சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடு ஆஸ்திரேலியா. ஆனால், நகரங்களில் நீங்கள் சந்திக்காத சூழ்நிலைகளை, கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது எதிர்கொள்ள நேரிடலாம். அப்படி என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை அறிந்துகொள்வது, மிகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் நீங்கள் பயணிக்க உதவும். இது குறித்து, Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
முக்கிய குறிப்புகள்
- புறப்படுவதற்கு முன், உங்கள் வாகனம் சாலைப் பயன்பாட்டிற்கு ஏற்ற நிலையில் இருப்பதையும், அதற்கான தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உங்களிடம் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- சாலை மற்றும் வானிலை நிலவரங்கள் விரைவாக மாறக்கூடும். உங்கள் பயணத்திற்கு முன்னும் பயணத்தின் போதும் அதிகாரப்பூர்வ தகவல்களைச் சரிபார்க்கவும், வெள்ள நீரில் ஒருபோதும் வாகனம் ஓட்ட வேண்டாம்.
- சூழ்நிலைக்கு ஏற்ப பாதுகாப்பாக ஓட்டுங்கள், தவறாமல் ஓய்வெடுங்கள், மேலும் பாதுகாப்பாகவும் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட வேளைகளில் மட்டுமே முந்திச் செல்லுங்கள்.
சாலைப் பயணத்திற்கு எப்படித் தயாராவது?
கிராமப்புற அல்லது தொலைதூரச் சாலைகளில் எப்படிப் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது?
சாலை மற்றும் வானிலை நிலவரங்களை எவ்வாறு அறிந்துகொள்வது?
கனரக வாகனங்களுடன் சாலையைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வது எப்படி?
சாலைப் பயணத்திற்கு எப்படித் தயாராவது?
ஆஸ்திரேலியாவின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் சாலைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டால், முன் தயாரிப்பு மிகவும் அவசியம்.
நீங்கள் புறப்படுவதற்கு முன், சாலை மற்றும் வானிலை நிலவரங்களைச் சரிபார்த்து, உங்கள் வாகனம் பயணத்திற்குத் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். அது ஏன் என்பதை, மேற்கு ஆஸ்திரேலியாவின் Royal Automobile Club, சுருக்கமாக RAC WA என்ற அமைப்பைச் சேர்ந்த Rhys Heron விளக்குகிறார்.
“பயணத்தைத் தொடங்குவதற்கு முன் உங்கள் காரின் டயர்கள், விளக்குகள் மற்றும் பிரேக்குகளைச் சரிபார்க்கவும்; சாலைகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு நன்கு பராமரிக்கப்பட்ட வாகனம் அவசியம். நீங்கள் ஒரு டிரெய்லர் (trailer) அல்லது கேரவனை (caravan) இழுத்துச் சென்றால், அந்த டயர்களையும் சரிபார்த்து, எடைகள் சரியாக சமநிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”
“நீங்கள் இதற்கு முன்பு அதே வழியில் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், நீங்கள் கடைசியாக சென்றதிலிருந்து சாலைகள் மாறியிருக்கலாம். மேலும், மிகவும் மன அழுத்தமான ஒரு பயணத்திற்குப் பிறகு, வீட்டிலிருந்து வெகு தொலைவில் வழிதவறிப் போவதை விட மோசமானது வேறு எதுவும் இல்லை; உங்கள் விடுமுறைப் பயணத்தை அப்படித் தொடங்குவது சிறந்த வழி அல்ல,” என்கிறார் Rhys Heron.

“நீங்கள் பயணம் செய்யும் இடத்திற்கு ஏற்றவாறு தேவையான பொருட்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று குயின்ஸ்லாந்து போக்குவரத்து மற்றும் பெருஞ்சாலைகள் துறையைச் சேர்ந்த Kylee Petersen கூறுகிறார்.
“தார் போடப்படாத சாலைகளில் பயணம் செய்தால், உங்களிடம் போதுமான உணவு, தண்ணீர், முதலுதவிப் பொருட்கள், கூடுதல் எரிபொருள், மீட்பு உபகரணங்கள் மற்றும் குறைந்தது இரண்டு உதிரி டயர்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்கிறார் அவர்.
ஆஸ்திரேலியாவின் கிராமப்புறத் தொலைதூரப் பகுதிகள் உண்மையிலேயே மிகவும் பரந்தவை, மேலும் தொலைபேசி வலையமைப்பு ஆஸ்திரேலியாவின் அனைத்துப்பகுதிகளிலும் செறப்பாக செயற்படுவதில்லை. அதனால், உங்களால் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியையோ அல்லது அவசரகால இருப்பிடத்தைக் காட்டும் ரேடியோ பீக்கனையோ எடுத்துச் செல்ல முடிந்தால், அது மிகவும் நல்லது. அதே சமயம், அவற்றைச் சரியாகப் பயன்படுத்த உங்களுக்குத் தெரியும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
“நீங்கள் புறப்படுவதற்கு முன், எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையில் செல்லத் திட்டமிட்டுள்ளீர்கள், எப்போது அங்கு சென்று சேர்வீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்” என்று Kylee Petersen அறிவுறுத்துகிறார்.
நீங்கள் புறப்படுவதற்கு முன், எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையில் செல்லத் திட்டமிட்டுள்ளீர்கள், எப்போது அங்கு சென்று சேர்வீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்Kylee Petersen
"நீங்கள் தொலைதூரப் பாதைகளைப் பயன்படுத்தினால், உள்ளாட்சி மன்றம் அல்லது காவல் துறை போன்ற உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அப்போதுதான், மிக மோசமான நிலை ஏற்பட்டால், குறைந்தபட்சம் உங்களைத் தேட எங்கே தொடங்குவது என்பது அவர்களுக்கு இருக்கும்."
கிராமப்புற அல்லது தொலைதூரச் சாலைகளில் எப்படிப் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது?
ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியிலுள்ள சாலைகளின் நிலை மாறுபடலாம்; மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் பிற சேவை வசதிகளுக்கு இடையேயுள்ள தூரம், நகரங்களில் இருப்பதை விட மிக நீண்டதூரமாக இருக்கக்கூடும்.
வெள்ள நீரில் ஒருபோதும் வாகனத்தைச் செலுத்தக்கூடாது. அந்த நீர் எவ்வளவு ஆளமானது என்பதை கண்பார்வையால் கணிக்க முடியாது. அத்துடன், வெள்ளம் காரணமாக மூடப்பட்ட சாலைகளுக்குள் ஒரு போதும் நுழையக்கூடாது.
சாலைப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள். வாகனத்தை ஓட்டும்போது அதிக சோர்வு ஏற்படாமல் இருக்க, வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள், அவ்வப்போது இடைவேளை எடுங்கள் மற்றும் முடிந்தால் ஓட்டுநரை மாற்றிக்கொள்ளுங்கள்; அத்துடன், இரவில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும் முயலுங்கள்.Rhys Heron
நீண்ட பயணங்களின்போது சோர்வு ஒரு குறிப்பிட்ட ஆபத்தை ஏற்படுத்துகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஓய்வு எடுக்குமாறு அரசின் சாலைப் பாதுகாப்பு அறிவுரை பரிந்துரைக்கிறது.
ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்த வேண்டியிருந்தால், அகலமான சாலையோரம், வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் அல்லது ஓய்வு நிறுத்தம் உள்ள ஓர் இடத்தைத் தேர்ந்தெடுக்க முயலுங்கள். இவை எல்லா நேரங்களிலும் சாத்தியமாகாது, எனவே அது முடியாவிட்டால், வளைவில் அல்லாமல், நேரான சாலையில் தெளிவாகத் தெரியும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அபாய விளக்குகளை எரிய விடுங்கள்.
பகல் நேரங்களில் குறைந்த ஒளி கொண்ட முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வாகனத்தை மற்ற சாலைப் பயனாளர்களுக்கு மேலும் தெளிவாகத் தெரியும்படி செய்ய முடியும். இரவில், மற்றொரு வாகனத்தை நெருங்கும் போது உட்பட, தேவைப்படும்போது உங்கள் high beam - உயர் ஒளி விளக்குகளை மங்கச் செய்ய நினைவில் கொள்ளுங்கள்.
சட்டப்படி அனுமதிக்கப்பட்டால், மற்றும் பாதுகாப்பாக முந்திச் செல்வதற்குப் போதுமான தூரமும் பாதை தெளிவாகத் தெரிந்தால் மட்டுமே மற்ற வாகனங்களை முந்திச் செல்லுங்கள்.
மேலும், நீங்கள் பயணிக்கும் போது, road trains சாலை ரயில்களையும் சந்திக்க நேரிடலாம். இவை ஒரு முதன்மை இயக்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிரெய்லர்களை இழுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் ஆகும்.
ஆஸ்திரேலியாவின் Livestock and Rural Transport Association கால்நடை மற்றும் கிராமப்புறப் போக்குவரத்து சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றும் Ben Sutherland, ஒரு சாலை ரயிலை முந்திச் செல்வதற்கு கவனமும் திறமையும் தேவை என்று விளக்குகிறார்.
“இவற்றுக்குப் பின்னால் நியாயமான மற்றும் பாதுகாப்பான தூரத்தில் இருங்கள்... நீங்கள் முந்திச் செல்லும்போது, அது பாதுகாப்பானது என்பதையும், முந்திச் செல்வதற்கு உங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரமாவது இடம் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் அநேகமாக இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை முன்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
மேலும், நாம் மெதுவாகச் செல்லும் வாகனங்களை முந்திச் செல்வதைப் போல, ஒரு சாலை ரயில் உங்களை முந்திச் சென்றால், அதற்கு வழிவிட்டு, அது உங்களைக் கடந்து செல்ல ஏதுவாக உங்கள் வேகத்தை சற்றுக் குறைக்கவும்.
குறிப்பாக, நீங்கள் ஒரு டிரெய்லர் (trailer) அல்லது கேரவனை (caravan) இழுத்துச் செல்லும்போது, பெரிய சாலை ரயில்களை முந்திச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று Rhys Heron சுட்டிக்காட்டுகிறார்.
“கனரக வாகனங்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். அதனால், அந்தப் பெரிய சரக்குந்துகளை முந்திச் செல்வதற்கு 30 வினாடிகள் வரை, கணிசமான நேரம் ஆகும். நீங்கள் வாகனம் ஓட்டும்போது, சாலையின் தவறான பக்கத்தில் 30 வினாடிகள் செலவிடுவது மிகவும் ஆபத்தானது. எனவே, அந்த ஆபத்தைத் தவிர்த்து, முந்திச் செல்வதற்கான பாதை கிடைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருப்பதே நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம்," என்கிறார் Rhys Heron.

சாலை மற்றும் வானிலை நிலவரங்களை எவ்வாறு அறிந்துகொள்வது?
நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும்போதே சாலை நிலவரங்களும் மாறக்கூடும்.
உங்கள் பயணவழியில் சாலைகள் மூடப்பட்டிருப்பது மற்றும் வானிலை எச்சரிக்கைகள் குறித்துச் சரிபார்ப்பது ஏன் முக்கியம் என்பதையும், இணையவழி வழிசெலுத்தல் (online navigation) வசதியை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கக் கூடாது என்பதையும் Kylee Petersen விளக்குகிறார்.
“ஒரு மாற்று ஏற்பாடாக, காகித அடிப்படையிலான வரைபடத்தையோ அல்லது இணைய சேவையைப் பயன்படுத்தாத வழிகாட்டியையோ உடன் எடுத்துச் செல்லுங்கள்... ஏனெனில் செயலிகள் எப்போதும் தற்போதைய சாலை நிலவரங்களைக் காட்டுவதில்லை... மேலும், நீங்கள் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்லும்போது, தொலைபேசி இணைப்பு குறைவாக இருப்பதால், இந்தச் செயலிகள் எப்போதும் தகுந்த வேகத்தில் புதுப்பிக்கப்படுவதில்லை," என்று அவர் கூறுகிறார்.
உள்ளூர் தகவல்களும் தற்போதைய நிலைமைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவக்கூடும்.
காட்டுத்தீப் பருவம் என்றால், தீ அபாயத்தின் அடிப்படையில் அதன் இடர் மதிப்பீட்டைச் சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள். மற்ற அவசரகாலச் சூழ்நிலைகள் குறித்த செய்தி அறிக்கைகளுக்கு உள்ளூர் வானொலியைக் கேளுங்கள்.Rhys Heron
நீங்கள் பயணம் செய்யும் மாநிலம் அல்லது பிராந்தியத்திற்கான அதிகாரப்பூர்வ சாலைத் தகவல்களைச் சரிபார்ப்பது அவசியம்.
நீங்கள் பயணிக்கும் பகுதிகளுக்கான வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள், அத்துடன் அதிகாரப்பூர்வ அவசரநிலைத் தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளவும்.

சாலையையும் ஓய்விடங்களையும் எவ்வாறு பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்வது?
பிறர் மீது அக்கறை கொள்வது என்பது, நீங்கள் செல்லும் வழியில் தங்கும் இடங்களுக்கும் பொருந்தும்.
“உங்கள் பயணத்தின்போது நீங்கள் உருவாக்கும் எந்தக் குப்பையாக இருந்தாலும், அதைத் தவறாமல் குப்பைத்தொட்டியில் போடுங்கள். குப்பைத்தொட்டி இல்லையென்றால், அந்தக் குப்பையை உங்களுடனே எடுத்துச் செல்லுங்கள். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது, அவற்றைச் சுத்தமாக வைத்திருங்கள்...” என்று Rhys Heron கூறுகிறார்.
சில ஓய்வு இடங்களும் வாகன நிறுத்துமிடங்களும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.
கனரக வாகன ஓட்டுநர்கள் சட்டப்படி கட்டாய ஓய்வு இடைவேளைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் அனுபவித்து மகிழ்வதற்கு அற்புதமான நிலப்பரப்புகளும் இடங்களும் உள்ளன. எனவே, Kylee Petersen எமக்கு நினைவூட்டுவது போல, பொறுமையாகவும் கண்ணியமாகவும் வாகனம் ஓட்டும் ஓட்டுநராக இருப்பது, சாலையில் உள்ள அனைவருக்கும் ஒரு நேர்மறையான அனுபவத்தை உறுதி செய்யும்.
ஓட்டுநரின் விரக்தி சில தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும். எனவே, தயவுசெய்து சாலையின் நிலைக்கு ஏற்ப வாகனத்தை ஓட்டுங்கள், பொறுமையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள், மேலும் சாலையையும் மற்ற ஓட்டுநர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand





