Key Points
- ஆவேசமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை சீற்றம் ஆகியவை தனிப்பட்ட மற்றும் வெளிப்புற காரணிகளால் தூண்டப்படலாம்
- சாலை சீற்ற சம்பவத்தில் நீங்கள் அகப்பட்டிருந்தால், சீற்றமடைந்தவருக்குப் பதிலடி கொடுக்க முயற்சிக்காதீர்கள்
- மற்றைய ஓட்டுநர்கள் தவறாக வாகனங்களை ஓட்டுவதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டுமென்பதை மனதில் கொண்டு கோபப்படாமல் நடப்பது சாலச் சிறந்தது
கோபம், சோர்வு, கவனயீனம் அல்லது மன அழுத்தம் போன்ற உணர்வுகள் எல்லாமே எம் மனதின் பொதுவான நிலைகள், ஆனால் அவை பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதைப் பாதிக்கலாம்.
ஒருவர் ஆவேசமாக வாகனம் ஓட்டுவதற்கு கோபமோ விரக்தியோ காரணமாக இருக்கலாம்.
சாலை சீற்றதைத் தூண்டுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன என்பதை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக உளவியல் துறை இணைப் பேராசிரியர் James Kirby அடையாளம் கண்டுள்ளார்.
அவை ஒருவரைப் பற்றிய சில தனிப்பட்ட காரணிகளாக இருக்கலாம், அல்லது மற்றவர் பற்றிய ஒருவித தப்பெண்ணமாக இருக்கலாம். மற்றவரின் பாலினம் அல்லது அவர்கள் தோற்றம் போன்ற விடயங்களாக இருக்கலாம். நேர அழுத்தம் போன்ற பிற காரணிகளும் சாலை சீற்றத்திற்குப் பெரும் பங்கு வகிக்கின்றன. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைந்து செல்பவர்கள், போக்குவரத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், சாலையில் மற்றவர்கள் வேண்டுமென்றே ஏதாவது செய்கிறார்கள் என்று நம்பி சீற்றம் கொள்ளக் கூடும் என்கிறார் அவர்

ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களிலிருந்து இறங்கி சண்டையில் ஈடுபடுவது தான் ஊடகங்களில் பரவலாகச் சித்தரிக்கப்படும் மிகவும் பொதுவான சாலை சீற்றத்தின் உதாரணம்.
இருப்பினும், பேராசிரியர் James Kirby குறிப்பிடுவது போல், இது ஆவேசமான ஓட்டுநர் நடத்தையின் தீவிர முடிவைக் காட்டுகிறது. வாய்ச் சண்டை முதல் போக்குவரத்து குற்றங்கள் வரை சாலை சீற்றம் பல வகைகளில் இருக்கலாம்.
தாம் வாகனத்தைத் திறம்பட கட்டுப்பாட்டுடன் ஓட்டுகிறோம் என்ற தவறான உணர்வு சில ஓட்டுநர்கள் சாலை சீற்ற நடத்தைக்கு வழிவகுக்கும் என்கிறார் அவர்.

பொதுவான சாலை சீற்ற நடத்தைகள் எவை என்று பார்த்தால், வேண்டுமென்றே வாகனத்தின் வேகத்தை திடீரெனக் குறைப்பது, அல்லது நிறுத்துவது, மற்றொரு வாகனத்தை மிக நெருக்கமாகப் பின் தொடர்வது, அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுவது, மற்ற ஓட்டுநர்களை வழியிலிருந்து நகர்த்துவதற்காகப் பிரதான விளக்குகளை ஒளிரச் செய்வது அல்லது பளிச்சிடுவது மற்றும் tailgating என்று சொல்லப்படும் வகையாக இன்னொரு வாகனத்தைப் பின்னொட்டிச் செல்வது ஆகியவை அடங்கும்.
RACV என்று பிரபலமாக அறியப்படும் Royal Automobile Club of Victoriaவின் கொள்கை வகுப்புத் தலைவராகக் கடமையாற்றும் James Williams கூறுகையில், விக்டோரிய மாநிலத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பின்னொட்டிச் சென்றதற்காக சுமார் 2,000 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்கிறார். பின்னொட்டிச் செல்வது என்றால் என்ன என்பதை அவர் விளக்கிச் சொன்னார்.

சாலை சீற்றம் ஒரு குற்றம் அல்ல; இருப்பினும், சாலை பாதுகாப்பை சமரசம் செய்யும் விதமாக, ஆவேசமான வாகனம் ஓட்டுவது தொடர்பான செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, விக்டோரிய மாநிலத்தில், tailgating என்று சொல்லப்படும் வகையாக இன்னொரு வாகனத்தைப் பின்னொட்டிச் செல்லும் குற்றவாளிகளுக்கு, 248 டொலர்கள் மற்றும் ஒரு demerit point அபராதம் விதிக்கப்படும்.
சாலை சீற்றம் ஏற்பட்டால், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம் என்று James Williams கூறுகிறார்.
சாத்தியமான சாலை சீற்ற சூழ்நிலையை எதிர் கொள்ளும்போது, அமைதியாக இருப்பது, மற்றும் அதிகரிக்கும் முன் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
நீங்கள் சாலை சீற்ற சூழ்நிலையை எதிர்கொண்டால், உங்களை அமைதிப்படுத்தி, அந்த சூழ்நிலையிலிருந்து உங்களை அகற்றுவதே சிறந்த செயலாகும். மற்றைய ஓட்டுனரைக் கடந்து செல்ல அனுமதிப்பது, பாதுகாப்பாக ஒரு இடத்தில் தரித்து நிற்பது, போன்ற செயல்கள், நிலைமையை அமைதிப்படுத்த, எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளுக்குள் அடங்கும்.

சாலை சீற்றம் சம்பவங்கள் பற்றிய அதிகார பூர்வ புள்ளிவிவரங்கள் நாடு முழுவதும் கிடைக்கவில்லை. இருப்பினும், 2024 ஆம் ஆண்டு Finder என்ற தளத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் நான்கு ஆஸ்திரேலியர்களில் மூன்று பேர் சாலை சீற்றத்தை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.
சாலை சீற்றத்தின் விளைவாக ஏற்படும் பொருள் சேதத்தை வாகன காப்பீடு ஈடு செய்யும் மற்றும் பொதுவாக இது குற்றம் புரிந்தவர்களின் வாகன காப்பீட்டு நிறுவனம் தான் அந்த செலவிற்குப் பொறுப்பேற்கும். Finder’s இன் காப்பீட்டு நிபுணர் Tim Bennett விளக்குகிறார்.
ஒரு வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், இரண்டு வாகனங்களும் நின்று ஒருவருக்கொருவர் மற்றவர் குறித்த விவரங்களைப் பெறுவதுதான் அனைவருக்கும் சிறந்த விளைவு என்று கூறலாம் என்று கூறிய அவர், அது எப்போதும் சாத்தியமில்லை என்றும் கூறுகிறார். குறிப்பாக, யாராவது ஆவேசமாக இருந்தால், முடிந்தவரை விரைவாக என்ன நடந்தது என்பதை ஆவணப்படுத்த முயற்சிக்கவும் என்றும், குறைந்த பட்சம், மற்ற வாகனத்தின் உரிமத் தகடு எண்ணை முடிந்தவரை பெற்று விரைவாகப் பெற முயற்சிக்கவும் என்கிறார் அவர்.

சாலை சீற்றத்தில் குற்றம் புரிந்தவர் என மதிப்பிடப்படுபவரின் வாகன காப்பீட்டுத் தொகை premium பொதுவாக அதிகரிக்கும்.... ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதில் பாதிக்கப்பட்டவரது வாகன காப்பீட்டுத் தொகையும் சில வேளைகளில் அதிகரிக்கப் படலாம்.
சாலை சீற்றம் ஏற்படும் சூழ்நிலையில், ஓட்டுநர் அந்த நடத்தையை வெளிப்படுத்தும் போது அந்த வாகனத்தில் பயணிக்கும் ஒரு பயணியாக நீங்கள் இருந்தால், உங்களால் எதுவும் செய்ய முடியாதவராக, சக்தியற்றவராக நீங்கள் உணரலாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணரலாம்.
இந்த சூழ்நிலையில், ஓட்டுனருக்கு என்ன கூறலாம் என்பது அவருக்கும் உங்களுக்குமிடையிலான உறவு உட்பட பல காரணிகளைப் பொறுத்தது.
‘calm down’ அல்லது, “அமைதியாக இருங்கள்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தாமல், ஓட்டுனரின் கவனத்தைத் திசை திருப்பவும் அமைதிப்படுத்தவும் சில உத்திகளைப் பரிந்துரைக்கிறார் பேராசிரியர் .

ஒருவர் தொடர்ந்து சாலை சீற்ற நடத்தையில் ஈடுபட்டால், உளவியல் சிகிச்சை அவர்களின் கோபத்தை நிர்வகிப்பதற்கும் அவர்களை அமைதிப்படுத்தவும் உதவும் என்று பேராசிரியர் James Kirby கூறுகிறார்.
பாதுகாப்பாக மற்றும் பொறுப்பாக வாகனம் ஓட்டுவதற்கு, சாலையில் செல்லும் போது, உங்களின் உகந்த அளவிலான கவனம், பொறுமை மற்றும் மற்றவர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம்.
சாலையில் செல்லும் போது விழிப்புடன் இருப்பது மட்டுமின்றி, மற்றைய ஓட்டுநர்கள் தவறாக வாகனங்களை ஓட்டுவதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டுமென்பதை மனதில் கொண்டு கோபப்படாமல் நடப்பது சாலச் சிறந்தது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
சாலை சீற்ற சம்பவத்தில் நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், காவல் துறையைத் தொடர்பு கொள்ளவும்.
1800 333 000 என்ற எண்ணில் Crimestoppers அழைப்பதன் மூலமும் மோசமான ஓட்டுநர் நடத்தை குறித்து புகாரளிக்கலாம்







