இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. SBS தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சியாகக் கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகம் பிறக்கலாம். வழமையாக July மாதத்தில் அல்லவா NAIDOC வாரம் அவதானிக்கப்படும்... ஏன் November மாதத்தில் என்ற கேள்விக்கான பதில் எம் எல்லோரையும் இந்த வருடம் ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் தான். ஒப்பீட்டளவில் மற்றைய ஆஸ்திரேலியர்களை விட, பூர்வீக பின்னணி கொண்டவர்கள் நீரிழிவு நோய், பல்வேறு பட்ட சுவாச நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற பல வியாதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனை மனதில் கொண்டு, NAIDOC கொண்டாடப்படும் வாரம் இந்த மாதம் வரை பிற்போடப்பட்டது.
NAIDOC என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.
1920களுக்கு முன், பூர்வீக மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த குழுக்கள், ஆஸ்திரேலிய தினம் என்று கொண்டாடப்படும் ஜனவரி 26ம் நாளை, அதன் கொண்டாட்டங்களைப் புறக்கணித்தார்கள். 1920களில் இந்த எதிர்ப்பலைகள், பரந்த ஆஸ்திரேலிய மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்தக் குழுக்கள் உணர்ந்தார்கள். அதை உணர வைக்கவேண்டும் என்பதற்காகப் பல அமைப்புகள் உருவெடுக்க ஆரம்பித்தன.
குறிப்பாக, 1924ம் ஆண்டில், Australian Aborigines Progressive Association, 1932ம் ஆண்டில், Australian Aborigines League என்று இரு இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவர்களது செயற்பாட்டிற்குக் காவல்துறையினர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்ததனால் இவை செயலிழந்து போயின. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில், ஆஸ்திரேலிய பூர்வீக மக்களுக்குத் தனி ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என்று, 1935ம் ஆண்டு, Australian Aborigines League ஐ ஆரம்பித்த William Cooper, அப்போதைய பிரித்தானிய மன்னரான ஐந்தாவது George இடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்தக் கோரிக்கை ஆஸ்திரேலிய அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்று நிராகரிக்கப்பட்டது.
1938ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தினத்தன்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் சிட்னி தெருக்களில் அணிவகுத்துச் சென்றது. உலகின் முதல் பெரிய மனித உரிமைகள் கூட்டத்தில் அதுவும் ஒன்று. அன்றைய தினத்தை, அது இரங்கல் தினம் Day of Mourning என நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்தார்கள். அன்றிலிருந்து ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ம் நாளை, இரங்கல் தினம் என்று பூர்வீக மக்கள் அவதானித்தார்கள்.
அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, பூர்வீக மக்கள் குறித்த தேசிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமரான Joseph Lyons இடம் William Cooper தலைமையிலான குழுவினர் முன்வைத்தனர். ஆனால் அப்படிக் கொள்கை வகுக்க ஆஸ்திரேலிய அரசிடம் அதிகாரம் இல்லை என்று அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
1940 முதல் 1955 வரை, ஆஸ்திரேலிய தினமான ஜனவரி 26ம் நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை, பூர்வீக மக்கள் நாள் - Aborigines Day என அறிவிக்கப்பட்டு, ஒரு இரங்கல் தினமாக அவதானிக்கப்பட்டு வந்தது... ஆனால், இந்த நாள் வெறும் ஒரு எதிர்ப்பு நாளாக மற்றவர் கருதக்கூடாது என்ற காரணத்தால், 1955 ஆம் ஆண்டு முதல், பூர்வீக மக்கள் நாள் ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுவதாக முடிவெடுக்கப்பட்டு, பூர்வீக குடிகளின் கலாச்சாரம் கொண்டாடப்படும் நாள் என்று மாற்றப்பட்டது.
இந்த முடிவை ஆஸ்திரேலிய மற்றும் மாநில, பிராந்திய அரசுகள், பல கிறிஸ்தவ மதக் குழுக்கள் என பலரும் ஆதரிக்க, National Aborigines Day Observance Committee, NADOC என்ற அமைப்பு உருப்பெற்றது. பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நினைவு கூரும் நாளாக கொண்டாடுவதற்கு ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிறு தினத்தை இந்த அமைப்பு தெரிந்தெடுத்தது.
பூர்வீக மக்களையும் மக்கள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வதா என்ற கருத்துக் கணிப்பில், 1967ம் ஆண்டு ஆஸ்திரேலியர்கள் பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பூர்வீக மக்கள் நலனுக்கான அமைச்சு 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
முதல் தடவையாக முற்று முழுதாக பூர்வீக மக்களைக் கொண்ட NADOC குழு, 1974ம் ஆண்டு, உருவானது. அதற்கடுத்த ஆண்டு, பூர்வீக மக்களின் வாழ்வைக் கொண்டாட ஒரு நாள் போதாது என்று, ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இரண்டாவது ஞாயிறு வரையிலான வாரத்தைக் கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பூர்வீக நாள் என்று கொண்டாடப்படும் நாளை தேசிய விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தக் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும், இன்று வரை அதற்கான அங்கீகாரம் ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படவில்லை.
Torres Strait தீவிலிருக்கும் மக்களையும் உள்ளடக்குவதற்காக, NADOC என்ற அமைப்பு, NAIDOC ஆக, National Aborigines and Islanders Day Observance Committee என 1991ம் ஆண்டு உருப்பெற்ற அமைப்பு, தற்போது John Paul Janke மற்றும் Patricia Conlon ஆகியோரது தலைமையில் இயங்கி வருகிறது.
பூர்வீக மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் தொன்மையான வரலாற்றையும் மற்றவர்களுக்கு உணர்த்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் NAIDOC வாரம் ஒரு சிறப்பான தலைப்பை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம், இந்த நாட்டு மண் எப்போதும் பூர்வீக குடி மக்களின் சொந்த மண் என்பதை வலியுறுத்த - “Always Was, Always Will Be” எப்போதும் இருந்தது, இனிமேலும் எப்போதும் இருக்கும் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இன்று - நவம்பர் 8ஆம் நாள் முதல் நவம்பர் 15ஆம் நாள் வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பல நிகழ்வுகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இணைய வழியாக இந்த வருடம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை என்று பூர்வீக மக்கள் விவகார அமைச்சர் Ken Wyatt கூறுகிறார்.
இதனை நாம் எப்படிக் கொண்டாடலாம் என்று யோசிப்பவர்களுக்கு சில சிந்தனைகள்.
- உங்கள் வகுப்பறை அல்லது பணியிடத்தைச் சுற்றி NAIDOC சுவரொட்டிகளை ஒட்டலாம். அந்த சுவரொட்டிகளை https://www.naidoc.org.au/resources/poster-gallery என்ற இணையத் தளத்திலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
- பெருமைப்படக்கூடிய, சாதனை படைத்த, பூர்வீக குடி மக்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
- பூர்வீக குடி இசைக் கலைஞர்களின் படைப்புகளைக் கேட்கலாம் அல்லது பூர்வீக குடி மக்கள் குறித்த திரைப்படங்களைப் பார்க்கலாம். அதற்கு SBS On Demand ஒரு நல்ல தளம் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை தானே!
- நண்பர்கள் ஒன்று கூடினால், பூர்வீக மக்கள் குறித்த உங்கள் சொந்த வினாடி வினாவை உருவாக்கி விளையாடலாம்.
- ஒரு பிரபலமான பூர்வீக குடி பின்னணி கொண்டவர் வரலாற்றைப் படிக்கலாம்.
- உங்கள் பகுதியில் வாழும் பூர்வீக குடி மக்களின் வரலாறு குறித்து ஆராயலாம்.
- பூர்வீக குடி மக்களின் கைவினைப் பொருட்கள் செய்யும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.
- கலையார்வம் கொண்டவர் நீங்கள் என்றால், ஒரு பூர்வீக பின்னணி கொண்ட கலைஞருடன் இணைந்து ஒரு கலைப்படைப்பைத் தயாரிக்கலாம்.
- உங்கள் பாடசாலை அல்லது உள்ளூர் சமூகத்தில், பூர்வீக மக்கள் கலை போட்டி ஒன்றை நடத்தலாம்.
- பூர்வீக மக்களைப் பற்றிய நூல்களை இணையத்தில் அல்லது நூலகத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
- முக்கியம் வாய்ந்த பூர்வீக மக்களின் தளங்களைப் பார்வையிடலாம்.
- பூர்வீக மக்களின் ஊர், அல்லது இடங்களின் பெயர்கள் மற்றும் சொற்களின் அர்த்தங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
இப்படி பூர்வீக மக்கள் குறித்து அறிந்து கொள்ள பல விடயங்களை நாம் செயல் படுத்தலாம்.
அத்துடன், நாடு முழுவதிலுமிருந்தும் பூர்வீக குடி மக்கள் மாற்றத்திற்கான யோசனைகள் பற்றி விவாதித்து பலவிதமான பார்வைகளை முன்வைத்துள்ள ‘இதயத்திலிருந்து வெளியாகும் உலுறு அறிக்கை’ - Uluru Statement from the Heart என்ற அறிக்கை, பன் மொழி பேசும் இன் நாட்டில் வாழும் அனைவரும் இது குறித்து அறிந்து கொள்ளவும் அது குறித்த கருத்துகளைப் பரிமாறவும், 63 மொழிகளில் SBS வெளியிட்டுள்ளது. அது குறித்தும் மேலும் அறிந்து கொள்ளலாம்.