ஆஸ்திரேலியாவில் பூனை வளர்ப்பவர்களுக்கு உள்ள பொறுப்புகள் எவை?

SG CAT Ownership 1.jpg

Keeping your pet cat contained indoors keeps them safe and protects wildlife too.

ஆஸ்திரேலியாவில் ஒரு வளர்ப்புப் பூனையின் பொறுப்பான உரிமையாளராக இருப்பதில் என்னனென்ன அடங்கியிருக்கிறது என்பது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


பூனை ஒரு அற்புதமான செல்லப்பிராணியாக பார்க்கப்படுகிறது. மனநல மேம்பாட்டுக்கு உதவும் அதேநேரம் நல்லதொரு தோழமை உணர்வையும் தரக்கூடிய இப்பூனைகளை வளர்ப்பது பல்வேறு பொறுப்புகளையும் உள்ளடக்கியது.

உரிய முறையில் வளர்க்கப்படாமல் வீடுகளுக்கு வெளியே அலைய விடப்படும் பூனைகளால் வீதிவிபத்துகள், பூனைச் சண்டைகள் மற்றும் நோய்கள் ஏற்படலாம் என்பதால் இவ்விடயம் கவனமாக அணுகப்படவேண்டும்.

எனவே, ஆஸ்திரேலியாவில் ஒரு வளர்ப்புப் பூனையின் பொறுப்பான உரிமையாளராக இருப்பதில் என்னனென்ன அடங்கியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அண்டார்டிகாவைத் தவிர, உலகில் தனக்கென பூனை இனங்களைக் கொண்டிராத ஒரே கண்டம் ஆஸ்திரேலியா. ஆனால் ஆஸ்திரேலிய குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் செல்லப்பிராணிகளாக பூனைகளைக் கொண்டுள்ளனர். அதாவது சுமார் 5.3 மில்லியனுக்கும் அதிகமான பூனைகள் செல்லப்பிராணிகளாக ஆஸ்திரேலியாவில் உள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள பூனை உரிமையாளர்கள் தமது செல்லப்பிராணிகளை காணிகள் மற்றும் வெளிப்புறங்களில் அலைந்து திரியவிடும்போது, பல்லிகள் மற்றும் தவளைகள் உட்பட ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான பல விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.

சுற்றித் திரியும் ஒவ்வொரு வளர்ப்புப் பூனையும் ஆண்டுக்கு 186 விலங்குகளைக் கொல்வதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் இது பெரும்பாலும் அப்பூனை உரிமையாளர்களால் கவனிக்கப்படுவதில்லை.

ஆஸ்திரேலியாவிற்குச் சொந்தமான வனவிலங்குகளில் வளர்ப்புப் பூனைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர, மில்லியன் கணக்கான காட்டுப் பூனைகளும் ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றித் திரிகின்றன.

Charles Darwin பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பேராசிரியராகவும், Biodiversity கவுன்சிலராகவும் உள்ள Sarah Legge, ஆஸ்திரேலியாவின் வனவிலங்குகளில் பூனைகளின் தாக்கங்களை ஆய்வு செய்வது உட்பட பாதுகாப்பு பிரச்சினைகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும் எனவும் ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுப் பூனைகள் மக்களைச் சார்ந்து வாழாதவை எனவும், இவற்றில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள காடுகள் மற்றும் புதர்களில் வாழ்கின்றன எனவும் பேராசிரியர் Sarah Legge தெரிவித்தார்.
SG CAT Ownership 2.jpg
Cats make great companions and will happily let you live beside them.
ஆஸ்திரேலியாவின் வனவிலங்குகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு காட்டுப் பூனைகள் பெரும் பங்கு வகிக்கும் அதேநேரம் பல பூர்வீக வனவிலங்கு இனங்களின் அழிவுக்கும் காரணமாகின்றன.

ஆஸ்திரேலிய கண்டத்தில் குடியேறவென 1788ம் ஆண்டு பிரிட்டன் நாட்டவர் கப்பல்களில் முதன்முதலாக வந்திறங்கிய போது ஆஸ்திரேலியாவிற்கு பூனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் பெர்த் மற்றும் ஹோபார்ட் உட்பட பிற இடங்களுக்குப் பரவிய இக்காட்டுப் பூனைகள் இருபதுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு இனங்களை அழித்ததில் முதன்மையான குற்றவாளியாக உள்ளன.

ஆஸ்திரேலியாவின் தனித்துவமான வனவிலங்குகளில் வளர்ப்புப் பூனைகள் மற்றும் காட்டுப் பூனைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை சேர்த்துப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் பூனைகள் 3.1 மில்லியன் பாலூட்டிகள், 1.8 மில்லியன் ஊர்வன மற்றும் 1.3 மில்லியன் பறவைகளைக் கொன்று வருகின்றன.

பூனைகளால் ஏற்படும் இத்தகைய வியக்கத்தக்க அளவு பாதிப்பானது மேலும் பல பூர்வீக வனவிலங்கு இனங்களின் முடிவுக்கு வழிவகுக்கலாம் என பேராசிரியர் Sarah Legge எச்சரிக்கிறார்.

காட்டுப் பூனைகள் ஒரு பாரிய பிரச்சனை என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றபோதிலும் வளர்ப்புப் பூனைகளால் ஏற்படும் பாதிப்புகளை நாம் உணர்வதில்லை எனவும், வெளியில் சுற்றித் திரிவதற்கு அனுமதிக்கப்படுகின்ற பூனைகள், பல அரிய உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்பது அப்பூனையின் உரிமையாளருக்கு தெரியாமலிருக்கலாம் எனவும் பேராசிரியர் Sarah Legge சுட்டிக்காட்டுகிறார்.
SG CAT Ownership 3.jpg
Feral Cat in Arid South Australia. Credit: Hugh McGregor
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவில் ஒரு பொறுப்பான பூனை உரிமையாளராக இருப்பது என்பது என்ன?

ஒவ்வொரு பூனை உரிமையாளரும் செய்யக்கூடிய பல முக்கிய செயல்கள் உள்ளன என்று கூறும் பேராசிரியர் Sarah Legge, இது வளர்ப்புப் பூனைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதேநேரம் வனவிலங்குகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்கிறார்.

குறிப்பாக உங்கள் பூனையைப் பதிவுசெய்து அதற்கு மைக்ரோசிப் பொருத்துவது முதல், அது வெளிப்புறங்களில் அலைந்து திரிவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வரை, பலவற்றை செய்வதன் மூலம் பூனை வளர்ப்பை சமூகப்பொறுப்புடன் மேற்கொள்ளலாம் என அவர் ஆலோசனை சொல்கிறார்.

பூனைகளை வீட்டிற்குள் வைத்திருப்பது பூர்வீக வனவிலங்குகள் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அவை வீட்டு எல்லைக்குள் இருப்பதால் வீதி விபத்துகள் மற்றும் பூனைச்சண்டைகளில் சிக்குவதும், வேறு விலங்குகளிடமிருந்து நோய்களைக் காவிவருவதும் தடுக்கப்படும்.

நீங்கள் ஒரு பூனையை வளர்த்துவந்தால் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் அதை தவறாமல் காண்பிப்பது உங்கள் பூனை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவும்.

பூனை உரிமையாளர்களுக்கான சுகாதாரத் தகவல்களைப் பெறுவதற்கான முதன்மை ஆதாரமாக கால்நடை மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவ சங்கத்தின் மேற்கு ஆஸ்திரேலியா பிரிவின் தலைவராக உள்ள கால்நடை மருத்துவர் Dr Garnett Hall.

தமக்குள் சண்டையிடும் வழக்கம் பூனைகளுக்கு உள்ளதால், உங்களது வளர்ப்புப் பூனை வெளியில் சுற்றித் திரியும்போது தேவையற்ற சண்டைக்குள் இழுக்கப்பட்டு காயங்கள் மற்றும் நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக Dr Garnett Hall விளக்குகிறார்.
SG CAT Ownership 5.jpg
Impacts of urban cats in Australia. Threatened Species Recovery Hub. Note the estimate of the pet cat population shown in this poster (4.9 million) has been surpassed; recent surveys put the figure at 5.3 million.
இதனால் உங்கள் செல்லப் பூனையை வீட்டிற்குள் வைத்திருப்பது முக்கியம், மேலும் உங்கள் பூனை சிறந்த தோழமை என்பதைத் தவிர்த்து, அதனை உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதுவது முக்கியம் என்று Dr Garnett Hall கூறுகிறார்.

எங்களைப் போலவே அவற்றுக்கும் பாதுகாப்பான வீட்டுச் சூழல், வழக்கமான ஆரோக்கியமான உணவு, தடுப்பூசிகள் மற்றும் நிறைய அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நல்ல சுகாதாரம் தேவை என அவர் வலியுறுத்துகிறார்.

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, ஒரு செல்லப்பிராணியாக பூனையை வளர்ப்பதற்கான சட்டங்கள் மாறுபடும் என Charles Darwin பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பேராசிரியராகவும், Biodiversity கவுன்சிலராகவும் உள்ள பேராசிரியர் Sarah Legge விளக்குகிறார்.

உங்கள் உள்ளூர் பகுதியில் உள்ள சட்டங்களைப் பற்றி அறிய, உங்கள் கவுன்சில் இணையதளத்தைப் பார்ப்பதே சிறந்த வழியாகும்.

பல உள்ளூர் கவுன்சில்கள் செல்லப் பிராணிகளுக்கான desexing திட்டங்கள் அல்லது இலவச மைக்ரோசிப்பிங் திட்டங்களுக்கு மானியம் வழங்குகின்றன.

இதேவேளை ஒரு வளர்ப்புப் பூனை உரிமையாளராக பொறுப்புடன் நடந்துகொள்வது அந்த நபருக்கும் பூனைக்கும் மற்றும் சூழலிலுள்ள உயிரினங்களுக்கும் நன்மைபயக்கும் என Sarah Legge கூறுகிறார்.

வளர்ப்புப் பூனை உரிமையாளராக பொறுப்புடன் இருப்பது எப்படி என்பது பற்றிய கூடுதல் தகவல் வேண்டுமா? பின்வரும் இணைப்புகளைப் பார்க்கவும்:

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand