SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய அணி செய்தது "கேவலம்... கேவலம்!"

தென்னாபிரிக்காவின் Cape Townல் நடக்கும் Test Cricket போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கட் ஆர்வலர்கள் பலருக்கு ஆதங்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

Steven Smith (capt) and Cameron Bancroft (L) of Australia
Steven Smith (capt) and Cameron Bancroft (L) of Australia. Source: Getty

2 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: AAP, SBS



Skip to article content

தென்னாபிரிக்காவின் Cape Townல் நடக்கும் Test Cricket போட்டிகளின் மூன்றாவது ஆட்டத்தில், முன்னரே தீர்மானித்து, ஆஸ்திரேலிய அணி முறையற்ற வகையில் நடந்து கொண்டது, கிரிக்கட் ஆர்வலர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியுள்ளது.


பந்து வீச முன், பந்தின் மினுக்கமான பக்கத்தை தேய்ப்பது கிரிக்கட் விளையாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.  அதற்கு உமிழ்நீர் அல்லது வியர்வையைப் பயன்படுத்தவும் அனுமதியுண்டு.  ஆனால், நேற்றைய ஆட்டத்தில், Cameron Bancroft பந்தின் தேய்ந்த பக்கத்தை மேலும் தேய்த்தது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.  அதன்போது பயிற்றுனர் சந்தேகத்துடன் பார்ப்பது போன்ற பார்வையைக் காட்டியதும், மைதானத்திற்கு வெளியே இருந்த 12வது ஆட்டக்காரர் ஓடிப் போய், Cameron Bancroftடிடம் ஏதோ சொன்னதும், அவர் தனது காற்சட்டைப் பையிலிருந்து எதையோ எடுத்து உள்ளாடைக்குள் மறைத்து விட்டார்.

Cameron Bancroft முதலில் தேய்த்தது ஒரு மஞ்சள் நிறப் பொருள்.  அதுவும் தொலைக்காட்சியில் தெளிவாகக் காட்டப்பட்டது.  நடுவர்கள் அவரை விசாரித்தபோது எந்தவித பதற்றமுமின்றி,  தனது காற்சட்டைப் பையிலிருந்து, கண்ணாடி துலக்கும் கறுப்பு நிறத் துணித்துண்டை எடுத்துக் கொடுத்தார்.

பந்தை இப்படி 'சேதப்படுத்தலாம்' என்பதை முன்னரே தீர்மானித்ததாக அணித்தலைவர் Steve Smith ஒப்புக் கொண்டுள்ளார்.  ஆனால், இது காரணமாக, தான் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை, என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தான் காண்பது கனவு என்று யாராவது சொல்லுங்கள்... இது நம்பமுடியாத விடயம் என்று, முன்னாள் ஆஸ்திரேலிய அணித்தலைவர் Michael Clarke tweet செய்துள்ளார்.

அணியில் மிகவும் இளமையான ஆட்டக்காரரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது என்கிறார் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் Michael Vaughan.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா இடையே நடந்த நான்கு டெஸ்ட் தொடரில், David Warner மற்றும் Quinton de Kock இடையில் ஒரு அசிங்கமான சர்ச்சை நடந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 

தற்போது நடந்த சம்பவம் நிகழ்வது எந்தக் காலத்திலும் ஒரு அணிக்கு நல்லதல்ல.  ஆனால், ஆஸ்திரேலிய கிறிக்கட் அணிக்கு நிச்சயமாக இது மிக மோசமான நேரம் என்று சொல்லலாம்.

Steven Smith (capt) and Cameron Bancroft (L) of Australia during day 3 of the 3rd Sunfoil Test match between South Africa and Australia.
Steven Smith (capt) and Cameron Bancroft (L) of Australia during day 3 of the 3rd Sunfoil Test match between South Africa and Australia. Source: Getty

இந்த டெஸ்ட் கிரிக்கட் தொடரில், இதுவரை ஆடப்பட்ட 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியும் தென்னாபிரிக்க அணியும் தலா ஒரு ஆட்டத்தை வென்றுள்ளன.  வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம், ஆஸ்திரேலிய அணியின் தார்மீக முறையை திசைதிருப்பியுள்ளது.

தென்னாபிரிக்க ரசிகர்கள் தம்மிடம் இழிவாக நடந்து கொண்டார்கள் என்ற உத்தியோகபூர்வ புகார் செய்யும் அதே வேளை, தம்மைப் பற்றிய பார்வை நன்றாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கட் ஆணையம் Cricket Australia முயற்சி செய்கிறது.

மற்றவர்கள் நன்னடத்தையுடன் நடக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ஆஸ்திரேலிய அணி, தன்னுடைய நடத்தை குறித்து கவனம் எடுக்கவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கட் அணித்தலைவர் Nasser Hussain கூறுகிறார்.

ஆஸ்திரேலிய அணி தீட்டிய இந்தத் திட்டம் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் Darren Lehmann அறிந்திருந்தாரா என வினா எழுப்பியபோது, அணித்தலைவர் Steve Smith பதிலளிக்க மறுத்துவிட்டார்.

"உங்கள் அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளரின் அனுமதியின்றி, சர்வதேச கிரிக்கட் ஆட்டத்தில் ஏதாவது செய்ய முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் தென்னாபிரிக்க வீரர் Dale Steyn.

 

 

 

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now