புதியதொரு யுரேனியச் சுரங்கம் திறப்பதற்கான ஒப்புதலை, கேம்கோ எனும் கனடா நாட்டு தனியார் நிறுவனத்திற்கு, ஆஸ்திரேலியாவின் மத்திய அரசு வழங்கி உள்ளதன் மூலம், அணுசக்தி தொடர்பான விவாதங்கள் மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் மத்தியிலும் மீண்டும் எழத் தொடங்கி உள்ளது. இது தொடர்பில் நம்ம ஆஸ்திரேலியா நிகழ்ச்சியைப் படைக்கிறார் கோகுலன் அவர்கள்.
தேர்தலை அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாக, அதாவது ஏப்ரல் 10-ஆம் தேதி, புதியதொரு யுரேனியச் சுரங்கம் திறப்பதற்கான ஒப்புதலை, கேம்கோ எனும் கனடா நாட்டு தனியார் நிறுவனத்திற்கு,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மெலிசா பிரைஸ் அவர்கள் வழங்கியுள்ளார். மேலும் இந்தச் செய்தியை மோரிசன் அவர்களின் மத்திய அரசு, பொதுமக்களிடமோ செய்தி நிறுவனங்களிடமோ அறிவிக்காமல் 14 நாட்களுக்கு இரகசியமாக வைத்திருந்தது என சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த ஒப்புதல் ஆவணங்களைச் சுற்றுச்சூழல் துறை பதிவேற்றும் வரை, அதன் விவரங்களை அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்காமல் பகிரங்கமாக மறைத்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யீலிரி சுரங்கம் எனும் யுரேனியப் பதையல்:
யீலிரி சுரங்கம் என அழைக்கப்படும் இந்தப் புதிய சுரங்கம் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
மேற்கு ஆஸ்திரேலியாவில், சூப்பர் பிட் என அழைக்கப்படும் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் அமைந்துள்ள நகரமான கல்கூர்லிக்கு வடக்கே, சுமார் 500 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த யீலிரி யூரேனியச் சுரங்கம்.
இந்த சுரங்கம் 9 கிமீ நீளமும், 1.5கிமீ அகலமும் கொண்டது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய யுரேனியப் படிமங்களைத் தன்னுள் வைத்துள்ள யீலிரி சுரங்கத்தைத் தோண்ட, உலகின் மிகப்பெரிய யுரேனிய உற்பத்தியாளர்களான கனடா நாட்டைச் சேர்ந்த கேம்கோ எனும் நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இன்னும் 15 வருடங்களில், யீலிரி சுரங்கம் ஆண்டுக்கு 7500 டன் அளவிலான மஞ்சள் கேக் அடர்த்தியினை வெளிக்கொண்டு வரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
சவால்களும், சர்ச்சைகளும்:
தற்பொழுது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள யீலிரி சுரங்கத்தின் மாநில ஒப்புதல், டிஜிவார்ல் பூர்வக்குடி மக்களால், மேற்கு ஆஸ்திரேலியா மாநில உச்ச நீதிமன்றத்தில் இன்னும் வழக்காடப்பட்டு வருகிறது.
2016-ஆம் ஆண்டில், மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (NPA), யீலிரி சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. இருந்தாலும் 2017-இல் முந்தைய மேற்கு ஆஸ்திரேலிய லிபரல் அரசு NPA வின் பரிந்துரைகளை நிராகரித்தது.
தற்பொழுது மோரிசன் அரசாங்கமும் அதே பாணியில் செயல்படுவதாக, சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் டிஜிவார்ல் பூர்வக்குடி மக்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
மோரிசன் அரசாங்கம், நமது தேசியச் சுற்றுச்சூழல் சட்டங்களை மீறியுள்ளதற்கு, இது போன்ற, தேர்தல் அறிவிப்பதற்கு முந்தைய நாள் இரகசிய ஒப்புதல்களே சான்று என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளை (ACF) குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், 32 கடுமையான சுற்றுச்சூழல் நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த சுரங்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பாதிப்புகளும், பின்விளைவுகளும்:
மேற்கு ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், யீலிரி சுரங்கத்தை நிராகரிக்கப் பின்வரும் காரணங்களைக் கூறியது. அரியவகை நிலத்தடி வாழும் உயிரினங்களும், பூர்வக்குடி தாவர வகைகளும் மற்றும் மல்லிஃபோல், இளவரசி கிளிகள் போன்ற பூர்வக்குடி விலங்கினங்களும் அழிந்து போகும் என்று கூறியது.
மேலும் இந்தச் சுரங்கப் பணிக்காக, சுமார் 2422 ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பில் உள்ள தாவரங்களை அழிக்க வேண்டும் எனவும், சுரங்கம் செயல்பட 10 பில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேம்கோ நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, நிலத்தடி நீர்மட்டம் 50 செமீ வரை குறையும் எனவும், மீண்டும் நிலத்தடி நீர் மட்டத்தை முழுமையாக மீட்க 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
யீலிரி சுரங்கம் தன் வாழ்நாளில், சுமார் 36 மில்லியன் டன் கதிரியக்கக் தன்மையுள்ள அணுக்கழிவுகளை உற்பத்தி செய்வதுடன், அவை அந்த இடத்திலேயே சேமிக்கப்படும்.
கதிரியக்க அணுக்கழிவுகளை மேலாண்மை செய்யும் தொழில்நுட்பமும், அனுபவமும் ஆஸ்திரேலியாவிற்கு இல்லை என்பது கூடுதல் செய்தி.
ஆஸ்திரேலியாவில் அணுசக்தி:
கடந்த காலத்தில், ஆஸ்திரேலியாவில் அணுஉலைகளை உருவாக்கச் சொல்லி பல பரிந்துரைகள் வந்தன. இருந்தாலும், 1979-இல் அமெரிக்காவின் மூன்று மைல் தீவு மற்றும் 1986-இல் யுக்ரைனின் செர்னோபில் ஆகிய இடங்களில் நடந்த அணுஉலை விபத்துக்களைத் தொடர்ந்து, இந்த அணுசக்தி தொழில்நுட்பங்கள் பாதுகாப்பு அற்றவை மற்றும் கதிரியக்கத் தாக்கங்கள் பயங்கரமானவை எனவும் வலுவான உணர்வுகள் நிலவின. அதுமட்டுமில்லாமல், உள்நாட்டிலேயே அதிகமாகக் கிடைக்கும் நிலக்கரி மற்றும் இயற்கை வாயுக்கள் ஆபத்து குறைந்தவை என்ற எண்ணமும் மற்றும் அனுபவமிக்க தொழில் நுட்பங்களும் அணுசக்திக்கான தேவைகளைத் தாண்டி நின்றன.
இருப்பினும் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள, ஆஸ்திரேலியாவில் அணுசக்தி தேவை என அணுசக்தித் துறை வல்லுநர்களும், ஆதரவாளர்களும், அணுசக்தி தேவைக்கான ஆதாரங்கள் மற்றும் விவாதங்களை முன்வைத்தனர். இதனடிப்படையில், 2006-இல் ஹோவர்ட் அரசாங்கம், ஆஸ்திரேலியாவின் அணுசக்தி எதிர்காலத்தை நிராகரிக்கவில்லை என்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியது.
2006-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் அணுசக்தி உற்பத்தியின் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றிய ஆய்வைத் தயாரிக்க, டாக்டர் ஜிக்கி ஸ்விட்கோவ்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வுக்குழுவை அன்றைய மத்திய அரசு அமைத்தது. அக்குழுவின் அறிக்கையின்படி, அணுசக்தியில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் ஹவுஸ் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான சவால்களைக் கணிசமாகக் குறைப்பதுடன், 8% முதல் 17% வரை கிரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவை 2050-க்குள் குறைக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அணுஉலைகள் மற்றும் அணுசக்தி தயாரிப்பு சட்டப்படி தடை செய்யப் பட்டுள்ளன. ஆனால் அணுசக்தியின் மூலப்பொருளான யுரேனியத்தை மூன்று சுரங்கங்ளில் வெட்டி எடுத்து, அதைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.
இருப்பினும், சிட்னி மாநகரில் உள்ள லூகாஸ் ஹைட்ஸ் என்ற இடத்தில், ஒரு அணு அறிவியல் ஆராய்ச்சி உலை (OPAL) உள்ளது. இதன்மூலம் அணுசக்தி மருத்துவத்தில் பயன்படும் ஐசோடோப்புகளை உருவாக்குகிறது. ஆஸ்திரேலியா அணு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைப்பு (ANSTO), ஒரு 20 மெகாவாட் திறன் ஆலையைக் கொண்டு நியூட்ரான்கள் மற்றும் குறைந்த வெப்ப ஆற்றலைத் தயாரிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 4300 கியூபிக் மீட்டர்கள் அளவிலான கதிரியக்க அணுக்கழிவுகளை தேக்கி வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கதிரியக்க அணுக்கழிவு மேலாண்மை வரலாற்றை உற்றுநோக்கும் பொழுது, அணுக்கழிவு சிக்கல்களை தீர்ப்பதற்கான போதிய பதில்கள் இல்லாமையும், இச்சிக்கல்களைத் தீர்ப்பது கடினம் எனவும் விமர்சிக்கப்படுகிறது.





