Highlights
- பிரியா-நடேஸ் குடும்பம் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்காலிகமாக பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளது.
- குடிவரவு அமைச்சர் Alex Hawke தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இக்குடும்பம் தற்போதைக்கு தடுப்புமுகாமைவிட்டு வெளியே வாழ்வதற்கு அனுமதித்துள்ளார்.
- குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.
ஆஸ்திரேலிய National கட்சியின் தலைவராகவும் துணைப் பிரதமராகவும் மீண்டும் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னதாக கருத்துவெளியிட்ட Barnaby Joyce, பிரியா குடும்பத்தை அரசு நடத்தும் விதம் தொடர்பில் விமர்சனத்தை வெளியிட்டதுடன், ஆஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளுக்கும் Jane மற்றும் Sally என்ற பெயர்கள் இருந்திருந்தால் அவர்களை வேறொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அரசு முனைந்திருக்காது என சாடியிருந்தார்.

ஆனால் Barnaby Joyce-இன் கருத்து நியாயமற்றது எனவும் தவறானது எனவும் குடிவரவு அமைச்சர் Alex Hawke தெரிவித்துள்ளார். தானும் ஆஸ்திரேலிய அரசும் இக்கருத்தினை மறுப்பதாக SBS-க்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்தார்.
ஒருவரது பெயரோ, அல்லது அவர்கள் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதோ, எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோ பொருட்டில்லை எனவும், அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமா இல்லையா என்பதற்கே தாம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் Alex Hawke தெரிவித்தார்.
இதுஒருபுறமிருக்க பெர்த்தில் சமூகத் தடுப்பில்(Community detention) வாழ்ந்துவரும் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவருக்கும் 3 மாதங்களுக்கான bridging விசா நேற்றையதினம் குடிவரவு அமைச்சர் Alex Hawke-ஆல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி மகள் தருணிகாவுக்கு bridging விசா வழங்கப்படவில்லை.
குறித்த bridging விசாவின்கீழ் பிரியா, நடேஸ் மற்றும் கோபிகா ஆகிய மூவரும், அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதிக்கு சென்று வாழமுடியும்.
ஆனால் தருணிகா தொடர்ந்தும் சமூக தடுப்பு உத்தரவின்கீழே உள்ளதால் அவர் பெர்த்தைவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாது. இதனால் முழுக்குடும்பமும் பெர்த் சமூகத்தடுப்பிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இக்குடும்பத்தினரின் சட்டத்தரணி Carina Ford தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் மூவருக்கு மாத்திரம் bridging விசா வழங்கிவிட்டு தருணிகாவுக்கு மட்டும் விசா வழங்காததற்கு என்ன காரணம் என்பதை குடிவரவு அமைச்சர் விளக்கவேண்டும் எனவும் Carina Ford கூறியுள்ளார்.

பிரியா குடும்பம் அவர்கள் முன்னர் வாழ்ந்த Biloela-இல் வாழ அனுமதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் பின்னணியில், அமைச்சரின் நடவடிக்கையால் இக்குடும்பம் அங்கு செல்லமுடியாமல் பெர்த்திலேயே இருக்கவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக Carina Ford குறிப்பிட்டார்.
நான்கு வயது தருணிகாவுக்கு குருதித்தொற்று ஏற்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து குடிவரவு அமைச்சரின் விசேட அனுமதியின்பேரில் முழுக்குடும்பமும் பெர்த்தில் வாழ அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரியா- நடேஸ் குடும்பத்தின் பின்னணி
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.
நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
