Highlights
- AstraZeneca தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கே தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியே விரும்பத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் பரிந்துரைக்கமைய இம்மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியர்களுக்கான கொரோனா தடுப்பூசி கட்டம்கட்டமாக வழங்கப்பட்டுவரும் நிலையில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியைவிட Pfizer தடுப்பூசியே விரும்பத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முழுவதும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே Pfizer தடுப்பூசி வழங்கப்பட்டுவந்த பின்னணியில் தற்போது இப்புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் Greg Hunt வெளியிட்டார்.
AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 வயது பெண் ஒருவர் இரத்த உறைவு காரணமாக கடந்த வாரம் மரணமடைந்தார். அதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் 48 வயதுடைய மற்றுமொரு பெண் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் மரணமடைந்தார்.
இதையடுத்து தடுப்பூசி குறித்த புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவான Australian Technical Advisory Group on Immunisation (ATAGI)இன் பரிந்துரைக்கமைய இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
இதன்படி 60 வயதுக்கு உட்பட்டவர்கள் Pfizer தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும், ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியின் முதல் dose-ஐ போட்டுக்கொண்டு அதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்பட்டிராத 60 வயதுக்கு உட்பட்டவர்கள் அதன் இரண்டாவது dose-ஐ போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக AstraZeneca தடுப்பூசி கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து இத்தடுப்பூசியின் பக்கவிளைவு குறித்த வாதபிரதிவாதங்கள் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் முதலில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியே விரும்பத்தக்கது என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்த அரசு தற்போது இவ்வயது வரம்பை 60 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் இரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகள் மிக மிக அரிதாக ஏற்படுகின்ற ஒன்று எனவும் கொரோனா தடுப்பூசியின் பலனோ மிக அதிகம் எனவும் சுகாதார அமைச்சர் Greg Hunt வலியுறுத்தினார்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share


