அரச மானியத்துடன் கூடிய முதியோர் பராமரிப்பு சேவைகளைப் பெறும் நுகர்வோரைப் பாதுகாக்கும் சட்டப்பூர்வ உரிமைகள் Charter of Aged Care Rightsஇல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இந்த சாசனத்தில் உள்ள 14 முதியோர் பராமரிப்பு உரிமைகளில் முதல் இரண்டு, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கும் பாதுகாப்பான மற்றும் உயர்தரமான சேவைகளை அனுபவிப்பதற்குமான உரிமையை உள்ளடக்கியது.
மற்றொன்று, பழிவாங்கலில் இருந்து விடுபடுவதற்கும், உங்கள் புகாரை நியாயமாகவும் உடனடியாகவும் கையாள்வதற்கான உரிமையாகும்.

இந்நிலையில் பராமரிப்பு சேவை வழங்குநர்களின் பணியை மேற்பார்வையிடுவதுடன் அவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் பணியை தமது ஆணையம் மேற்கொள்வதாகக்கூறுகிறார் Aged Care Quality and Safety Commissionஇன் ஆணையர் ஜனட் ஆண்டர்சன்.
ஒரு முறைப்பாடு தீர்க்கப்படாமல் இருந்தால், முதியோர் பராமரிப்பு சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் அல்லது அவர்கள் சார்பாக உத்தியோகபூர்வ முறைப்பாடுகளைக் கையாளும் பொறுப்பு ஆணையத்தினுடையது என ஜனட் ஆண்டர்சன் கூறுகிறார்.
அதேநேரம் The Older Persons Advocacy Network (OPAN) ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள வயதானவர்களுக்கு இலவச தகவல் மற்றும் சட்ட ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

தம்மை தொந்தரவு செய்பவர்களாகக் கருதிவிடுவார்கள் என்ற பயத்தில், முதியோர் பராமரிப்பு சேவைகளைப் பெறுபவர்கள், தமக்கான சேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை செய்யத் தயங்குவதாகவும்,
ஊழியர்களிடமிருந்து வரக்கூடிய எதிர்வினைகளைப் பற்றி உறவினர்களும் பயப்படுவதாகவும் கூறுகிறார் பேராசிரியர் ஜோசப் இப்ராஹிம்.
இவர் ஒரு முதியோர் நல மருத்துவர் என்பதுடன் Monash பல்கலைக்கழகத்தில் Health Law and Ageing Research Unit இன் தலைவராகவும் உள்ளார்.
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு கூடுதல் தடைகள் உள்ளதாக பேராசிரியர் இப்ராஹிம் சொல்கிறார்.
அவர்களுக்கான கவனிப்பு குறித்து முதியவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்பதான உரிமையையும் முதியோர் பராமரிப்பு சாசனம் உட்படுத்துகிறது.

அரச மானியத்துடன் கூடிய முதியோர் பராமரிப்பு சேவையிலுள்ள குறைபாடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு நீங்கள் சேவை பெறுபவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தனிநபர், குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர், முதியோர் பராமரிப்பு பணியாளர் என எவரும் சில அம்சங்களைப் பற்றி தங்களிடம் புகார் செய்யலாம் என Aged Care Quality and Safety Commissionஇன் ஆணையர் ஜனட் ஆண்டர்சன் ஊக்குவிக்கிறார்.
முறைப்பாடுகளைப் பெற்றவுடன், சேவை வழங்குநர் மற்றும் முறைப்பாடு செய்தவர் ஆகிய இருவருடனும் Aged Care Quality and Safety Commission பேசும்.
ஒரு சிக்கல் தீர்க்கப்படாமல் இருக்கும் போது, ஆணையம் அதற்கிருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தக்கூடும் எனவும் இருப்பினும், சில நடவடிக்கைகள் ஆணையத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை எனவும் கூறுகிறார் ஜனட் ஆண்டர்சன்.

ஆனால் எந்தவொரு சிக்கலையும் கவலையையும், தாமதப்படுத்தாமல் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவிக்குமாறு முதியோர் நல மருத்துவர் பேராசிரியர் ஜோசப் இப்ராஹிம் அறிவுறுத்துகிறார். முறைப்படி புகாரளிப்பதற்கு முன்பு, தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி சம்பந்தப்பட்டதரப்பினரிடம் சொல்லும்போது குறைகளைத் தீர்ப்பது எளிது என்று அவர் கூறுகிறார்.
அப்படிச் சொல்லியும் உங்கள் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், முறைப்படி புகார் செய்யலாம் எனவும், உங்களது அனைத்து நடவடிக்கைகளுக்குமான பதிவுகளை வைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் பேராசிரியர் ஜோசப் இப்ராஹிம் கூறுகிறார்.

முதியோர் பராமரிப்பு சேவை குறித்த ஆலோசனைக்கு 1800 700 600 என்ற எண்ணில் National Aged Care Advocacy Lineஐ அழைக்கவும்.
Aged Care Quality and Safety Commissionஐ தொடர்பு கொள்ள, 1800 951 822 என்ற எண்ணை அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




