துன்பங்களை எதிர்கொள்ளும்போது வலுவாக இருக்க வேண்டுமென எல்லோருக்கும்போலவே ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் குடியேறுவது பற்றிய அவர்களின் கனவுகளைத் தொடரும்போது உணர்வுப்பூர்வமான சில பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படக்கூடும். எனவே, ஆண்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஏன் முக்கியம் என்று பார்ப்போம்.
ஆஸ்திரேலியாவில் ஒரு நல்ல வாழ்க்கையை நிறுவுவது என்பது இந்நாட்டிற்கு புதிதாக வந்த பலரின் கனவாகும். ஆனால் அந்த கனவு தடைகளை எதிர்கொள்ளலாம் அல்லது உறவு முறிவுகளில் முடிவடையக்கூடும்.
Settlement Services International ஆனது குடும்ப வன்முறை அல்லது தவறான நடத்தைகளால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு Relationships Australia NSWஉடன் இணைந்து 'Building Stronger Families’ திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற நிலையில், ஒரு புதிய நாட்டில் மாற்றங்களைச் செய்ய ஆண்களுக்கு உதவ, 'Men's Behaviour Change Programs' போன்ற கலாச்சார ரீதியாக வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் உள்ளன என விளக்குகிறார் SSIஇன் Domestic, Family and Sexual Violence Practice Manager Jessica Harkins.

Building Stronger Families திட்டமானது case work மற்றும் group workஐக் கொண்டுள்ளது.
சில கலாச்சாரங்களில் ஆண்கள் பெரும்பாலும் குடும்பத்தின் தலைவராகக் கருதப்படுகிறார்கள் எனவும் இதன் காரணமாக அவருக்கு எல்லோரும் செவிசாய்க்க வேண்டும், அவர் சொல்வதைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறார் லெபனானில் பிறந்தவரும் Building Stronger Families முன்னாள் திட்ட உதவியாளருமான Ghassan Noujaim.
சிக்கலான கலாச்சார விழுமியங்கள், நம்பிக்கைகள், மரபுகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றுக்குள் ஆண்கள் அடிக்கடி சிக்கிக் கொள்வதாக Ghassan Noujaim கூறுகிறார்.
ஆண்கள் தாம் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கான சில தடைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வது நேர்மறையான மாற்றங்களைச் செய்வதற்கான முதல் படியாகும் எனவும் இது சிலநேரத்தில் சவாலானதாக இருக்கும் எனவும் சொல்கிறார் தெற்கு ஆஸ்திரேலியா Relationships Australia life coach and counselling team leader Dr Sumbo Ndi.
அடிலெய்டில் உள்ள ஆப்பிரிக்க ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு குடும்ப வன்முறை பற்றிக் கற்பிக்கவென The Good Life Project என்ற திட்டத்தை தெற்கு ஆஸ்திரேலியா Relationships Australia நடத்துகிறது.

ஆஸ்திரேலிய வாழ்க்கைக்கு ஏற்றவாறு, ஒரு நல்ல வாழ்க்கை மற்றும் வலுவான குடும்பத்தை உருவாக்கும்வகையில், சமூக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வது சிறந்தது என Dr Sumbo Ndi ஊக்குவிக்கிறார்.
ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்காக விட்டுச் செல்ல விரும்பும் மரபுகளைக் கருத்தில் கொண்டு தங்களில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கலாம் என பரிந்துரைக்கிறார் Relationships Australia NSWஇன் குழு மற்றும் சமூக கல்வி மேலாளரும் எழுத்தாளர் மற்றும் ஆண்களின் நல்வாழ்வு குறித்த நிபுணருமான Andrew King.
ஆண்மை என்பது ஆண்களது வளர்ப்பின் அடிப்படையில் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது என்பதைப்பொறுத்து உணர்ச்சிகளின் பொருத்தமற்ற வெளிப்பாடுகளை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என Andrew King கூறுகிறார்.
ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று, குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட பழைமைவாத கொள்கைகளை விட்டுவிட்டு தங்களது உணர்வுகளை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதாகும் என அவர் ஊக்குவிக்கிறார்.

அடக்கப்பட்ட உணர்வுகளும் உணர்ச்சிகளும் சில சமயங்களில் எரிமலை போல் வெடித்து ஆக்ரோஷமான நடத்தைக்கு வழிவகுக்கும் என்கிறார் Andrew King.
நெருக்கடி நிலையை அடைவதற்கு முன் மற்றவர்களுடன் பேசலாம் அல்லது தொழில்முறை உதவியை நாடலாம் என Andrew King பரிந்துரைக்கிறார்.
பயனுள்ள தகவல்தொடர்பு என்பது உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் அங்கீகரிக்கும் அதே வேளையில் மற்றவரின் கருத்தைக் கேட்பதையும் மரியாதை செய்வதையும் உள்ளடக்குகிறது என்றும் அவர் விளக்குகிறார்.
குடும்ப வன்முறை என்பது பெரும்பாலும் பேசாப்பொருளாக காணப்படுகின்ற சூழலில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் மக்கள் வெளிப்படையாக விவாதிக்கும்போது மட்டுமே சக்திவாய்ந்த மாற்றங்கள் ஏற்படும் என்று Dr Sumbo Ndi கூறுகிறார்.
உணர்வு ரீதியான ஆலோசனை தேவைப்படுபவர்கள் அல்லது உறவுமுறை சார்ந்த கவலைகள் உள்ள ஆண்கள் 1300 78 99 78 என்ற எண்ணில் MensLine Australiaஐ 24 மணிநேரமும் இலவச ஆலோசனைக்கு அழைக்கலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






