இந்தியாவின் அதி உயர் பதவி அல்லது பட்டம் என்று பார்க்கப்படும் இந்திய ஆட்சியர் பணி IAS தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார் பூரண சுந்தரி அவர்கள்.
மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன்- ஆவுடை தேவி தம்பதியினரின் மகள். இவர்களின் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளிதான் பூரண சுந்தரி.
முழுமையாக பார்வை இழந்த நிலையிலும், பல தேர்வுகளை எழுதி வெற்றிபெற்றாலும், தனது ஒரே இலக்கு IAS மட்டுமே என்று குறிப்பிடுகிறார் பூரணசுந்தரி. தற்போது இந்தியா முழுமைக்கும் வெளியிப்பிடப்பட்ட இடங்களில் 296 இடத்தில் வந்து வெற்றி சாதனை புரிந்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடியுரிமை பணி தேர்வு என 20-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எழுதியுள்ளார்.கடந்த 2018-ம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் 4-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிகளுக்கான தேர்வை எழுதினார். இப்போது வெற்றி அவரை சேர்ந்துள்ளது.
இந்த வெற்றி இலக்கை அடைய எண்ணற்ற சவால்களை சந்தித்தாலும் தனது பெற்றோரின் பேருதவி, மற்றும் பலரும் பாடங்களை படித்து காண்பித்தது, தேர்விற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கிப் பயின்றபோது அங்குள்ள நண்பர்கள் கொடுத்த உற்சாகம் என்று பலரை நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

Source: Supplied
சிறு வயதிலிருந்தே ஒரு மாற்றுத்திறனாளியாக கல்வி கற்பதில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள் இருந்தபோதிலும், தான் ஒருபோதும் ஒரு பார்வை இழந்த பெண் என்ற மனநிலைக்கு ஆட்பட்டதில்லை என்று மனம் திறந்து பேசுகிறார் பூரண சுந்தரி.
தன்மீதான தனிமனிதர்களின் அல்லது சமூகத்தின் பரிதாபப்பார்வையை அவர் வெறுக்கிறார்.
பூரண சுந்தரியின் 5 வயதில் அவரது பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்தார். இருந்தபோதிலும் தன்னம்பிக்கையோடு தனது கல்வியைத் தொடர வேண்டும் என்று எண்ணி ஒன்றாம் வகுப்பிலிருந்தே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுவந்தார் என்று அவரின் பெற்றோர் நம்மிடம் கூறினர்.
அரசு பணியில் அவள் அமரவேண்டும் என்று முதலில் நினைத்தாலும் மகள் பூரணசுந்தரி IAS தேர்வுக்கு சென்றே தீருவேன் என்றதும், தனது கனவும் அதுவாகவே இருந்தது என்று பெருமைபொங்க கூறுகிறார் தந்தையான முருகேசன் அவர்கள்.

Source: Supplied

Source: Supplied