பொதுவாக பறவையினங்களில் இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவைகள்தான் தங்கள் நாட்டியத் திறமையைக் காட்டி இணைப்பறவைகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடும். ப்ரோல்கா பறவைகளோ ஒரு முறை இணை சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியவை. அவ்வாறு இருக்கையில் இணையைக் கவர ஒவ்வொரு முறையும் இந்த ஆட்டமெல்லாம் தேவையில்லைதானே. ஆனாலும் ஒவ்வொரு பருவத்தின்போதும் ப்ரோல்கா சோடிகள் இந்த சடங்கைப் பின்பற்றத் தவறுவதே இல்லை.
தவிரவும் இந்த அழகிய நாட்டியத்துக்கு இன்ன காரணம் இன்ன பருவம் இன்ன காலம் என்ற கணக்கெல்லாம் கிடையாதாம். இனப்பெருக்கக் காலம் மட்டுமல்லாது ப்ரோல்காக்கள் உற்சாக மனநிலையில் இருக்கும் பொழுதெல்லாம் துள்ளலுடன் நாட்டியமாடுகின்றனவாம்.
அமைதியாக நின்றுகொண்டிருக்கும் பறவைக்கூட்டம் தங்கள் ஆட்டத்தை ஆரம்பிப்பதே ஒரு அழகுக்காட்சி. முதலில் ஒரு பறவை ஒரு புல்லை வாயால் கவ்வி அதைக் காற்றில் பறக்கவிட்டு பிறகு எக்கிப் பிடிக்கும். ஒரு மீட்டர் உயரம் வரையிலும் இறக்கைகளை விரிக்காமல் அப்படியே எழும்பித் தரையிறங்கும். பிறகு மெல்ல மெல்ல இறக்கைகளை விரித்தும் மடக்கியும், குனிந்தும் வளைந்தும் நடந்தும் தலையை இடவலம் அசைத்தும் என பலவிதமாய் அபிநயிக்கும். தரையிலிருந்து ஒரு மீட்டரோ அதற்கும் மேலோ உந்தியெழும்பி பாராசூட் போல இறக்கைகளைக் காற்றில் அளைந்தபடி மெதுவாகத் தரையிறங்கும்.
கொஞ்ச நேரத்தில் இணைப்பறவையும் ஆட்டத்தில் இணைந்துகொள்ளும். கொஞ்சம் கொஞ்சமாக குழுவின் மற்றப் பறவைகளும் ஆட ஆரம்பிக்க, ஒரு பெரிய நாட்டியக்கச்சேரியே ஆரம்பமாகிவிடும். இணைப்பறவைகள் ஒன்றுக்கொன்று அலகால் முத்தமிட்டுக் கொஞ்சுவதும் துரத்தி விளையாடுவதும் தலையைப் பின்னுக்கு சாய்த்து மெலிதாய் கொம்பூதுவது போல் ஒலியெழுப்புவதும் ஆட்டத்தினூடே அமைந்த அழகு அம்சங்கள்.
ப்ரோல்காக்கள் ஆழமில்லாத நீர்நிலைப் பகுதிகள், சதுப்பு நிலப்பகுதிகள் போன்ற இடங்களையே வாழுமிடமாகத் தேர்ந்தெடுக்கின்றன. அங்குதான் அவற்றின் உணவான கடல் பாசிகள், நீர்த்தாவரங்கள், நிலத்தாவரங்கள், கிழங்குகள் இவற்றோடு புழு பூச்சிகள், தவளை எலி போன்ற சிற்றுயிரிகளுக்கு பஞ்சம் ஏற்படுவதில்லை. தங்களுடைய நீண்ட கூரிய அலகால் மண்ணைக் குத்திக் கிளறி மண்ணுக்குள்ளிருக்கும் கிழங்கு, வேர்கள் போன்றவற்றைத் தின்னும். உப்புநீர் சதுப்பு நிலங்களில் வாழும் பறவைகள் அங்குள்ள உவர்ப்புநீரைக் குடிக்கநேர்ந்தால் அவற்றின் கண்ணருகில் உள்ள சுரப்பிகள் அதிகப்படியான உப்பை வெளியேற்றிவிடுமாம்.
ப்ரோல்காக்கள் பொதுவாக நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் இரைதேடி வாழ்ந்தாலும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதற்குரிய இடங்களை நோக்கிப் பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றன. ஆழமில்லா நீரோட்டமிக்க இடங்களையும் சதுப்பு நிலங்களையும் தேர்ந்தெடுத்து அங்கு கூடுகட்டும் முயற்சியில் ஆணும் பெண்ணும் இணைந்தே ஈடுபடுகின்றன. குச்சிகள், வேரோடு பிடுங்கப்பட்ட புற்கள், நாணல், நீர்த்தாவரங்கள் இவற்றால் உருவாக்கிய கூட்டில் பெண்பறவை முட்டைகளை இடும். நீருக்கு நடுவே ஒரு பெரிய குப்பைமேடு போல் காட்சியளிக்கும் அல்லது நீரில் மிதக்கும் அக்கூட்டின் விட்டம் கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் அளவு இருக்கும். சோம்பல் மிகுந்த சில ப்ரோல்காக்கள், அன்னப்பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தபின் கைவிட்ட கூடுகளையே தங்கள் கூடுகளாக்கி முட்டையிடும். அதனினும் சோம்பல் மிக்கவையோ கூடெல்லாம் எதற்கு என்று வெறும் தரையிலேயே முட்டையிட்டு அடைகாக்குமாம். உற்சாகத்துள்ளல் எல்லாம் நடனத்துக்கு மட்டும்தான் போலும்.
ப்ரோல்காக்கள் ஒரு ஈட்டுக்கு பொதுவாக இரண்டு முட்டைகள் இடும். ஆணும் பெண்ணும் மாறி மாறி முட்டைகளை அடைகாக்கும். ஒரு மாதத்துக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவரும். முட்டையிலிருந்து வெளிவந்த சிலமணி நேரத்திலேயே ப்ரோல்கா குஞ்சுகள் கோழிக்குஞ்சுகளைப் போல மிகுந்த சுறுசுறுப்புடன் தாய் தந்தையுடன் இரைதேட புறப்பட்டுவிடுகின்றன. கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு தாய், தந்தை, பிள்ளைகள் என்ற அந்த குடும்ப அமைப்பு குலையாமல் இருக்கும்.
ப்ரோல்கா குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொள்ள கிட்டத்தட்ட நூறு நாட்களாகுமாம். பறக்க இயலாத குஞ்சுகளை நரிகளிடமிருந்து காப்பாற்றுவதுதான் ப்ரோல்காக்களின் பெரும் பிரச்சனை. அந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ப்ரோல்காக்களின் நடனமே அவற்றைக் காப்பாற்றுகிறது என்பதுதான் வியப்பு.. குழுவாய் பல ப்ரோல்காக்கள் ஒன்றிணைந்து தரையிலிருந்து எழும்பியும் தாழ்ந்தும் இறக்கைகளை விரித்தும் அசைத்தும் குதித்தும் குனிந்தும் பல்வாறாக உடலசைத்து சிறகசைத்து ஆடும் நடனம் நரிகளை மிரளச்செய்து பின்வாங்க வைத்துவிடுமாம். நரிகள் அறியுமா ப்ரோல்காக்கள் நடனமாடுகின்றன என்று. அவை தங்களைத் தாக்க ஆயத்தமாவதாக எண்ணிக்கொண்டு நரிகள் எடுக்குமாம் ஓட்டம்.
கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் (இருபது லட்சம்) வருடங்களாக ஆஸ்திரேலியாவில் இருப்பதாக அறியப்படும் பறவையினம் ப்ரோல்கா. கொக்கு இனத்தைச் சார்ந்த ப்ரோல்கா ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அரிய வகை என்பது அதன் சிறப்பு.
பார்ப்பதற்கு சாரஸ் கொக்கைப் போன்ற உருவ அமைப்பும் நிறமும் குழுவாக வாழுந்தன்மையும் கொண்டிருந்தாலும் ப்ரோல்காவுக்கும் சாரஸ் கொக்குக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தொலைவிலிருந்து பார்த்தால் இரண்டும் ஒன்று போலவே தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் வேறுபாடு புலப்படும். அதனாலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் சாரஸ் கொக்குகளின் இருப்பு 1967 வரையிலும் அறியப்படவே இல்லை. அவற்றையும் ப்ரோல்கா என்றே மக்கள் நினைத்திருந்தார்களாம்.
மற்ற ஆஸ்திரேலிய விலங்குகள் பறவைகளைப் போலவே ப்ரோல்காவும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே மிகுந்த செல்வாக்குடைய பறவை. அவர்களுடைய நடனங்களுள் ப்ரோல்கா நடனமும் பிரசித்தமான ஒன்று. ப்ரோல்காக்களைப் போலவே அவர்கள் குழுவாய் இணைந்து தரையிலிருந்து எம்பிக்குதித்தும் கைகளைக் காற்றில் அளைந்தும் ஆடுவது அழகு.
ப்ரோல்காக்கள் ஏன் நடனமாடுகின்றன என்பதைச் சொல்லும் கனவுக்கால கதை ஒன்றை சொல்லவா?
மனிதர்கள் குழுக்களாய் வாழ்ந்திருந்த அந்தக் காலத்தில் ஆண்களுடைய வேலை பறவைகள் மிருகங்களை வேட்டையாடி உணவாய்க் கொண்டுவருவது. பெண்களுடைய வேலை கிழங்குகளையும் பழங்களையும் சேகரிப்பது. அந்தக் குழுவில் செம்மயிர் கொண்ட இரு குழந்தைகள் மிகுந்த நட்புடனும் பாசத்துடனும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தனர். இளைஞனும் இளம்பெண்ணுமாய் அவர்கள் இளமைப்பருவத்தை அடைந்தபோது இருவரும் பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. இளைஞன் ஆண்களுடன் வேட்டைக்கும் இளம்பெண் பெண்களுடன் காய்கனிகள் சேகரிக்கவுமாய்ப் பிரிந்தனர். பிரிவு அவர்களை வாட்டியது. ஒருவரை ஒருவர் காதலிப்பதை அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர்.
ஒரு திருவிழா வந்தது. செம்மயிர்க்கொண்ட அந்த இளைஞன் கூட்டத்தின் நடுவில் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நடனமாடினான். அவன் சுழன்றாடும்போது அவனுடைய செம்மயிர்த்தலை பிரகாசித்தது. பலரும் அதைக் கண்டு வியந்தனர். அவன் ஆடி முடித்ததும் இளம்பெண் ஆடினாள். அவளும் மிக அழகாகவும் நளினமாகவும் சுற்றிச்சுழன்று ஆடினாள். அவளுடைய செம்மயிர்க்கூந்தல் விரிந்து ஜொலித்தது. பார்த்தவர்கள் இவர்கள் இருவரும் மிகப் பொருத்தமான சோடியென்று எண்ணும்படியாக அவர்களுடைய நடனம் இருந்தது. திருவிழாவுக்குப் பின் அவர்கள் மறுபடியும் தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்.
ஒருநாள் வேட்டைக்குப் போன இளைஞன் திரும்பவில்லை. அவன் திரும்பி வராததற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள். போன இடத்தில் பாம்பு கடித்து இறந்திருப்பான் என்றனர் சிலர். வழிதெரியாமல் காட்டில் சிக்கி காணாமல் போயிருப்பான் என்றனர் சிலர். வேறு காதலி கிடைத்து அவளுடன் போயிருப்பான் என்றனர் சிலர். திரும்பி வர முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றனர் சிலர். உண்மையில் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியவில்லை. அந்தப் பெண் பெரிதும் மனமுடைந்துபோனாள். நித்தமும் அவன் வருகையை எதிர்பார்த்து ஏமாறினாள். வேட்டைக்குச் செல்பவர்களிடம் அவனைத் தேடிக் கண்டுபிடித்துத்தருமாறு வேண்டினாள். எதற்கும் பலனில்லாமல் போகவே ஒருநாள் தானே அவனைக் கண்டுபிடிக்கக் கிளம்பிச்சென்றுவிட்டாள். அதன்பின் அவளும் என்னவானாள் என்று எவருக்கும் தெரியவில்லை.
வெகுநாள் கழித்து ஏரிக்கரையில் செந்தலைப் பறவைகள் இரண்டு மிக அழகாக நடனமாடிக்கொண்டிருப்பதை ஊரார் பார்த்தார்கள். அந்தப் பறவைகள் காதல் மேலிட தங்கள் செந்தலைகளை மேலும் கீழும் அசைத்தும் சுற்றிச்சுழன்றும் ஆடிய நடனம் அவர்களை வியப்புறச் செய்தது. காணாமல் போன இளைஞனும் இளம்பெண்ணும்தான் அது என்று அவர்கள் நம்பினர். உண்மைக்காதல் காதலர்களை இணைத்து வைத்துவிட்டது என்று சொல்லி மகிழ்ந்தார்கள். நெகிழவைக்கும் காதல் கதை அல்லவா?