கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள முனாம்பாக்கத்தில் இருந்து கடந்த ஜனவரி 12ஆம் தேதி 243 பேருடன் படகு ஒன்று நியூசிலாந்து நோக்கி புறப்பட்டுச் சென்ற செய்தியை எமது இணையத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
ஆனால் அச்செய்தி வெளியாகிய நாள் முதல் இன்றுவரை அப்படகுக்கு என்ன நடந்தது அது இடைமறிக்கப்பட்டதா? அல்லது திருப்பியனுப்பப்பட்டதா? அல்லது இடையில் எங்காவது விபத்திற்குள்ளானதா என எவ்வித தகவல்களும் இல்லாமல் மர்மமான ஒன்றாக காணப்படுகின்றது.
நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட இப்படகில் பயணம் செய்த 243 பேரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என சொல்லப்படும் நிலையில் படகில் சென்றவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் அவர்களது உறவினர்கள் கலங்கிப்போயுள்ளனர்.
குறித்த படகில் பயணம் செய்தவர்களில் 184 பேர் டெல்லியிலிருந்து சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக டெல்லியில் வாழ்ந்துவந்தவர்கள் ஆவர். படகில் சென்ற ஏனையவர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் என நம்பப்படுகிறது.
நியூசிலாந்தில் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சொன்னதாகவும் அதை நம்பி தனது 3 மகன்கள் அவர்களது மனைவிமார் மற்றும் 4 பேரக்குழந்தைகள் குறித்த படகில் ஏறிச் சென்றதாக தெரிவித்தார் திரு.கனகலிங்கம்.
அதேபோன்று கஸ்தூரி என்ற பெண்ணின் 2 மகன்கள் மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களும் இப்படகில் சென்றிருக்கிறார்கள்.
நியூசிலாந்தில் புதிய வாழ்வு காத்திருக்கிறது என்ற ஆசையில் படகிலேறி புறப்பட பலர் ஆயத்தமானபோதும் ஆட்கள் அதிகமானதால் பலரையும் விட்டுவிட்டு படகு புறப்பட்டிருக்கிறது. இப்படி கடைசி நேரத்தில் படகில் ஏறமுடியாமல் பேனவர்களில் ஒருவர் பிரபு ஆவார்.
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு தனது குடும்ப சகிதம் 72 பேருடன் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து திருப்பியனுப்பபபட்ட பிரபு மீண்டும் நியூசிலாந்து செல்வதற்கு முயற்சித்திருக்கிறார்.
பிரபுவும் அவரது குடும்பமும் தேவமாதா எனப்பெயரிடப்பட்ட படகில் பயணப்படாதுவிட்டாலும் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவர் அண்ணன் மகன் என பல உறவினர்கள் அப்படகில் சென்றிருக்கிறார்கள். இவர்களில் பிறந்து 12 நாட்களேயான குழந்தையும் அடக்கம்.
கிட்டத்தட்ட 6 மாதங்களாகியும் குறித்த படகுடன் எவ்வித தொடர்புகளும் இல்லாத பின்னணியில் இது தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வரும் அதேநேரம் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சகமும் பல நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. தமது உறவினர்களின் நிலைதொடர்பில் கேரள பொலிஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு அப்படகு தொடர்பில் எவ்வித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தாhக சொல்கிறார் திரு.கனகலிங்கம்.
தேவமாதா படகு மாயமான விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்துவரும் நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு துறை தகவல் தொடர்பாளர் ரவீஷ் குமார், குறித்த படகு பசிபிக் கடல் பகுதியை நோக்கி சென்றதாக கேரள அரசு கூறிய தகவலின் அடிப்படையில் பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் அந்த நாடுகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமது உறவினர்கள் நலமாக இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தாலே போதுமானது எனச் சொல்கிறார்கள் தமது உறவினர்களைத் தொலைத்துள்ள கனகலிங்கம், கஸ்தூரி மற்றும் பிரபு ஆகியோர்.
இதேவேளை குறித்த படகில் பயணப்பட்டு வந்தவர்களின் உறவினர்கள் பலர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவிரும்புவதாக சொல்கிறார்கள் திரு.ராமன் மற்றும் சந்திரகுமாரி ஆகியோர்.
குறித்த படகு தொடர்பில் நியூசிலாந்து அரசோ ஆஸ்திரேலிய அரசோ எவ்வித தகவல்களையோ கருத்துக்களையோ வெளியிடவில்லை. இது தொடர்பில் பதிலளிக்குமாறு ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகர்பு பிரிவினரை நாம் தொடர்புகொண்டபோதும் அவர்கள் இன்னமும் பதிலளிக்கவில்லை.






