தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தல் இறுதி நேரத்தில் தடுக்கப்படுகிறது?

An earlier photo of the detained Tamil family from Biloela.

An earlier photo of the detained Tamil family from Biloela. Source: Supplied

மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் விமானநிலையம் ஊடாக இடம்பெற்ற இந்நாடுகடத்தலைத் தடுப்பதற்கு அகதிகள் செயற்பாட்டாளர்களும் நலன்விரும்பிகளும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த குடும்பத்தை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுள்ளது.

ஆனால் விமானம் தற்போது டார்வினை நோக்கி பறந்துகொண்டிருப்பதாகவும், இந்நாடுகடத்தலை தடுப்பதற்கான தடையுத்தரவொன்று தமக்கு இறுதி நேரத்தில் கிடைத்துள்ளதாகவும் இதைப்பயன்படுத்தி டார்வினில் வைத்து இக்குடும்பத்தை நாடுகடத்தலிலிருந்து தடுக்க முடியும் எனத் தான் நம்புவதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர் அஞ்சலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த விமானம் டார்வினை சென்றடையும் என எதிர்பார்ப்பதாகவும் அஞ்சலா கூறினார். 

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர். இத்தம்பதிக்கு தருணிக்கா உட்பட ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பேர்ன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இறுதி முயற்சியாக குழந்தை தருணிக்கா தன்னை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் முன்வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், அந்தக் கோரிக்கையை அமைச்சரிடம் அனுப்பி வைக்க மறுத்து விட்டனர்.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்ட போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவந்தநிலையில் இன்று இந்நாடுகடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.


2 min read

Published

Updated

Presented by Renuka


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now