கலாச்சார அதிர்ச்சி, உறவினரைப் பிரிந்ததால் ஏற்படும் மனச்சோர்வு அல்லது மொழித் தடைகளால் ஏற்படும் சிரமங்களின் அழுத்தங்களை சகித்துக்கொண்டு, வெளிநாட்டு சூழலுக்கு ஏற்ப மாறுவது என புலம்பெயர்ந்தவர்களுக்கு பல வழிகளில் கவலைகள் ஏற்படக்கூடும் என்கிறார் Beyond Blue Clinical Lead Dr Grant Blashki
புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படும் துக்கம் பெரும்பாலும் தெளிவற்ற மற்றும் வரையறுக்கப்படாத ஒரு வகையான இழப்பின் தன்மையால் மேலும் அதிகரிக்கப்படுகிறது.
மேலும் இவர்கள் ஒரே நேரத்தில் காலநிலை, புவியியல், மொழி கலாச்சாரம் என பல இழப்புகளை அனுபவிப்பதாக Dr Grant Blashki விளக்குகிறார்.

புலம்பெயர்ந்தோர் மத்தியிலான துக்கம் பெரும்பாலும் கணக்கிட முடியாத இழப்பு மற்றும் யதார்த்தம் ஆகிய இரண்டின் கலவையிலிருந்து உருவாகிறது என்கிறார் புதிதாக குடியேறிய அகதிகளுக்கான மனநல ஆதரவை வழங்கும் அமைப்பான NSW Service for the Treatment and Rehabilitation of Torture and Trauma Survivors (STARTTS) தலைமை நிர்வாக அதிகாரி Clinical Psychologist Jorge Aroche
தமது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் இன்னமும் தமது தாய்நாட்டில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கிறார்கள் என்ற குற்ற உணர்வு அகதிகளாக இங்கு குடியேறியவர்கள் மத்தியில் எழக்கூடிய மற்றொரு பிரச்சினை என சுட்டிக்காட்டப்படுகிறது.
சில புலம்பெயர்ந்தோர் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் கலவையான உணர்வுகளை அனுபவிப்பதாக மனநல நிபுணர்கள் கூறுகின்றனர், இது முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுப்பதில் தாமதத்திற்கு பங்களிக்கும், இது அவர்களின் எதிர்காலத்திற்கு இடையூறாக இருக்கலாம்.

அவர்களுக்கான ஆதரவு வலையமைப்புகள் இல்லாததால் தனிமை, பதட்டம் மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகளை அதிகப்படுத்துகிறது.
இந்தியாவில் பிறந்த தனக்கு முதலில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோது, தான் எங்கு பொருந்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில், தனது அடையாளத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் புலம்பெயர்வைச் சுற்றிய உணர்வுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைக் கற்றுக்கொண்டதாகவும் R-U-OK அமைப்பின் தலைவர் கமல் ஷர்மா கூறுகிறார்.
இப்படியான சந்தர்ப்பங்களில் நீங்கள் வசிக்கும் பகுதிகளில் இடம்பெறும் உள்ளூர் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பது மற்றும் குழு விளையாட்டுகளில் ஈடுபடுவது என பல நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் ஊக்குவிக்கிறார்.
அதேநேரம் ஒரே கலாச்சாரப் பின்னணியில் உள்ளவர்களுடன் பழகுவது புதிதாக புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலையும் உறுதியையும் அளிக்கும் என்பதை ஒப்புக்கொண்டாலும், புதிய நபர்களுடனும் பழகுவது சமமாக முக்கியமானது என்று அவர் நம்புகிறார்.

எதுஎப்படியிருப்பினும் புலம்பெர்தல் தொடர்பான துக்கத்தை அனுபவிப்பவர்கள் அதுதொடர்பில் அதீத பாதிப்பிற்கு உள்ளானால் உதவியை நாடுமாறு மனநல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
புலம்பெயர்ந்தோர் மத்தியில் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகள் பல ஆண்டுகளாக அடிக்கடி வந்து மறைந்தாலும், கட்டுப்படுத்தப்படாமல் போகும் நீடித்த துக்கம் மிகவும் தீவிரமான ஒன்றாக உருவாகலாம் என்று Beyond Blue Clinical Lead Dr Grant Blashki விளக்குகிறார்.
நீங்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் GP ஐப் பார்வையிடலாம் அல்லது Lifeline அல்லது Beyond Blue போன்ற மனநல உதவிமையங்களை அழைக்கலாம்.
இருப்பினும், தேவைப்படும்போது உங்கள் இழப்பை உணரவும் புரிந்துகொள்ளவும் நேரம்கொடுப்பது முக்கியம் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

துக்கத்தை உணர்வது பலவீனம் அல்லது தைரியமின்மைக்கு சமமாகாது எனவும் இழப்பின் உணர்வுகளை நிர்வகிப்பதற்கான எளிய சூத்திரம் எதுவும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தனிப்பட்ட மற்றும் சிக்கலானது என்பதால் பழையதை விட்டுவிட்டு புதியதற்கு இடம் கொடுப்பது முக்கியம் எனவும் நீங்கள் ஒரு புதிய சூழலில் மீண்டும் முழுமையடைய ஆரம்பிக்கிறீர்கள் என்பதை உணர்வது முக்கியம் எனவும் Dr Grant Blashki வலியுறுத்துகிறார்.

உங்களுக்கு உளநல ஆதரவு தேவைப்பட்டால், Lifelineஐ 13 11 14 13 11 14 என்ற எண்ணிலோஅல்லது Beyond Blueஐ 1800 22 46 36 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்..
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




