Capital gains tax (CGT) என்பது சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்குப் பயன்படுத்தப்படும் வரியாகும். ஒரு சொத்தை விற்கும் போது உங்களுக்கு மூலதன ஆதாயம் (லாபம்) இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த வரியில் இதுவும் பங்களிக்கும்.
ஜூன் 30 அன்று ஆஸ்திரேலிய நிதியாண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படும் உங்கள் வருமான வரிக் கணக்கில் இந்த வரி அடங்கும்.
சொத்து அல்லது பங்குகள் போன்ற மூலதன சொத்துக்களை நீங்கள் விற்றிருந்தால், அதன் மூலம் நீங்கள் லாபமோ நட்டமோ அடைந்திருந்தால் உங்கள் தற்போதைய வருமான வரிக் கணக்கில் அதை அறிக்கையிடுவதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்க முடியும்.
Capital gains tax- மூலதன ஆதாய வரி என்ற தனியான பெயர் இருந்தாலும், அது உங்கள் வருமான வரியின் ஒரு பகுதியாகும்.
அந்தவகையில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் வருமானத்தில் மூலதன ஆதாயங்கள் மற்றும் இழப்புகள் இரண்டையும் அறிவிக்க கடமைப்பட்டுள்ளனர், பின்னர் இதனுடன் தொடர்புடைய வரிக் கடமைகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் அனைத்து வரிவிதிப்பு மற்றும் வருவாய் சேகரிப்பு அம்சங்களை ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) கட்டுப்படுத்துகிறது.

பெரும்பாலான மக்கள் தங்கள் வருடாந்திர வரித்தாக்கலைச் செய்ய வரிமுகவர்களை அல்லது கணக்காளர்களை ஈடுபடுத்துகின்றனர்.
இந்நிலையில் சொத்து, பங்குகள், கிரிப்டோகரன்சி அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை விற்றால் கிடைக்கும் லாபத்தின் மீது அரசால் விதிக்கப்படும் வரியே மூலதன ஆதாய வரி எனவும் இது வெளி நாட்டில் உள்ள சொத்துக்களையும் உள்ளடக்குவதாகவும் கூறுகிறார் மெல்பனை சேர்ந்த chartered accountant மனோஜ் குப்தா.
இதில் கிடைத்த லாபம் உங்கள் சம்பளம் அல்லது வணிக வருமானம் மற்றும் ஒரு சொத்தை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபம் உட்பட நிதியாண்டிற்கான உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்துடன் சேர்க்கப்படும்.
ஒரு சொத்தின் விற்பனையின் மீது செலுத்த வேண்டிய வரியின் அளவாக காணப்படும் இந்த Capital gains tax, வரி செலுத்துபவரின் தனிப்பட்ட வருமான வரி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உங்களுக்கு விதிவிலக்குகள் எதுவும் இல்லாதவரை, உங்கள் கடமைகளை நிறைவேற்றி, சரியான அளவு வரியைச் செலுத்துவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு சொத்தின் மூலமும் பெற்ற மூலதன ஆதாயம் அல்லது மூலதன இழப்பை நீங்கள் கணக்கிட வேண்டும்.
பெரும்பாலான ரியல் எஸ்டேட் விற்பனையிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு Capital gains tax விதிக்கப்பட்டாலும், சில சந்தர்ப்பங்களில் -உதாரணமாக தான் வாழ்ந்த வீட்டை விற்பது போன்ற சந்தர்ப்பத்தில் - இவ்வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக மனோஜ் குப்தா விளக்குகிறார்.

பல சந்தர்ப்பங்களில், நீங்கள் செலுத்த வேண்டிய Capital gains taxஇல் தள்ளுபடியையும் பெறலாம்.
குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு அந்தச் சொத்து உங்களிடம் இருந்திருந்தால், மற்றும் வரி செலுத்தும் ஆஸ்திரேலிய குடியிருப்பாளராக நீங்கள் இருந்தால், குறித்த சொத்தை நீங்கள் விற்கும்போது, உங்கள் Capital gains tax பொறுப்பை 50 சதவீதம் குறைக்கலாம்.
ஆனால் வேண்டுமென்றே Capital gains tax ஐத் தவிர்க்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில், ஆஸ்திரேலிய வரி அலுவலகம் அபராதம் விதிக்கலாம்.
மக்கள் சரியானதைச் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, வங்கிகள், மாநில வருவாய் அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குப் பதிவேடுகள் போன்ற பல நிறுவனங்களிலிருந்து வருமானத் தரவு மற்றும் பிற தரவைத் தாம் பெறுவதாக ஆஸ்திரேலிய வரி அலுவலகத்தில் உதவி ஆணையராக உள்ள Tim Loh கூறுகிறார்.
தங்கள் வரிக் கணக்கில் மூலதன ஆதாயத்தை அறிவிக்கவில்லை என்றால் குறிப்பிடத்தக்க அபராதங்கள் விதிக்கப்படலாம் என்பதால் சரியான முறையில் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வது முக்கியம் என அவர் வலியுறுத்துகிறார்.
மற்ற வரிகளைப் போலவே, Capital gains tax ஐ உட்படுத்திய வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களுக்கான அபராதங்களும், ஒவ்வொரு வகையான நடத்தைக்கு ஏற்ப அதற்கு விதிக்கப்படும் அபராதத்தின் சதவீதம் மாறுபடும். அபராதங்களுக்கு கூடுதலாக, வரி அலுவலகம் வட்டியும் வசூலிக்கலாம்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் அடிப்படையில், அபராதம் tax shortfallஇல் 25 முதல் 100 சதவீதம் வரை இருக்கலாம் என்று Tim Loh கூறுகிறார்.
வேண்டுமென்றே மற்றும் மீண்டும் மீண்டும் வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எனினும் சொத்து அல்லது பங்குகள் போன்றவற்றை விற்கும்போது வரி ஏய்ப்பு செய்வது மிகவும் அரிதானது என மனோஜ் குப்தா விளக்குகிறார்.
சிலருக்கு Capital gains tax தொடர்பில் தவறாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நம்பினால் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டின்போது நீங்கள் வழங்கும் தகவல்கள் வரி அலுவலகத்திற்கு நியாயமாகப்பட்டால் குறித்த அபராதம் சில சூழ்நிலைகளில் குறைக்கப்படலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம்.
Capital gains tax உட்பட அனைத்து வரிக் கடமைகளையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது எனவும் ஏனெனில் அது நமது சமூகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் Tim Loh வலியுறுத்துகிறார்.
லாபம் ஈட்டினால் மட்டுமே Capital gains tax விதிக்கப்படும் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, சில சமயங்களில் நட்டம் ஏற்பட்டாலும் இது விதிக்கப்படலாம். இது capital loss என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய நிலை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்றபோதிலும் முதலீட்டுச் சொத்துக்கான செலவுகள் குறிப்பாக depreciation, maintenance போன்றவற்றை deductions ஆக அதிகளவில் கோரும்போது இந்நிலை எழுகிறது.
ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை ஒவ்வொரு வருமான ஆண்டுக்கும் வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி அலுவலகத்தின் இணையதளம் 36 மொழிகளில் வரி தொடர்பான பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.







