2008ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 13ம் நாள் பூர்வீக மக்களிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோரியது குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
பூர்வீக மக்களிடம் 2008ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 13ம் நாள் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோரியது.
ஏன்?
ஆங்கிலேயர் ஆஸ்திரேலியாவில் குடியேறிய நாளிலிருந்து சுமார் 1969 வரையான காலப் பகுதிகளில், பூர்வீக மக்கள் மற்றும் Torres Island ஐச் சேர்ந்த குடும்பங்களில் இருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகள் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனர்.
மீண்டும் ஏன்?
அப்போதைய அரசுகளின், இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் பூர்வீக பின்னணி கொண்ட சிறுவர்கள் அவர்கள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். அந்த சிறுவர்களை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயர் - Stolen Generations திருடப்பட்ட தலைமுறைகள்.
சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வரலாற்றைக் கொண்ட பூர்வீக மக்கள், தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்டனர். 1788இல் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளாக ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி, இப்பழங்குடிகளைத் துப்பாக்கி முனையில் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து கட்டாயப்படுத்தி அகற்றினார்கள். இந் நடவடிக்கையின் போது, ஆயிரக்கணக்கானவர்கள் வேட்டையாடப்பட்டனர்.
ஆங்கிலேயர்களின் பார்வையில் பூர்வீக மக்கள் நாகரீகமற்றவர்கள் என்பது தான் இதற்கு அடிப்படைக் காரணம். அவர்களை சுத்திகரிக்க வேண்டும் என்ற நோக்கில், இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கையை அறிமுகப்படுத்தி, 1910ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சம் சிறுவர்கள், காவற்துறையினராலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் சொந்தக் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இந்தச் சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள்.
இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்து நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களால் தத்தெடுக்கப் பட்டார்கள்.
2007ஆம் ஆண்டு, டிசம்பர் 11 ஆம் தேதி புதிதாக தெரிவு செய்யப்பட்ட கெவின் ரட் தலைமையிலான Labor கட்சி அரசு, திருடப்பட்ட தலைமுறையினரிடம் தமது முறையான மன்னிப்பைக் கோரும் என அறிவித்தது. மன்னிப்பு வாசகங்களில் இடம்பெறக்கூடிய கருத்துகளை, செய்திகளை பூர்வீக மக்களின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக அறிவித்தது. அதற்கு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
2008ம் ஆண்டு பெப்ரவரி 13ம் நாள், பூர்வீக மக்களுக்குத் துன்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவாறு அமைந்துள்ள அரசின் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் என்பவற்றிற்காக அனைத்துப் பூர்வீக பின்னணி கொண்ட மக்களிடமும் பிரதமர் கெவின் ரட் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்டார்.
இந் நாட்டிலுள்ள பழமையானதும் தொடர்ச்சியானதுமான பூர்வீக கலாச்சாரத்தை நாம் மதிக்கிறோம்.
கடந்த காலத்தில் அந்தக் கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்களை மோசமாக நடத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறோம்.
குறிப்பாக, நம் நாட்டின் வரலாற்றின் களங்கமான அத்தியாயமாகி விட்ட திருடப்பட்ட தலைமுறை குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கிறோம்.
கடந்த காலத்தில் நாம் இழைத்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்ந்து, ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பும் நேரம் வந்துவிட்டது.
எமது சக ஆஸ்திரேலியர் மீது ஆழ்ந்த வருத்தம், துன்பம் மற்றும் இழப்புகளைத் தொடர்ச்சியாகத் திணித்த அரச கொள்கைளுக்காக மன்னிப்பு கோருகிறோம்.
குறிப்பாக எங்கள் நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் மற்றும் Torres தீவினரின் குழந்தைகளை அவர்களின் குடும்பங்கள், சமூகங்களிலிருந்து அகற்றியதற்காக மன்னிப்புக் கோருகிறோம்.
அவர்களின் குடும்பங்கள், அவர்களின் வழித்தோன்றல்கள், அவர்கள் சந்ததியினருக்கு இதனால் ஏற்பட்ட வலிகள், துன்பங்கள் மற்றும் காயங்களிற்காக நாம் வருந்துகிறோம், மன்னிப்புக் கோருகிறோம்.
குடும்பங்களிலிருந்து பிரித்ததற்காக, தாய்மார்கள், தந்தையர், சகோதர சகோதரிகள், மற்றும் சமூகத்தினரிடம் நாம் மன்னிப்புக் கோருகிறோம்.
பெருமையான கலாச்சாரப் பின்னணி கொண்ட ஒரு கொளரவமான மக்கள் மீது கண்ணியமற்ற முறையில் நடந்ததற்காகவும், பாரிய அழியை ஏற்படுத்தியதற்கும் நாம் மன்னிப்புக் கோருகிறோம்.
ஒரு தேசத்தின் ஆழாத்துயரைப் போக்கும் நோக்கில், ஆஸ்திரேலியப் பாராளுமன்றம் கோரும் இந்த மன்னிப்பை ஏற்கும்படி வேண்டுகிறேன்.
எதிர்காலத்தை நாம் மனதில் கொண்டு, எமது கண்டத்தின் வரலாற்றில் புதிய பக்கம் எழுதுவதற்காக, உறுதி எடுப்போமாக.
அனைத்து ஆஸ்திரேலியர்களையும் அரவணைத்துச் செல்வதென்ற கூற்றை எதிர்காலத்தில் நிறைவேற்ற நாம் கடந்து வந்த பாதையை ஒப்புக் கொண்டு எதிர்காலத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்.
முன்னர் நடந்த அநியாயங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்ற உறுதிமொழியை இந்த நாடாளுமன்றத்தில் எடுப்போம்.
ஆயுட்காலம், கல்வி வளர்ச்சி, பொருளாதார வாய்ப்பு என்பவற்றில், பூர்வீக மக்களுக்கும் மற்றவருக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பது என, அனைத்து ஆஸ்திரேலியர்களும் தீர்மானம் எடுப்போம்.
நாம் பழைய அணுகுமுறைகள் தோல்வியடைந்திருந்தால், தீர்வுகளைக் காணப் புதிய வழிகளைக் காணும் சாத்தியத்தைத் தழுவி செயற்படுவோம்.
ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் ஒருவர் பொறுப்பை மற்றவர் மதித்தும் வாழும் மனத்துணிவையுடைய எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம்.
அனைத்து ஆஸ்திரேலியர்களும், அவர்கள் எங்கு பிறந்திருந்தாலும், எந்தப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், சம பங்கு கொண்ட பங்காளிகளாக, வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டு, இந் நாட்டை, ஆஸ்திரேலியாவைக் கட்டி எழுப்புவோம்.
பிரதமராகப் பொறுப்பேற்ற மூன்று மாதங்களுக்குள், கெவின் ரட் பூர்வீக மக்களிடம் மன்னிப்புக் கோரியது சாதனை தான். அதிலும், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அதனை செய்தது வரலாற்று சாதனை தான். இருந்தாலும் சில மூத்த தலைவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. அதற்கு, நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் மன்னிப்புக் கேட்ட சுமார் இரண்டு வருடத்தில், முன்னாள் பிரதமர் John Howard அவர்கள் வழங்கிய ஒரு நேர்காணல் நல்ல சான்று.
ஆஸ்திரேலியப் பிரதமர், 2008ஆம் ஆண்டு கோரிய மன்னிப்பிற்கு அப்போதைய Liberal National கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் அந்த ஆதரவு நடைமுறையில் வெளிப்பட்டதா என்பது கேள்வி தான் என்று கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் Larissa Behrendt.
நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரி, பத்து ஆண்டுகள் நிறைவில், 2018ஆம் ஆண்டு, உறுதியளித்தபடி ஏழு செயற்திட்டங்களில் மூன்று செயற்திட்டங்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் கெவின் ரட்டிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில் நம்பிக்கையூட்டுவதாக இருந்தாலும், உண்மை நிலமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.





