Highlights
- புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் மற்றும் அவர்களது இரண்டு மகள்களது தடுப்புமுகாம் வாழ்க்கை மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது.
- இக்குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார்.
- குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.
அகதிகளுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ், அகதி ஒருவர் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட வேண்டுமெனில் அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்க வேண்டுமெனவும், பிரியா குடும்பம் அகதிகள் என ஆஸ்திரேலிய அராசால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் Karen Andrews கூறியுள்ளார்.
முன்னதாக 2GB-க்கு வழங்கிய நேர்காணலில் பிரியா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் உள்துறை அமைச்சு ஆராய்ந்துவருவதாக தெரிவித்திருந்தார்.
அவ்வாறெனில் வெளிவிவகார அமைச்சர் ஏன் இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தார் என்ற கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் Karen Andrews, மூன்றாவது நடொன்றில் குடியமர்த்துவதற்கு தகுதிபெற்ற அகதிகளை நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்துவது தொடர்பில் பரந்தளவில் பேச்சு நடத்திவந்தமை தொடர்பிலே அமைச்சர் Marise Payne-இடம் கூறியிருந்ததாகவும் குறிப்பாக இந்தக் குடும்பத்தை அது அர்த்தப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரியா குடும்பத்தை குடியமர்த்துவற்கான பல்வேறு சூழ்நிலைகள் குறித்து தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் Karen Andrews குறிப்பிட்டுள்ளார்.
இதுஒருபுறமிருக்க பிரியா குடும்பம் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமா என குடிவரவு அமைச்சர் Alex Hawke ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரியா-நடேஸின் இரண்டாவது மகள் தருணிகா மருத்துவசிகிச்சைக்காக பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியில் இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
பிரியா குடும்பத்தை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி இன்றையதினம் பெர்த்திலும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குருதித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தருணிகா மேலதிக சிகிச்சைகளுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.
தருணிகாவுடன் தாயார் பிரியா மட்டுமே பெர்த் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தையும் சகோதரியும் கிறிஸ்மஸ் தீவிலேயே உள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் கடந்த பத்து நாட்களாக தருணிகா கடும் காய்ச்சல்,வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்கு கிறிஸ்மஸ் தீவு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் பெர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.
குறிப்பாக 3 வயதான தருணிகா தனது வாழ்க்கை முழுவதையும் தடுப்பு முகாமிலேயே கழித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இவ்வளவு நீண்டநாட்கள் தடுப்புமுகாமிலிருக்கும் குழந்தையாக தருணிகா உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
