இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கான வரியை இந்திய அரசு உயர்த்தியுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த வரி உயர்வு நடைமுறைக்கு வருகிறது. புதிய நடைமுறைப்படி, இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும்போது ஒருவர் ஐந்து சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனும் தற்போதைய நடைமுறை, 20 சதவீத வரியாக உயர்த்தப்படுகிறது.
கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும்போது விதிவிலக்கு உண்டு. ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பணம் ஒரு நிதியாண்டில் இந்திய ரூபாய் 700,000 (ஏழு லட்சத்தை) தாண்டக்கூடாது. அப்படி தாண்டினால் புதிய வரி விதிப்புக்கு அவர் உட்படுவார். உதாரணமாக, இந்தியர் ஒருவர் வெளிநாட்டுக்கு விடுமுறைக்கு செல்வது, வெளிநாட்டில் முதலீடு செய்வது, வெளிநாட்டில் இருக்கும் ஒருவருக்கு பரிசாக அனுப்புவது என்று பல நிலைகளில் இந்த வரிவிதிப்பு பொருந்தும்.

ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வருவதாக இருந்த இந்த புதிய வரி விதிப்பு இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அரசு சற்று தாமதப்படுத்தியுள்ளது.
ஒருவர் வங்கி வழியாக வெளிநாட்டுக்கு இந்திய பணத்தை அனுப்பும்போது வங்கி முதலில் வரியை எடுத்துக்கொள்ளும் என்றும் ஆண்டின் இறுதியில் வரியை திரும்பபெற அவரால இயலும் என்றும் கூறப்படுகிறது. இதனால் கையில் அதிக பணம் இல்லாத நடுத்தர மக்கள் அதிக சிக்கலை எதிர்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே High-Networth Individuals (HNIs) எனப்படும் இந்திய பணக்காரர்கள் சுமார் 35,000 பேர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததால் அவர்கள், கணிசமான இந்திய பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றதாக கருதப்படுகிறது. எனவே இதுபோன்று பணக்காரர்கள் எதிர்காலத்தில் வரி செலுத்தாமல் இந்திய பணத்தை இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இயலாது என்ற ரீதியில் இந்திய அரசு இந்த புதிய வரி விதிப்பை நியாயப்படுத்தியுள்ளது.
——————————————————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





