தென் துருவத்தின் பல பாகங்களிலுமிருந்து வந்திருக்கும் நாம், இதயத்திலிருந்து இந்த அறிக்கையை 2017 தேசிய அரசியலமைப்பு மாநாட்டில் வெளியிடுகிறோம். எங்கள் பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் ஆஸ்திரேலிய கண்டத்திலும் அதன் அருகிலுள்ள தீவுகளிலும் எங்கள் சொந்த சட்டங்களின் அடிப்படையிலும் பழக்கவழக்கங்களுடனும் இறையாண்மை கொண்ட நாடுகளாக ஆரம்பத்திலிருந்து வாழ்ந்திருக்கிறோம். எமது முன்னோர்கள், எமது கலாச்சாரத்தின் கணக்குப்படி, படைப்பிலிருந்து நாம் இங்கே வாழ்கிறோம். அறிவியல் ஆய்வுகளின் படி, 60,000 ஆண்டுகளுக்கு மேலாக நாம் இங்கே வாழ்கிறோம். இந்த இறையாண்மை ஒரு ஆன்மீகக் கருத்தாகும்: நிலம் அல்லது இயற்கை ஆகியவற்றுக்கு இடையேயான எமது பிணைப்பு, மற்றும் அதிலிருந்து பிறந்த பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், அதனுடன் இணைந்திருக்கிறார்கள், மேலும், நாம் அனைவரும் ஒரு நாள் நம் முன்னோர்களுடன் ஐக்கியமாகிவிட வேண்டும். இந்த இணைப்பு, எம் மண்ணின் உரிமையின் அடிப்படையாகும், அல்லது சிறப்பாக சொல்வதென்றால் இறையாண்மையாகும். இது ஒருபோதும் கைவிடப்படவில்லை வேறோருவரிடம் கையளிக்கப்படவும் இல்லை. அறுபதாயிரம் ஆண்டுகளாக எம்மக்கள் இந்த நிலத்தில் உரிமை கொண்டிருந்தார்கள். இந்த புனித இணைப்பு, உலக வரலாற்றிலிருந்து கடந்த இருநூறு ஆண்டுகளில் எப்படி மறைய முடியும்? அரசியலமைப்பில் கணிசமான மாற்றங்கள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன், இந்தப் பண்டைய இறையாண்மை ஆஸ்திரேலிய தேசத்தின் முழுமையான வெளிப்பாடாகப் பிரகாசிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். விகிதாசார அடிப்படையில், நாங்கள் அதிகளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எமது சமூகம் உள்ளார்ந்த குற்றவாளிகள் சமூகம் அல்ல. எங்கள் குழந்தைகள் முன்னெப்போதுமில்லாத அளவில் தங்கள் குடும்பங்களிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாங்கள் அன்பு காட்டவில்லை என்று அர்த்தப்படுத்தக்கூடாது. கவலை தரும் எண்ணிக்கையில் எங்கள் இளைஞர்கள் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது எதிர்காலம் எமக்கு நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும். இப்படியான பிரச்சினைகள் கட்டமைப்புகளில் காணப்படும் பல்வேறு நெருக்கடிகளின் பரிமாணங்களைத் தெளிவாகக் கூறுகின்றன. எமது இயலாமையை எடுத்துக்காட்டுகிறது. நமது சொந்த நாட்டில், எமக்கான சரியான இடத்தைப் பெறுவதற்கும் எமது மக்களை நாங்களே வழிகாட்டி நடத்துவதற்கும், நாங்கள் அரசியலமைப்பில் சீர்திருத்தங்களை நாடுகிறோம். எங்கள் தலை விதியை நாமே நிர்ணயிக்கும் அதிகாரம் எமக்கு இருக்கும்போது எமது குழந்தைகள் செழிப்படைவார்கள். இரண்டு கலாச்சாரங்களையும் சரியாக உணர்ந்து நடப்பார்கள். அவர்களது கலாச்சாரம் அவர்களின் நாட்டுக்குப் பரிசாக அமையும். பூர்வீக மக்களின் இருப்பை வெளிப்படுத்தும் அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். Yolngu மொழியில் Makarratta என்பது, நமது நிகழ்ச்சி நிரலின் உச்சம் – ஒரு போராட்டத்திற்குப் பின்னர் ஒன்று சேருதல் என்று பொருள். இது, ஆஸ்திரேலியா மக்களுடனான நியாயமான மற்றும் உண்மையுள்ள உறவிற்கான எங்கள் விருப்புகளையும், நீதி மற்றும் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் நமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஆர்வத்தையும் உரைத்து நிற்கிறது. அரசுக்கும் பூர்வீக மக்களுக்குமிடையிலான உடன்படிக்கை மற்றும் எங்கள் வரலாற்றைப் பற்றிய உண்மையைச் சொல்லும் ஒரு செயல் முறையை மேற்பார்வையிட Makarratta ஆணையம் ஒன்றை உருவாக்கும் படி நாங்கள் கோருகின்றோம். மக்கள் கணக்கெடுப்பில் நாம் முதல்முறையாக 1967 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டோம். 2017 ஆம் ஆண்டில் எங்கள் கோரிக்கையை செவிமடுங்கள் என்று கோருகிறோம். எங்கள் இருப்பிலிருந்து புறப்பட்டு இந்தப் பரந்த நாடு முழுவதும் எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம். சிறந்த எதிர்காலத்திற்காக, நாட்டு மக்களின் இயக்கத்தில் எம்முடன் இணைந்து பயணிக்க நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
மேலும் தகவலுக்கு, www.ulurustatement.org என்ற இணைய தளத்தைப் பாருங்கள் அல்லது, NSWபல்கலைக்கழக Indigenous Law Centre ற்கு ilc@unsw.edu.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
பன் மொழி பேசும் இன் நாட்டில் வாழும் அனைவரும் இது குறித்து அறிந்து கொள்ளவும் அது குறித்த கருத்துகளைப் பரிமாறவும், ‘இதயத்திலிருந்து வெளியாகும் உலுறு அறிக்கை’ - Uluru Statement from the Heart என்ற அறிக்கையை, 63 மொழிகளில் SBS வெளியிட்டுள்ளது.