Australian and New Zealand Army Corps என்பதன் சுருக்கம்தான் ANZAC.
முதல் உலகப்போரின்போது, கூட்டுப்படைகளுக்கு ஆதரவாக, மத்தியத்தரைக்கடல் பயணப்படையின் ஒரு அங்கமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போர்வீரர் படைக்குழாம் உருவாக்கப்பட்டது. 1914 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எகிப்தில் உருவாக்கப்பட்ட இப்படைக்குழாமில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை வீர்ர்களும், சிறிய அளவிலான தன்னார்வல யூதப் படைவீரர்களும் இருந்தனர். இப்படைக்குழாமில் மொத்தம் இரண்டு பிரிவுகள் இருந்தன. முதலாவது ஆஸ்திரேலியப் படைப்பிரிவு. இதில் முதல் கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படைகள் இடம்பெற்றன. இரண்டாவது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து படைப்பிரிவு. இதில் நியூசிலாந்து காலாட்படை, நியூசிலாந்து ஆயுதப்படை, முதற்கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப்படை, நான்காம் கட்ட ஆஸ்திரேலியக் காலாட்படை ஆகியவை இடம்பெற்றன. இவை தவிர இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட ஆஸ்திரேலியக் குதிரைப் படைகள் எப்பிரிவிலும் சேராமல் தனித்தியங்கின.
ANZAC படைக்குழாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், கூட்டுப்படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடல் வழியே துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை.. அந்நாளைய ஓட்டோமான் பேரரசின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்ற ஏதுவாக Gallipoli- தீபகற்பத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது. சுமார் எட்டு மாதங்கள் நீடித்த போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் 8700 ஆஸ்திரேலிய வீர்ர்களும் 2800 நியூசிலாந்து வீர்ர்களும் அடக்கம். காயமுற்ற இரண்டு லட்சத்து அறுபத்திரண்டாயிரம் வீர்ர்களுள் இருபத்தைந்தாயிரம் பேர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த போர்வீரர்கள். முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த ஆஸ்திரேலிய வீர்ர்களின் எண்ணிக்கையோ சுமார் 66,000.
கலிப்போலியைக் கைப்பற்றும் முயற்சி தோல்வியைத் தழுவினாலும், இப்போர்க்காலம் ஆஸ்திரேலிய நியூசிலாந்து வீர்ர்களின் வீரத்தையும் தியாகத்தையும், நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டையும் வெளிக்கொணர்ந்த காலமாக அறியப்படுகிறது. கலிப்போலியில் அவர்கள் கால் வைத்த 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாளான முதல் நாளே இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் பெருமளவில் தேசிய ஒருமைப்பாட்டு அலையை உருவாக்கியது. கலிப்போலி போர் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. வீரர்களுக்கான நினைவேந்தல்கள் நிகழ்த்தப்பட்டன. 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் முதல் ANZAC தினம் அதிகாரபூர்வமாக ஏட்டில் பதிவானது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போர்வீர்ர்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன. கலிப்போலி போரிலிருந்து திரும்பிய வீர்ர்கள் அவற்றில் பங்கேற்றனர். காயமுற்ற வீர்ர்கள் இயலாத நிலையிலும் மருத்துவ உபகரணங்களோடும் செவிலியர்களோடும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர். அன்றைய தினம் லண்டன் தெருக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படைவீரர்கள் அணிவகுத்தனர். லண்டன் செய்தித்தாள் ஒன்று அவர்களை The Knights of Gallipoli என்று பாராட்டி எழுதியது.
Dawn service எனப்படும் அதிகாலை நினைவேந்தல் நிகழ்வும் அன்றைய தினத்தின் இறுதி நிகழ்வான lost post-ம் ANZAC தினத்தின் சம்பிரதாயச் சடங்குகளுள் முக்கியமானவை. போர் நினைவிடங்களிலும் போர்வீரர்களின் கல்லறைகளிலும் மலர்களும் மலர்வளையங்களும் வைக்கப்படுகின்றன. போர்களில் உயிர்நீத்த போர்வீர்ர்கள் பெருமையோடு நினைவுகூரப்படுகின்றனர். ஓய்வுபெற்ற முன்னாள் போர்வீரர்கள் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவிலும் பிற மாநிலத் தலைநகரங்களிலும் மட்டுமல்லாது சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களிலும் அணிவகுப்புகள் நடைபெறும். அணிவகுப்புகளில் படைவீரர்கள், ஓய்வுபெற்ற முன்னாள் வீர்ர்கள், முன்னாள் வீர்ர்களின் வழித்தோன்றல்கள், போர்க்காலங்களில் பணியாற்றிய செவிலியர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தேசப்பற்றையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றனர்.
முன்னாள் வீர்ர்கள் தாங்கள் தங்கள் சேவைகளுக்காய்ப் பெற்ற பதக்கங்களை வரிசையாய் மேற்சட்டையின் இடப்பக்கத்தில் அணிந்திருப்பர். உயிரிழந்த போர்வீர்ர்களின் உறவினர்கள் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களது பதக்கங்களைத் தங்கள் சட்டையின் வலப்பக்கத்தில் அணிந்திருப்பர். சில போர்வீர்ர்கள் தம்முடையதும், உயிரிழந்த தம் உறவுகளையுடைதும் என சட்டையின் இருபுறமும் பதக்கங்களை அணிந்திருப்பர்.
ஏப்ரல் மாதம் மட்டுமல்லாது எல்லா மாதங்களும் பெரும்பாலான கடைகளில் கிடைக்கக்கூடியவை ANZAC பிஸ்கட்கள். ANZAC தினத்துக்கும், ANZAC பிஸ்கட்களுக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது.
முதலில் ANZAC பிஸ்கட்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்று பார்ப்போம். ஓட்ஸ் அவல், மாவு, தேங்காய்த்துருவல், சர்க்கரை, வெண்ணெய், தேன், சமையல் சோடா இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் ANZAC பிஸ்கட்கள். நீண்ட நாள் கெடாது என்பதாலும், போஷாக்கு நிறைந்தது என்பதாலும் முதலாம் உலகப்போர்க் காலத்தில் போர்வீரர்களின் மனைவிகளும், பிற மகளிர் குழுக்களும் இப்பிஸ்கட்களை ஏராளமாய்த் தயாரித்து நாட்டைப் பிரிந்து சென்றிருக்கும் போர்வீர்ர்களுக்கு அனுப்பினார்கள் என்றொரு தகவலும் இல்லை இல்லை இப்பிஸ்கட்கள் போர்க்களங்களுக்கு அனுப்பப்படவில்லை.. உள்ளூர்களிலேயே பெருமளவு விற்பனை செய்யப்பட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் போர்க்காக செலவிடப்பட்டது என்றொரு தகவலும் சொல்லப்படுகின்றன. இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ உண்மையாக இருக்கலாம். எது எப்படி ஆயினும் போர்களுடனும் ANZAC வீரர்களுடனும் தொடர்புடையதாகிவிட்டது இப்பிஸ்கட். 1917 ஆம் ஆண்டில் சிட்னியிலிருந்து வெளியான War chest cookery book இல் ANZAC பிஸ்கட் என்ற தலைப்பில் இதன் செய்முறை வெளியாகியிருக்கிறது. இத்தனை வருடங்களில் அதன் செய்முறையில் பெரிய அளவு மாற்றமேதும் நிகழவில்லை என்பது ஆச்சர்யம்.
Remembrance day எனப்படும் போர்நினைவு தினத்தன்று சட்டைகளில் பாப்பி மலர்களை சூடிக்கொள்வதைப் போன்று ANZAC தினத்தன்று சட்டைகளில் ரோஸ்மேரி இணுக்குகள் சூடிக்கொள்ளப்படுகின்றன. என்ன காரணம்? கலிப்போலியை நினைவுகூரும் விதமாய் அந்நாளில் கலிப்போலி தீபகற்பத்தில் காட்டுச்செடிகளாய் ஏராளமாய் மலர்ந்துகிடந்த ரோஸ்மேரிச் செடிகள் இப்போதும் ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நினைவேந்தல்களின்போது கட்டாயம் இடம்பெறுகின்றன.
ANZAC தினத்தன்று கட்டாயம் இடம்பெறும் மற்றொரு சம்பிரதாயம் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் Collingwood மற்றும் Essendon குழுக்களுக்கிடையில் நடைபெறும் Australian Rules Football எனப்படும் ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டப் போட்டி. போர்க்காலங்களில் தங்கள் ஓய்வுப்பொழுதுகளில் ஆஸ்திரேலிய வீர்ர்கள் இவ்விளையாட்டை விளையாடினராம். பிற வீர்ர்களுடனான பிணைப்பை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியக் கலாச்சாரத்தைக் கொண்டாடவும் அப்போது இவ்விளையாட்டுப் போட்டிகள் உதவினவாம். அதன் நீட்சியாகவே இன்றும் இவ்விளையாட்டுப் போட்டி நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
ANZAC தினத்தின் மகத்துவத்தையே இவ்விளையாட்டுப் போட்டி மறக்கடித்துவிடுகிறது என்றும் அதனால் ANZAC தினக் கால்பந்தாட்டப் போட்டியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பும் வெறிகொண்ட ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலோடு விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் முட்டி மோதி விளையாடி வெற்றியை நிலைநாட்டத் துடிக்கும் இப்போட்டிகளும் ஒரு வகையில் ANZAC தினத்துக்கான நினைவேந்தலே என்று மற்றொரு தரப்பும், வாதிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் 2002 இலிருந்து ANZAC தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு ரக்பி விளையாட்டுக்கான ANZAC தினக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டு Sydney Roosters மற்றும் St.George Illawarra Dragons குழுக்களுக்கிடையிலான போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்றுவருகின்றன.
எத்தனை முரண்கள் இருந்தாலும், எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும் எத்தனைக் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ANZAC தினம் என்றவுடனேயே ஒவ்வொரு ஆஸ்திரேலியர் உள்ளத்திலும் உணர்வுப் பெருக்குண்டாவதை மறுக்க முடியாது. நாட்டுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய வீர்ர்களின் தியாகத்தையும் பெருமையையும் தேசப்பற்றையும் என்றென்றும் நினைவிலிருத்தி அவர்களுக்கு நம் அஞ்சலியையும் மரியாதையும் தெரிவிப்பது ஆஸ்திரேலியர்களாகிய நம் கடமை அல்லவா?