வளர்ந்தநாட்டில் வாழும் இவர்கள் வீடுகளின் பரிதாபநிலை ஏன்?

Appalling housing conditions in Northern Territory

Appalling housing conditions in Northern Territory Source: SBS Tamil

பல பூர்வீக குடி மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் வாழும் வீடுகளின் நிலை பரிதாபகராமாக இருக்கிறது. இது குறித்த நிகழ்ச்சியைப் படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.


எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்று சொல்வார்கள். அந்த எலி வளை என்றாலும் அது வசிக்க உகந்ததாக இருக்க வேண்டுமா, இல்லையா?

பூர்வீக குடி மக்கள் வாழும் வீடுகள் சில வளரும் நாடுகளில் வசிப்பவர்களின் குப்பங்களை விட மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று பல ஆர்வலர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். 

ஒரு உதாரணமாக, Alice Springs அருகே வாழும் பூர்வகுடி மக்கள், தங்கள் சமூகத்தில் உள்ள வீடுகளின் மோசமான நிலை குறித்து 2016 ஆம் ஆண்டில் சட்ட நடவடிக்கை ஒன்றைத் தொடங்கினார்கள்.  இது குறித்து விசாரித்த NT Civil and Administrative Tribunal என்ற தீர்ப்பாயம் அந்த வழக்குத் தொடுத்த 70 பேரில், நான்கு பேரின் குடியிருப்புகள், சரியாகப் பராமரிக்காமல் விடப்பட்டது என்றும், பழுதுபார்ப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. 

அந்த நால்வரில் ஒருவர் Enid Young. 70 வயதான Enid Young வீட்டில் மின்விசிறிகள் இல்லை, air-conditioning unit பழுதடைந்துள்ளது மட்டுமின்றி, அவரது வீட்டு யன்னல்களைத் திறக்கவும் முடியாது.

30,000 டொலர்கள் வாடகை பாக்கி என்று கூறப்பட்டிருந்தது.  அது பின்னர் 3,000 டொலர்களாக குறைக்கப்பட்டது.  ஆனால், விசாரணையின் போது,  Enid Young எந்தவொரு வாடகையும் செலுத்த வேண்டியதில்லை என்று தெரியவந்தது.

இந்த முடிவைத் தொடர்ந்து, மற்றைய 66 குடியிருப்பாளர்களின் வழக்குகளுக்கும் அவர்களுக்கு சார்பான தீர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நான்கு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், Santa Teresa என்ற இடத்தில் வாழும் பூர்வீக குடி மக்கள் மோசமான வீட்டு நிலைமைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள்.

NT Civil and Administrative Tribunal என்ற தீர்ப்பாயம் ஆரம்பத்தில் வழங்கிய தீர்ப்பை Northern Territory உச்ச நீதிமன்றம் திருத்தி, மேலும் இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  தீர்ப்பாயம் 100 டொலர்கள் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை மாற்றி, 10,000 டொலர்கள் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம், இந்த வருடம் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனிநபர், குடும்பம் மற்றும் சமூகங்களின் நல்வாழ்விற்குப் பாதுகாப்பான வீடுகள் மிக அவசியம் என்றும், பாதுகாப்பு மற்றும் திடத்தன்மையை மக்களிடையே உணரவைக்க, பொருத்தமான வீட்டு வசதி ஒரு பரந்த பங்களிப்பு வழங்குகிறது என்றும் Northern Territory வெளியிட்டுள்ள NORTHERN TERRITORY HOUSING STRATEGY 2020 – 2025:  2020 முதல் 2025 வரையான NORTHERN TERRITORY அரசின் வீட்டு வசதிகள் குறித்த அறிக்கையில் வீட்டு வசதி அமைச்சர் Gerry McCarthy குறிப்பிடுகிறார்.  சமூக மற்றும் பொருளாதார விளைவுகளின் வரம்புகளையும் மக்களை மற்றவர்களுடன் இணைப்பதற்கான அடித்தளத்தை வழங்குவதாகவும் அவர்கள் சமூகத்தில் பங்கேற்க, பொருத்தமான வீட்டுவசதி அவசியம் என்றும் நல்ல உடல் மற்றும் மன வளத்திற்கு நல்ல வீடுகள் அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் சொல்லியுள்ளார்.

இவை எல்லாம் எழுத்திலும் பேச்சிலும் தான் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

Northern Territoryயின் மிக ஏழ்மையான, மற்றும் மிகவும் பதற்றமான பூர்வீக குடி சமூகங்களில் ஒன்றான Wadeyeயில் வாழும் Gloria Chula என்பவர், மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில், மேலும் 16 பேருடன் கொண்ட வசித்து வருகிறார்.

38 வயதான இவர் ஒரு சுகாதார சேவைகளில் தொழில் புரிகிறார்.  தனது கணவர், குழந்தை மற்றும் அவரது தாயுடன் 2011 இல் குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.  பல பூர்வீக குடி குடும்பங்களில் நடப்பதைப் போலவே, அவர் வீட்டிலும் மற்றவர்கள் குடியேற ஆரம்பித்ததால், இப்போது அவரது வீடு நிரம்பியுள்ளது.

"ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகளுக்குக் குளிப்பாட்டி நாம் பாடசாலைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர் SBS செய்திப்பிரிவினரிடம் கூறியுள்ளார்.

அரசு வழங்கும் வீட்டு வசதிக்காக விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருப்பதாக அவர் சொன்னார்.

Wadeye பகுதி, நாட்டில் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும் அங்கு வீட்டுவசதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்றும் கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் தொகுக்கப்பட்ட தரவுகள் சொல்கின்றன.

பல பூர்வீக குடி மக்கள் வாழும் பிரதேசங்களின் நிலையும் இதுதான் என்பது கவலைக்குரிய விடயம்.

நிலமை இவ்வாறு இருக்க, COVID-19 கொள்ளை நோய் காலத்தில், நிலமை நாடு முழுவதும் மோசமாகிறது.  அவசர நிலை நிலவுவதால், அவ் வேளையில், காவல்துறை செயல்படும் முறை குறித்து, சட்ட மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

Victoria மாநிலத்தில், COVID-19 ஐத் தடுக்கும் செயற்பாட்டில் பூர்வீக குடிமக்கள் வாழும் வீடுகள் தேவையில்லாமல் காவல்துறையால் சோதனையிடப்படுகின்றன என்று அவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

New South Wales மாநிலத்தில், சிட்னி நகரில் பூர்வீக குடி மக்களின் வீட்டு வசதிகளை சீரமைக்க ஒரு புதிய செயல்முறை அறிமுகப்படுத்தபட்டிருக்கிறது,  அது குறித்துப் பேசிய, Aboriginal Medical Services இன் தலமை நிர்வாகி LaVerne Bellear, அவர்கள் நடந்து வந்த கடினமான பாதையை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்து செயல்பட வேண்டும் என்று கோரினார்.

பூர்வீக குடி மக்களின் நிலையை மாற்றுவதற்காக Close the Gap என்ற செயல் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன் மூலம் வீட்டு வசதிகளும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand