பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்புகளை விரும்புகிறார்கள், இருப்பினும் செலவு, பள்ளி கலாச்சாரம் அல்லது மதம் போன்ற காரணிகள் எந்தப்பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தை உண்டுபண்ணலாம்.
ஆஸ்திரேலியாவின் பள்ளி அமைப்பு பொதுவாக மூன்று பிரிவுகளாக உள்ளன: அரச பள்ளிகள், கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் சுயாதீன பள்ளிகள் அதாவது தனியார் பள்ளிகள்.
ஆனால் இவை அனைத்தும் மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தை வழங்குகின்ற அதேநேரம் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே செயல்முறைகளைப் பயன்படுத்தி அங்கீகாரம் பெற்றவர்கள் எனவும் வித்தியாசம் என்னவென்றால், சில பள்ளித்துறைகள் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடப்படுகின்றமையே எனவும் விளக்குகிறார் New England பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் Dr Sally Larsen.

பல்வேறு கட்டண நடைமுறைகள் இருப்பதால், தனியார் பள்ளிக் கட்டணம் கட்டுப்படியாகாத நிலையில் பல குடும்பங்கள் உள்ளூர் அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்கின்றன.
ஒரே விதிமுறைகளின்கீழ் நிர்வகிக்கப்படுவதால் மூன்று துறைகளிலும் சிறந்த பள்ளிகள் உள்ளன. எனவே, தமது குழந்தைக்கான பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர் எவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்?
தனியார் பள்ளிகளை தெரிவுசெய்கிறீர்கள் என்றால் அவற்றுக்கான கட்டணத்தை உங்களால் செலுத்த முடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுமெனவும் உங்கள் பிள்ளைக்கு மதத்துடன் இணைந்த கல்வி பின்னணி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அத்தகைய பள்ளிகளைத் தெரிவுசெய்யலாம் எனவும் கூறுகிறார் Monash பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Emerita Helen Forgasz.

அரச பள்ளிகளில் மதக் கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை, இருப்பினும் பள்ளிகள் மதக் கல்வித் திட்டங்களை நடத்த மத அமைப்புகளை அனுமதிக்கலாம்.
கத்தோலிக்க பள்ளிகள் நம்பிக்கை அடிப்படையிலான கல்வியை வழங்குகின்ற அதேநேரம் மதம் சாராத குடும்பங்களுக்கும் திறந்திருக்கின்றன. அவை சமூக இணைப்பு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துவதாகக் கருதப்படுகின்றன மற்றும் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் இவற்றுக்கான செலவு குறைவாகும்.
தனியார் பள்ளிக் கட்டணம் அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல், சீருடைக்கட்டணம், தொழிநுட்பதுறைசார் கட்டணம் என பல மறைக்கப்பட்ட செலவுகளும் உள்ளன என்று Dr Sally Larsen எச்சரிக்கிறார்.
இதேவேளை சில குடும்பங்கள் மத காரணங்கள் உட்பட சில காரணங்களுக்காக ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் தனித்தனியாக கல்வி கற்க வேண்டுமென விரும்புகிறார்கள்,
ஆனால் அரச பள்ளிகளைக்கொறுத்தவரை இதற்கான தெரிவு மிகவும் குறைவாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர் Emerita Helen Forgasz.
ஒற்றைப் பாலின பள்ளிகளின் நன்மைகளை தெளிவாக வரையறுக்கமுடியாவிட்டாலும் சமூக ரீதியாக சில குழந்தைகள் ஒற்றை பாலின சூழலில் மிகவும் வசதியாக உணர்கின்றனர்.
இருப்பினும் பெரும்பாலான ஆஸ்திரேலிய குழந்தைகள் அரசுத் துறையில் கல்வி கற்கிறார்கள். குறிப்பாக தொடக்கப் பள்ளி தரங்களில் 70 வீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும் சுமார் 20 வீதமானோர் கத்தோலிக்கப் பள்ளிகளிலும், 10 வீதம் அல்லது அதற்கும் குறைவானவர்கள் தனியார் பள்ளிகளிலும் சேர்கின்றனர் என Dr Sally Larsen சொல்கிறார்.

அனைத்து துறை பள்ளிகளை எடைபோடும் போது, தனியார் பள்ளிகள் சில சமயங்களில் குழந்தைகளுக்கு அரசு பள்ளிகளில் போதிய கல்வி கிடைக்காது என்ற கவலையை உருவாக்கக்கூடும் எனவும், ஆனால் தனியார் பள்ளிகள் செய்யக்கூடிய சந்தைப்படுத்தலைப்போல அரசுப் பள்ளிகளும் செய்வதற்கு அவர்களுக்கு நிதிஒதுக்கீடு இல்லையென்பதை நினைவில்கொள்ள வேண்டும் எனவும் சொல்கிறார் Dr Sally Larsen.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு முன் சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்று பேராசிரியர் Emerita Forgasz வலியுறுத்துகிறார்.
நீங்கள் கட்டணம் செலுத்துவதால் உங்கள் குழந்தைக்கு சிறந்த கல்வியைக் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம் இல்லை என்கிறார் அவர்.
உங்கள் பிள்ளைக்கு உடல் ரீதியாக அல்லது அறிவுசார் விசேட தேவைகள் இருந்தால், எல்லாப் பள்ளிகளும் பொருத்தமாக இருக்காது என்பதால் பெற்றோர்; சரியான கேள்விகளைக் கேட்பது முக்கியம்.
உங்களது விருப்பத்தெரிவாக ஏதேனுமொரு பள்ளி காணப்பட்டால் அந்தப் பள்ளியை நேரில் சென்று பார்வையிடலாம்.
எதுஎப்படியிருப்பினும் உங்கள் குழந்தை பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் மனதில்கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் பேராசிரியர் Emerita Forgasz, எந்த நிலையிலும் உங்கள் தெரிவை மாற்றிக்கொள்ளமுடியும் என கூறுகிறார்.
பள்ளிக் கல்வி தெரிவுகளைப் பார்க்கும்போது, சலுகைகள் மற்றும் ஒப்பீடுகளுக்கான Good Schools Guide அல்லது My School இணையதளம் போன்ற ஆதாரங்களைப் பார்வையிடலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




