இந்தப் புள்ளி விபரங்களை, சற்று காது கொடுத்துக் கேளுங்கள் – ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 195. அவர்கள் வாழும் நாட்டில் நிகழ்ந்த மொத்த தற்கொலைகளின் எண்ணிக்கை 2,202. விகிதாசாரத்தைக் கணக்கிட்டால், இந்த சமூகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதிலும் நடைபெறும் தற்கொலைகளின் எண்ணிக்கையில் ஆறு மடங்கு.
இந்த சமூகத்தில் இப்படியொரு பாரிய பிரச்சனை நிலவினாலும், அந்த சமூகத்தின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாக, பத்தோடு இன்னொன்றாக அடிபட்டுப் போகிறது.
யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஆம், ஆஸ்திரேலிய பூர்வீகக் குடி மற்றும் Torres Strait தீவு மக்களிடையே தற்கொலை என்பது ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த வருட எண்ணிக்கைகளை நாம் சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இவர்களின் நிலை கவலைக்குரியதாக உருப்பெற்றிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.
கடந்த வருடம் 195 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 120 என்றும், பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 100 என்றும் தரவுகள் சொல்கின்றன.
தற்கொலை செய்து கொள்ளும் பூர்வீக குடி மக்களில் சுமார் நான்கில் மூன்று பேர் ஆண்கள். New South Wales மாநிலத்தில் ஒரு வருடத்தில் ஒரு இலட்சம் பேரில் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், பூர்வீக குடி மக்கள் அதிகளவில் வாழும் Northern Territory பிரதேசத்தில், ஒரு இலட்சம் பேரில் முப்பது பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏன் அப்படி பூர்வீக குடி மக்களிடையே அதிகப்படியானவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?
அதற்கு – குடும்ப வன்முறை, பிளவடைந்த குடும்ப உறவுகள், தொலைந்து போன அடையாளம், பல்வேறு வகையான உடல் உள மன நல தாக்கங்கள், மது மற்றும் போதைப்பொருட்கள் என்று பல காரணங்கள் இருப்பதாக, தற்கொலை செய்ய முயற்சித்த அல்லது அப்படியான சிந்தனையுள்ள பூர்வீக குடி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றும் Balunu Foundation என்ற அமைப்பைச் சேர்ந்த David Cole சொல்கிறார்.
பூர்வீக மக்களில் பலரிடம் அவர்களது அடையாளம் குறித்த கேள்வி பெரிதாக எழுந்துள்ளது. தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்ற கேள்வி மனதில் எழுகிறது. ஒன்று நடந்ததால் மற்றையது விளைந்ததா? அல்லது மற்றையது தான் ஒன்று நடக்கக் காரணமாக அமைந்ததா? இந்தக் கேள்வியை பூர்வீக குடி மக்களிடையே உளவியல் நிபுணராக முதலில் தேர்வு பெற்ற, மேற்கு ஆஸ்திரேலியாவின் Bardi இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் Pat Dudgeon.
ஒரே வாரத்தில் தனது சமூகத்தில் நடந்த பல தற்கொலைகளைத் தொடர்ந்து, Victoria மாநிலத்தின் Gibbsland பகுதி பூர்வீக குடி மக்களின் பிரதிநிதிகள் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்கள். அதில், Vera Briggs என்ற மூத்தவர், பூர்வீக குடி இளைஞர்கள் சிக்கல்களை எதிர் கொள்ளும் போது, அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்வதைத் தவிர்த்து உதவிகளை நாடலாம் என்பதை எடுத்துச் சொல்லியிருந்தார்.
இந்தப் பிரச்சனைக்கு அரசு ஏன் எதுவும் செய்வதில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அரசு நிதி ஒதுக்குகிறது என்பது உண்மைதான். ஆனால், அது சரியான வழியில், தேவையானவர்களுக்கு சென்றடையவில்லை என்று தனது வருத்தத்தைக் கூறும் முன்னாள் Northern Territory பிரதேச அமைச்சர் Marion Scrymgour, அதனையும் ஒரு காரணம் காட்டி பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களுக்கு முன்னர், பூர்வீக குடி சமூகத்தில் நடக்கும் அதிகப்படியான தற்கொலைகள் குறித்த ABC ஊடகத்தின் ஆவணப்படத்திற்கு Nathan Morris என்பவருக்கு Walkley’s விருது வழங்கப்பட்டிருந்தது. அந்த ஆவணப்படத்தில் Kalgoorlie பிரதேசத்திலுள்ள Leonora என்ற இடத்தில், இறந்தோரைப் புதைக்கும் சடங்குகளை மேற்கொள்ளும் Matt Taylor என்பவரின் கதை முக்கிய பங்கு வகித்தது. மனதை மிக நெருடிய விடயம் என்னவென்றால், Matt Taylorரின் மகன் தற்கொலை செய்து விட்டார். அந்த பதின்ம வயது இளைஞனையும் புதைக்கும் பொறுப்பு Matt Taylorக்கு. தனது சமூகத்திற்குத் தேவையான சேவைகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டிக் கவலைப்படுகிறார் Matt Taylor.
ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, காலனித்துவ ஆட்சி நடந்த பல நாடுகளிலும் பூர்வீக குடி மக்களின் நிலை இது தான் என்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் Pat Dudgeon, இது குறித்து அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
பூர்வீக குடி மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து Productivity Commission நடத்திய விசாரணை முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில், பூர்வீக மக்கள் கடந்து வந்த கடினமான பாதையை உணர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், Djugun / Yawuru பூர்வீக குடி இனத்தைச் சேர்ந்த Productivity Commission ஆணையத்தைச் சேர்ந்த Ronlie Mokak. அதற்கு அரசும் பூர்வீக குடி மக்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் அவர்.
பூர்வீக மக்களிடையே உள்ள பல பிரச்சினைகளில், அளவுக்கதிகமான தற்கொலைகள் எதிர்கால சமூகத்தை அதிகளவில் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. அதனைத் தீர்ப்பதற்கு, ஒரு தனியான பிரச்சினை என்று அதனை அணுகாமல், அடிப்படை உரிமை, அரசியலமைப்பிலும் மற்றும் நாடாளுமன்றத்திலும் அவர்கள் குரலை நாம் எப்படி ஏற்கிறோம் என்பதில் தான் ஒரு நிலையான தீர்வை நாம் எட்டமுடியும் என்று நாமும் நம்புகிறோம்.