (Gandji காந்திஜி அல்ல) என்பவனும் வுர்ப்பன் (Wurrpan) என்பவனும் அடுத்தடுத்த வீடுகளில் ஒற்றுமையாக வசித்துவந்தார்கள். கிடைப்பதை இரு குடும்பமும் பகிர்ந்துண்டு வாழ்ந்துவந்தன. ஒருநாள் கந்த்ஜியும் அவனது பிள்ளைகளும் மீன்பிடிக்கச் சென்றார்கள். அன்று நல்ல திருக்கைமீன் வேட்டை. கிடைத்த மீன்களை வெட்டி சுத்தம் செய்த கந்த்ஜி நல்ல மீன் துண்டுகளைத் தன் குடும்பத்துக்கும் கழித்துக்கட்டியவற்றை வுர்ப்பன் குடும்பத்துக்குமாகப் பிரித்து ஓலையில் கட்டி எடுத்துவந்து கொடுத்தான். அதைத் தெரிந்துகொண்டு ஆத்திரமடைந்த வுர்ப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். உனக்குத் தேவையென்றால் நீயே போய் மீன் பிடித்திருக்கவேண்டும் என்று பதிலுக்கு வாதிட்டான் கந்த்ஜி. பேச்சு முற்றி கைகலப்பானது. 

ஒரு கட்டத்தில் கந்த்ஜி அடுப்பிலிருந்த நெருப்புத்துண்டங்களை அள்ளி வுர்ப்பனின் மேல் வீசினான். வுர்ப்பன் பதிலுக்கு ஒரு பெரிய கூழாங்கல்லை எடுத்து கந்த்ஜியின் மேல் எறிந்தான். கந்த்ஜி பயத்தால் அங்குமிங்கும் பதறிக் குதிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக ஜபிரு என்னும் பறவையாக மாறிப்போனான். அப்போது அவனுக்கு அலகு கிடையாது. அவன் தப்பித்துப் பறந்துபோவதைப் பார்த்த வுர்ப்பன் அவனை நோக்கி ஒரு ஈட்டியை எறிந்தான். ஜபிருவின் உடலில் பாய்ந்த ஈட்டி அங்கேயே தங்கி பின்னாளில் அப்பறவையின் அலகாகிப் போனது.

கந்த்ஜி திரும்பிவந்து பழிவாங்குவானோ என்ற பயத்துடன் வுர்ப்பனும் அவன் பிள்ளைகளும் அவசர அவசரமாக வேற்றூருக்குப் புறப்பட்டனர். வேகவேகமாய் ஓடிக்கொண்டிருந்த அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஈம்யு பறவைகளாக மாறிப்போயினர். கந்த்ஜி எறிந்த நெருப்புத்துண்டங்கள் கருக்கியதால்தான் அவற்றின் இறக்கைகள் சாம்பல் நிறமாகவுள்ளதாம். அது மட்டுமல்ல… கந்த்ஜி தாக்கிய கல்லின் வடிவத்திலேயே ஈம்யுக்கள் முட்டையிடத் தொடங்கினவாம்.


Share