தேசிய மன்னிப்பு தினம்

National Sorry Day

National Sorry Day Source: SBS Tamil

150 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்வ குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் குழந்தைகளையும் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் கொள்கைகளின் தாக்கத்தை, மனித உரிமைகள் மற்றும் சம வாய்ப்பு ஆணையம் மே 26, 1998 அன்று வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற சிந்தனையில் உதித்தது தான் “தேசிய மன்னிப்பு தினம்.” இதன் வரலாறு குறித்தும் அது எவ்வாறு அவதானிக்கப்படுகிறது என்பது குறித்தும் கருத்துகளை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்


20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் பூர்வீக குடி மக்களின் சிறுவர்களையும் குழந்தைகளையும் பெற்றோரிடமிருந்து பிரித்து விட வழி செய்தது. அந்த சிறுவர்களும் குழந்தைகளும் திருடப்பட்ட தலைமுறையினர் என்று அறியப்படுகிறார்கள்.  அவர்கள் நினைவாக Yankunytjatjara என்ற பூர்வீக தேசத்து மூத்தவர் Bob Randall பாடிய பாடல்:
திருடப்பட்ட தலைமுறையினரை நினைவு கூரவும் பூர்வீக மக்கள் தவறாக நடத்தப்பட்டதை உணர்த்தவும், 1998 ஆம் ஆண்டு முதல் மே 26ஆம் நாள் தேசிய மன்னிப்பு தினமாக அவதானிக்கப்படுகிறது.

அவர்களை வீட்டுக்குத் திரும்ப வைப்போம் (Bringing Them Home) என்ற அறிக்கை, 1997ஆம் ஆண்டு மே 26ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  திருடப்பட்ட தலைமுறைகளுக்கும் பூர்வீக குடி மக்கள் மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்களுக்கும் நடந்த கொடுமைகள் குறித்து மற்றைய ஆஸ்திரேலியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பெருகிக் கொண்டு வருகிறது.  அதற்கு மே 26ஆம் நாள் அவதானிக்கப்படும் தேசிய மன்னிப்பு தினம் ஒரு கருவியாக அமைந்துள்ளது.

நில இழப்பு மற்றும் தவறான முறையில் நடத்தப்பட்டமை குறித்து, பூர்வீக மக்களின் எதிர்ப்பு நாள் 1938 இல் உருவானது.

ஆஸ்திரேலியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பூர்வீக குடி மக்களின் வாய் வழி வரலாறுகள், கலை, பாடல் மற்றும் சுயசரிதைகளில்,  குழந்தைகள் பிரித்துச் செல்லப்பட்டமை தொடர்ச்சியான கருப்பொருளாக காணப்பட்டது.

NSW மாநிலத்தில் சிறுவர்களும் குழந்தைகளும் குடும்பங்களிலிருந்து கட்டாயமாகப் பிரிக்கப்பட்டமைக்கு அரசின் கொள்கைகள் தான் காரணம் என்பதை Peter Read என்ற கல்வியாளர் ஆவணப்படுத்தி, அப்படிப் பிரிக்கப்பட்டவர்களுக்கு Stolen Generations திருடப்பட்ட தலைமுறையினர் என்ற பெயரைக் கொடுத்தார்.

பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க உதவும் வகையில் Link-Up என்ற அமைப்பை Coral Edwards என்பவருடன் இணைந்து Peter Read நிறுவினார்.

1990 களில் Secretariat of National Aboriginal and Islander Child Care என்ற பூர்வீக குடி மக்களின் குழந்தை பராமரிப்பு செயலகம் உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு நிறுவனங்களின் உதவியுடன், திருடப்பட்ட தலைமுறையினர் குறித்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது, Link-Up என்ற குழு.  Darwin நகரில் 1994ஆம் ஆண்டு, Going Home Conference என்ற ஒரு மாநாட்டையும் நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சேவை வழங்குபவர்களை ஒரே மேடையில் அவர்கள் பிரச்சனைகளைப் பேச வைத்தது.

பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுக் குழந்தைகளை அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டது தொடர்பான தேசிய விசாரணையை நடத்த அப்போதைய சட்ட அமைச்சர் Attorney-General, Michael Lavarch, 1995ஆம் ஆண்டு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார்.

அந்த விசாரணை:

  • தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களைப் பிரிப்பதனால் கடந்த காலத்தில் ஏற்பட்ட மற்றும் தொடர்ச்சியான விளைவுகளை ஆராயவும்
  • பதிலளிக்கும் வகையில் என்ன செய்ய வேண்டும் என்பதை அடையாளம் காணவும்
  • சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மாற்றுவதற்கான பரிந்துரைகளை முன் வைக்கவும்
  • குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கவும், இல்லையெனில் பிரிவினால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்கவும்
  • பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை நியாயப்படுத்த மற்றும் அதன் தன்மைகளைக் கண்டறியவும்
  • பாதிக்கப்பட்ட பூர்வீக குடி மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் பராமரிப்பைப் பாதிக்கும் தற்போதைய சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை ஆராயவும்
முனைந்தது.

டிசம்பர் 1995 முதல் அக்டோபர் 1996 வரையான காலப்பகுதியில், அனைத்து தலைநகரங்களிலும் பல பிராந்திய மையங்களிலும் ஆதாரங்களைத் திரட்டியது இந்த விசாரணைக் குழு.  மொத்தமாக 777 சமர்ப்பிப்புகளைப் பெற்றது - அதில் பூர்வீக குடி மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து 535, தேவாலய அமைப்புகளிடமிருந்து 49, அரசாங்கத்திடமிருந்து 7 சமர்ப்பிப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஒரு பானை சோறிற்கு ஒரு சோறு பதம் என்பது போல், அப்படி சமர்ப்பிக்கப்பட்ட பல கதைகளுக்கு Sheila Humphries இன் கதை போதுமானது என நம்புகிறோம்:
பல மாநில அரசுகள் திருடப்பட்ட தலைமுறையினருக்கு மன்னிப்புக் கோரினார்கள்.

1997 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, Bringing Them Home - “அவர்களை வீட்டுக்குத் திரும்ப வைப்போம்” என்ற அறிக்கையில் திருடப்பட்ட தலைமுறையினரிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.  ஆனால், வரலாற்றில் பின்னோக்கிப் பார்த்து தான் செயற்பட மாட்டேன் என்றும், மன்னிப்புக் கூற முடியாது என்றும், அப்போதைய பிரதமர் ஜோன் ஹோவர்ட் (John Howard) மறுத்து விட்டார்.

[videocard video="140921"]

கடந்த காலத் தலைமுறையினரின் நடவடிக்கைகளால் பூர்வீக மக்கள் அநியாயங்களை அனுபவித்தமைக்கு ஆழமான மற்றும் நேர்மையான வருத்தத்தை பிரதமர் ஜான் ஹோவர்ட், 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று, வெளிப்படுத்தினார்.  அப்போது எதிர்க்கட்சித் தலைவரான கிம் பீஸ்லே (Kim Beazley) ஜான் ஹோவார்ட்டின் வருத்தத்தை நிராகரித்து, பாரபட்சமில்லாத மன்னிப்புக் கோர வேண்டும் என்று முன்மொழிந்தார், ஆனால் அது நாடாளுமன்றத்தில் வெற்றி பெறவில்லை.

அதன் விளைவாக, அரசியல் அங்கீகாரம் இல்லாத நிலையிலும் "மன்னிப்பு தினம்" என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.  "தேசிய மன்னிப்பு தினம்" என்று அவதானிக்கும் பிரபலமான இயக்கம் உருவானது.

விருப்பத்திற்கெதிராக, தேவையில்லாமல், வலுக்கட்டாயமாக சிறுவர்கள் அவர்களது சொந்த வீடுகளிலிருந்து அகற்றப்பட்டது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடும்பங்கள் மற்றும் பூர்வீக சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தைப் பரந்த பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்நாள் வருடாந்தர நினைவு நாளாக அவதானிக்கப்படுகிறது.

ஊதா நிற செம்பருத்தி இந் நாளின் உத்தியோக சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.  ஆஸ்திரேலியா முழுவதும் பரவலாகக் காணப்படுவதாலும் உயிர் பிழைத்தவர்களை நினைவு படுத்த அதன் நிறம் இரக்கத்தையும் ஆன்மீக குணத்தையும் குறிப்பதாலும் ஊதா நிற செம்பருத்தியைத் தேர்ந்தெடுத்ததாக பல பூர்வீக பின்னணி கொண்ட சிறுவர்களுக்காக சேவையாற்றிவரும் Kimberley Stolen Generation Aboriginal Corporation சொல்கிறது.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் நாள், அன்றைய பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd) "திருடப்பட்ட தலைமுறை" க்கு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.   முதன் முறையாக ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கோரிய சம்பவம் இதுவேயாகும்.

 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand