Key Points
- Acts of Parliament என அழைக்கப்படும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம், 'statute law' என்றும், நீதிமன்றங்கள் உருவாக்குபவை 'case law' என்றும் அழைக்கப்படுகின்றன.
- federal மற்றும் மாநில அல்லது பிரதேச சட்டங்களுக்கு இடையே நேரடி முரண்பாடு இருந்தால், federal சட்டம் என்ன சொல்கிறது என்பது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும்
- ஒருவருடைய நிதி நிலை சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையான சட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன
ஆஸ்திரேலிய சட்ட அமைப்பு பல்வேறு தொழில் சார் நிபுணர்கள், மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கியது. அவர்களின் மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் படிநிலை இருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் சட்ட அமைப்பின் அடித்தளத்தை நிலை நிறுத்துவதற்கு ஒன்றாக வேலை செய்கிறார்கள்: The rule of law என்று சொல்லப்பட்டும் சட்டத்தை ஒழுகும் ஆட்சி.
மெல்போர்ன் பல்கலைக்கழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் William Partlett விளக்குகிறார்.
“அனைவரும் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும் , சட்டம் அனைத்து மக்களுக்கும் சமமாக பொருந்தும். பாரபட்சமற்ற சுயாதீன நீதிமன்றங்கள் முன் தோன்றும் அனைவருக்கும் நியாயமான வகையில் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. சட்டங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய கட்டமைப்பு நாடாளுமன்றம் - மற்றும் நமது நடத்தையை நிர்வகிக்கும் சட்டத் துறையை சார்ந்த அனைவரும் பாரபட்சமற்ற முறையில் செயல் படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

Federal மற்றும் மாநில அளவில் சட்டத்தை உருவாக்குவதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள், இந் நாட்டில் அடிப்படை சட்ட ஆவணமான அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளன.
Acts of Parliament என அழைக்கப்படும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம், 'statute law' என்று குறிப்பிடப்படுகிறது. கூடுதலாக, இந்த சட்டங்களை நீதிமன்றங்கள் அணுகுகின்ற போது, சில விளக்கங்கள் மூலம் சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன, அவை 'case law' என்று அழைக்கப்படுகின்றன.
இரண்டிற்கும் இடையே உள்ள படி நிலையை கோடிட்டுக் காட்டுகிறார் இணைப் பேராசிரியர் William Partlett.
“இங்கிலாந்து, ஹாங்காங், நியூசிலாந்து, என்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பல முன்னாள் பகுதிகள் போன்ற ஒரு பொதுவான சட்ட அமைப்பை நம் நாடும் கொண்டுள்ளது. சட்டத்தின் முக்கிய கூறுகள் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமாகும். நீதி மன்றங்களும் சட்டங்களை உருவாக்கலாம், அவை வழக்குச் சட்டம் என்று அழைக்கப்படுகின்றன, இப்படி உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான சட்டத்தை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப் படலாம்” என்றார் அவர்.

‘delegated’ (அல்லது subordinate) law என்றழைக்கப்படும் சட்டங்கள், அரசின் நிர்வாக பிரதிநிதிகளால் உருவாக்கப்படலாம். உதாரணமாக, நாடாளுமன்ற சட்டத்தின் அதிகாரத்தின் கீழ், ஒழுங்குமுறை வடிவத்தில் அமைச்சர்கள் சட்டத்தை உருவாக்குகிறார்கள்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை செயல் படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப் படுகின்றன. சட்ட விதிமுறைகளின் அடிப்படை ஆதாரமாக Statute law உள்ளது.
நம் நாட்டின் சட்ட அமைப்பு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் வரையறுத்த சட்டங்களையும் உள்ளடக்கியது. நடைமுறையில், இந்த அதிகார வரம்புகள் முழுவதும் வேறுபடும் சட்டங்கள் உள்ளன. ஆனால், federal மற்றும் மாநில அல்லது பிரதேச சட்டங்களுக்கு இடையே நேரடி முரண்பாடு இருந்தால், federal சட்டம் என்ன சொல்கிறது என்பது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த Chris Stone கூறுகையில், திருமணம் முதல் வரி விதிப்பு மற்றும் குடியேற்றம் வரை சில விடயங்கள், நீங்கள் ஆஸ்திரேலியாவில் எங்கு வாழ்ந்தாலும் ஒரே சட்டங்களால் தான் கட்டுப்படுத்தப் படுகின்றன என்கிறார்.
“பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், குடிவரவு போன்ற விடயங்கள் அரசியலமைப்பின் கீழ் federal அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பகுதிகள். அதனால்தான் நீங்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவோ அல்லது நிரந்தரமாக வசிப்பதற்கு வருகிறீர்களோ அதற்கான வீசாவைப் பெறுவது போன்ற விடயங்களை federal அரசு கையாள்கிறது – அவற்றிற்கு மாநிலச் சட்டங்கள் இல்லை” என்கிறார் அவர்.
ஆனால், சாலை போக்குவரத்துச் சட்டங்கள் போன்றவை மாநிலம் அல்லது பிரதேச அரசுகளால் தீர்மானிக்கப் படுவதால், அவை மாநிலத்திற்கு மாநிலம் வேறு படலாம்.
“ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிரதேசத்தைப் போலவே, தெற்கு ஆஸ்திரேலியாவில் சாலையில் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது தொடர்பான சட்டங்கள் உள்ளன. இது ஓட்டுநர் உரிமம் பெறுவது, ஒரு வாகனத்தை எவ்வாறு பதிவு செய்வது, எவ்வளவு வேகமாக வாகனங்களை ஓட்ட முடியும் என்பது போன்ற விடயங்களை உள்ளடக்கும்” என்கிறார் Chris Stone.

நம் நாட்டின் federal கூட்டாட்சி அமைப்பு, அதன் நீதிமன்ற கட்டமைப்புகளிலும் பிரதிபலிக்கிறது. நாட்டின் உயர் நீதிமன்றம், அனைத்து மட்டங்களிலும் மேல் முறையீடு செய்வதற்கான இறுதி மன்றமாக செயல் படுகிறது.
மீண்டும் இணைப் பேராசிரியர் Dr William Partlett விளக்குகிறார்.
ஃபெடரல் நீதிமன்றம் பல்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அதனுள் ஒரு தனிப் பிரிவாக குடும்ப நீதிமன்றம் இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் குடும்பச் சட்டம் நாடளாவிய அளவில் உள்ளது. தேசிய அதிகார வரம்பில், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (Magistrates court), கவுண்டி நீதிமன்றம் (County court), உச்ச நீதிமன்றம் (Supreme court), மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) என்று பல நீதிமன்றங்கள் உள்ளன. எனவே தேசிய அதிகார வரம்பில் உள்ள நீதி மன்றங்கள் மற்றும் மாநில அளவில் உள்ள நீதிமன்றங்கள் இவை இரண்டையும் , உயர் நீதிமன்றம் மேற்பார்வையிடுகிறது” என்கிறார் அவர்.
குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான விடயங்கள் மாநில அல்லது பிரதேச மட்டங்களுக்குள் கையாளப்படுகின்றன.
குற்றவியல் வழக்குகளில் சட்ட நடவடிக்கைகள் பொதுவாக அரசால் தொடங்கப் படுகின்றன. இருப்பினும், சொத்து தகராறுகள், ஒப்பந்தத்தை மீறுதல் மற்றும் தொழிலாளர் இழப்பீடு வழக்குகள் போன்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகராறுகள் சம்பந்தப்பட்ட Civil விடயங்களை இது உள்ளடக்காது.
இந்த வித்தியாசத்தை கோடிட்டுக் காட்டுகிறார் Law Council of Australia என்ற அமைப்பின் அடுத்த தலைவராக வரவிருக்கும் Greg McIntyre SC, அவர்கள்.

“குற்றவியல் விவகாரங்கள், பொதுவாக காவல்துறையில் தொடங்கப் படுகின்றன. அவர்கள் குற்றங்களை விசாரிக்கிறார்கள், பின்னர் அந்த அதிகார வரம்புகள் ஒவ்வொன்றிலும் உள்ள பொது வழக்குகளின் இயக்குநர் - Director of Public Prosecutions இடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன. மேலும், ஒருவர் மீது வழக்குத் தொடரலாமா வேண்டாமா என்பதை இயக்குநர் முடிவு செய்கிறார். சிவில் அமைப்பு வழக்கு விசாரணையின் அரசு ஈடுபடுவதில்லை” என்கிறார் Greg McIntyre SC.
சிவில் வழக்குகளைப் போலன்றி, குற்றவியல் விவகாரங்களுக்கு அரசு வழங்கும் சட்ட உதவி சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன, இதில் ஒவ்வொரு அதிகார வரம்பிலும் உள்ள Legal Aid Commissions சட்ட உதவிக் குழுக்கள் மற்றும் காமன்வெல்த் சட்ட நிதி உதவித் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த அமைப்புகள் எத்தனை வழக்குகளைக் கையாளலாம் என்ற எண்ணிக்கையில் வரம்புகள் உள்ளன. மேலும் சில சட்டப் பகுதிகளுக்கு மற்றவற்றை விட முன்னுரிமை அளிக்கப் படுகின்றன. குற்றப் பகுதிகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் இடங்கள் உள்ளன, சட்டப் பூர்வமாக வழங்கப்படுவதற்கு அதிக முன்னுரிமையைப் பெறுகின்றன. குடும்பச் சட்டம் தொடர்பான விடயங்களுக்கு சட்ட உதவி மிகக் குறைவாகவே கிடைக்கிறது” என்றார் அவர்.
சட்டபூர்வ பிரதிநிதித்துவம் தேவைப்படுபவர்கள், ஆனால் அதற்கான கட்டணங்களை செலுத்த முடியாதவர்கள் மற்றும் அரசு நிதியளிக்கும் சேவைகளைப் பெற தகுதியற்றவர்கள், குறைந்த விலையில் சேவை வழங்கும் வழக்குரைஞர்களைத் தேடலாம்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒரு வழக்குரைஞரை பணியமர்த்தும் போது, அவர்கள் உங்களுக்கு சேவை வழங்க தகுதியானவர்கள் தானா என்றும் அவர்கள் சான்றிதழ்கள் செல்லுபடியானவை தானா என்றும் சரி பார்ப்பது நல்ல நடைமுறை என்று Greg McIntyre விளக்குகிறார்.
“சட்டத் துறையில் பணியாற்றும் அனைவரும் தற்போதைய நடைமுறைச் சான்றிதழை ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் பொருந்தும் விதிமுறைகளின் கீழ் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அந்த நடைமுறைச் சான்றிதழ்களை வழங்கும் ஒரு சட்டப் பூர்வ அமைப்பு உள்ளது, மேலும் அந்த அமைப்புகளின் இணைய தளங்களில் நீங்கள் தேர்ந்தெடுத்தவர் சான்றிதழ் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதிப் படுத்தலாம்” என்கிறார் அவர்.

தேவை இருந்தால், நீங்கள் சமூக சட்ட மையங்களையும் நாடலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும், குடும்ப வன்முறை வழக்குகளுக்கு சட்டபூர்வ ஆதரவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற பெண்களுக்கான சட்ட சேவைகள் இதில் அடங்கும்.
சட்ட உதவி என்பது பாதிக்கப்பட்டவரைப் பிரதிநிதித்துவப் படுத்துவது மட்டுமின்றி, மேலதிகமான உதவிகளையும் உள்ளடக்கியது என்கிறார் தெற்கு ஆஸ்திரேலியாவின் சட்ட சேவைகள் ஆணையத்தைச் சேர்ந்த Chris Stone. ஒருவருடைய நிதி நிலை சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வகையான சட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன என்கிறார் அவர்.

“சட்ட உதவி என்ற வார்த்தையைக் கேட்டவுடன், வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதைப் பற்றி மட்டுமே பெரும்பாலான மக்கள் நினைக்கலாம். சில சட்டச் சிக்கல்களில் மட்டுமே அது தேவைப்படலாம். ஆனால், legal aid திட்டத்தில் பெரும்பாலான பிற உதவிகளை வழங்கப்படுகின்றன" என்று கூறிய அவர்.
சட்ட ஆலோசனையைப் பெறுவது எப்போதும் பரிந்துரைக்கப் படுகிறது என்கிறார் Chris Stone. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் சட்ட அமைப்பு உங்களுக்குத் தெரியாவிட்டால் நிச்சயமாக சட்ட ஆலோசனை பெறுவது நல்லது.
சில நேரங்களில், வேறு இடங்களில் சட்ட அமைப்பு அல்லது சட்ட செயல் முறைகள் மூலம் மோசமான அனுபவங்களைப் பெற்ற சிலர், ஆஸ்திரேலியா வந்த பின்னரும், அந்த பயத்தில், சேவைகளையோ ஆலோசனையோ பெறுவதை தவிர்க்கக் கூடும். ஆனால், ஆஸ்திரேலியாவில் சட்ட அமைப்பு எவ்வாறு செயல் படுகிறது என்பது குறித்து ஆலோசனை பெறுவது எப்போதும் ஒரு நல்ல யோசனையாகும்” என்று வலியுறுத்துகிறார் அவர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Visit ag.gov.au/legal-system/legal-assistance-services for a comprehensive list of legal assistance providers, including Legal Aid commissions and specialist domestic violence legal services.




