ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 29 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக Recession- பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உற்பத்தி, வணிகம் பாதிக்கப்பட்டு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில் ஆஸ்திரேலியா தற்போது பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.
மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் -0.3 சதவீதமாகச் சரிந்த நிலையில், ஜூன் காலாண்டில் -7 சதவீதம் வரையில் சரிந்தது.
இவ்வாறு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதார சரிவை ஆஸ்திரேலியா எதிர்கொண்டுள்ளது.
பொதுவாக எந்தொரு நாடு தொடர்ந்து 2 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்கிறதோ அப்போது recession என அறிவிக்கப்படும்.
இந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா பொருளாதார மந்தநிலை recession-இல் இருக்கிறது.
இது கடந்த 1991ம் ஆம் ஆண்டுக்கு பின் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாகும்.

Australian Treasurer Josh Frydenberg outlines international GDP growth in June. Source: AAP
மேலும் இந்த பொருளாதார வீழ்ச்சி ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட மிக அதிகம் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கோடிக்கணக்கான டொலர் மதிப்புக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் மார்ச் மாதத்திற்கு பின் ஆஸ்திரேலியாவில் இதுவரை பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பலரது வேலை நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதிப்புகள் அனைத்தும் கொரோனாவின் எதிரொலியால் ஏற்பட்டது என்றும், இது தவிர்த்திருக்க முடியாத பாதிப்பு எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதன் எதிரொலியாகக் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் ஆஸ்திரேலியா சிக்கிக்கொண்டுள்ளது.

International students line up outside Melbourne Town Hall for food vouchers. Source: Getty Images AsiaPac
இதனால் தற்போது வேலைவாய்ப்பு முதல் வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான பாதிப்பை இனி வரும் வாரங்களில் நாடு சந்திக்கவுள்ளது.
இந்தப்பின்னணியில் ஆஸ்திரேலியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார தேக்கநிலை எம் ஒவ்வொருவரையும் எவ்வாறு பாதிக்கவிருக்கிறது என்பது தொடர்பிலும் மேலதிகமாக விளக்குகிறார் நிதி திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றும் சாரதா ராமநாதன் அவர்கள். பின்வரும் இணைப்பில் அவரது நேர்காணலை செவிமடுக்கலாம்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.