ஒரு புதிய நாட்டில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று நண்பர்களை உருவாக்குவது.
இயற்கையாகவே, நாங்கள் ஒரே மாதிரியான கலாச்சார பின்னணியில் உள்ளவர்களுடன் நட்பு ரீதியான தொடர்புகளை உருவாக்க முனைகிறோம்.
ஆனால் வெவ்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்களுடன் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். பல்கலாச்சார பின்னணிகொண்டவர்களுடனான நட்பு உங்களுக்கு என்னென்ன நன்மைகளைக் கொண்டுவரும் என்று பார்ப்போம்.
புலம்பெயர்வு அனுபவம் உங்களை தனிமையாக உணரவைக்கலாம். எனவே நாம் ஆதரவு மற்றும் நட்புக்காக நமது கலாச்சார பின்னணிகொண்ட நபர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறோம்.
எவ்வாறாயினும், நமது சொந்த கலாச்சார குமிழிக்கு வெளியே அடியெடுத்து வைப்பது நம்மை வெவ்வேறு கண்ணோட்டங்களுக்கு வெளிப்படுத்துகிறது மற்றும் இந்நாட்டில் நாமும் ஒருவர் என்ற உணர்வை பலப்படுத்துகிறது.

கலாச்சாரம் சார்ந்த நட்புகள் நமது பொதுவான தன்மைகளையும் எடுத்துக்காட்டுகின்றன என்கிறார் நட்பு மற்றும் புலம்பெயர்வு தொடர்பிலான நிபுணர் Dr Harriet Westcott.
எங்களைப் போலவே சிந்திக்கும் நபர்களிடம் நாங்கள் ஆறுதல் அடைகிறோம் என்றும் ஆனால் அதில் தீமைகளும் உள்ளன எனவும் RMIT பல்கலைக்கழகத்தின் பல்கலாச்சார தகவல் தொடர்பு நிபுணர் பேராசிரியர் Catherine Gomes கூறுகிறார்.
குறிப்பாக நாம் பழகும் நபருக்குத் தெரிந்தது மட்டும்தான் நமக்கும் தெரியவர வாய்ப்பிருப்பதால் நமது வட்டத்தைத் தாண்டி வெளியேயுள்ள விடயங்களை அறிந்துகொள்ளமுடியாத சூழல் ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார்.
நீங்கள் ஒரு முக்கியமான அல்லது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதைக் கண்டறிந்து உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? எப்படி உதவி நாடுவது என்று உங்களுக்குத் தெரியுமா?
இப்படியான சந்தர்ப்பங்களில் பல்காலாச்சார பின்னணிகொண்டவர்களின் நட்பு நமக்குக் கைகொடுக்கும் என பேராசிரியர் Catherine Gomes கூறுகிறார். பல்காலாச்சார பின்னணிகொண்டவர்களுடன் நட்புக்கொள்வதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தகவல் பரிமாற்றம் ஆகும் என அவர் விளக்குகிறார்.

சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே உள்ள பல நண்பர்களை உருவாக்கும்போது culture shock எனப்படுகின்ற கலாச்சார ரீதியான அதிர்ச்சியை குறைவாக அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், பல சீன சர்வதேச மாணவர்கள் சீன வட்டத்திற்கு வெளியே தங்களுக்கு நண்பர்கள் இல்லை என்று கூறுவதை தான் அவதானித்திருப்பதாக பேராசிரியர் Catherine Gomes சொல்கிறார். அவர்களின் நண்பர்களின் நண்பர்கள் கூட சீனர்கள் என்பதால் அவர்கள் இந்த தொடர் சிக்கலில் சிக்கியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
புதிதாக வரும் நபர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் அவர்களை இந்நாட்டிற்கு வரவேற்பதன் முக்கியத்துவத்தையும் ஏற்கனவே இங்கு வாழ்பவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும்.
புதிதாக இங்கு வந்தவர்களின் இடத்திலிருந்து சிந்தித்துப்பார்த்து திறந்த மனப்பான்மையையுடன் அவர்களுடன் நட்பாக இருப்பது முக்கியமென நட்பு மற்றும் புலம்பெயர்வு தொடர்பிலான நிபுணர் Dr Harriet Westcott வலியுறுத்துகிறார்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் கூட தமது கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களுடனான நட்புக்களைக் கொண்டிருக்கக்கூடும்.
முன்னாள் ரஷ்ய சர்வதேச மாணவர் Max Tkachenko என்பவர் தான் இங்கே வந்தபோது இந்த கடுமையான யதார்த்தத்தை கவனித்ததாக சொல்கிறார்.

கலாச்சார குமிழிக்கு வெளியே நட்பைத் தேட Max Tkachenko ஐத் தூண்டியது எது?
அர்த்தமுள்ள உறவுகள் என்று வரும்போது, ஒரு நபரின் மதம் அல்லது இனத்தைப் பொருட்படுத்தாமல் அந்த உறவுகளை உருவாக்க வேண்டுமென்பதை உணர்ந்தமையே தனது தூண்டுதலுக்கான காரணம் என அவர் விளக்குகிறார்.
இந்நிலையில் நமது இன, கலாச்சார அல்லது மத வட்டங்களுக்கு வெளியே உள்ள நட்புகள், சொந்தம் என்ற உணர்வை அனுபவிக்க பல்வேறு வழிகளைக் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் Catherine Gomes.
வெவ்வேறு கலாச்சாரத்திற்கு இடையேயான நட்புகள் மாற்று சிந்தனை மற்றும் செயல் முறைகளை நமக்குக் கற்பிக்கின்றன.
சிங்கப்பூரில் பிறந்த பேராசிரியர் Catherine Gomes, ஆஸ்திரேலியாவிற்கு வந்தவுடன், வேறுபட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வதில் அதிக பலன்களைக் கண்டதாகவும் சமூகத்தில் பாதுகாப்பாக உணர்ந்த அதேநேரம் பரந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவியதாகவும் சொல்கிறார்.
நாம் சிக்கியிருக்கும் கலாச்சார குமிழியைத் திறக்கும்போது சிலர் பயப்படுவதாகவும் மற்றும் அதைச் செய்வதில் உள்ள சிரமம் பற்றி பேசுகிறார்கள் எனவும் Max Tkachenko கூறுகிறார். ஆனால் நட்பின் வழியில் பயம் வரக்கூடாது என அவர் ஊக்குவிக்கிறார். பயப்படுவதால் நீங்கள் இழக்கப் போகும் விடயங்கள் பல என Max Tkachenko சுட்டிக்காட்டுகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






