COVID-19 அல்லது Corona virus இற்கான தடுப்புமருந்து அடுத்தவருடம் நடுப்பகுதிக்கு முன் பயன்பாட்டுக்கு வரும் சாத்தியமில்லை என்றே சொல்லப்பட்டது.
ஆனால் அண்மையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் Pfizer/BioNTech தடுப்புமருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு கூடுதலாக அமெரிக்காவில் Moderna தடுப்புமருந்தும் போடப்பட்டுவருகிறது.

Pfizer நிறுவனம் BioNtech என்ற நிறுவனத்துடன் இணைந்து பரிசோதனை செய்துவந்த தடுப்புமருந்தை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான முழுமையான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனால் இந்த மருந்தை emergency authorisation என்ற அவசரகால அனுமதி அடிப்படையில் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பயன்படுத்தும் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது.
இந்தக் காரணத்தினால் ஆஸ்திரேலியாவில் இதை உடனடியாக பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் Adrian Esterman தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள பின்னணியில் இங்கு எப்போது தடுப்பு மருந்து கொடுக்கப்படவுள்ளது என்ற கேள்வி பலருக்கு எழலாம்.
இதுதொடர்பில் உறுதியான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றபோதிலும் 2021 மார்ச் மாதமளவில் இச்செயற்பாடு ஆரம்பமாகும் என பேராசிரியர் Adrian Esterman தெரிவித்தார்.
யாருக்கு முதலில் கொடுக்கப்படும்?
முதியோர் மற்றும் ஏற்கனவே வேறு நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலிலும் பின்னர் வைத்தியசாலைகளில் நோயாளிகளைக் கவனிக்கும் frontline health staff என்றவகையில் வரும் வைத்தியர்கள், தாதிமார், ஏனைய பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் உள்ளோரைப் பராமரிப்பவர்கள் போன்றோருக்கும் கொடுக்கப்படும் எனஆஸ்திரேலியாவின் பிரதி தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly தெரிவித்தார்
ஆஸ்திரேலியா என்னென்ன தடுப்புமருந்துகளைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது
AstraZeneca

90 சதவீதம் வரையான ஆற்றல் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள AstraZeneca/ Oxford University என்பன இணைந்து தயாரிக்கும் தடுப்புமருந்து மூன்றாம் கட்ட clinical trials களை விரைவில் பூர்த்திசெய்யவிருக்கிறது.
இது அடுத்தவருடம் மார்ச் மாதம் விநியோகத்திற்கு தயாராகிவிடும் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்த தடுப்புமருந்துக்காகவே காத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மெல்பர்னில் உள்ள CSL நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்கிறது.
இது விநியோகத்திற்கும் பயன்பாட்டுக்கும் இலகுவான மருந்தாகும். சாதாரண குளிர்ச்சாதனப்பெட்டியில் உள்ள வெப்பநிலையில் இதை இடத்துக்கிடம் கொண்டுசெல்லவும் store செய்யவும் முடியும். அத்தோடு இது Pfizer தடுப்பு மருந்தைவிட இது மலிவானதாகும்.
Novavax

அமெரிக்க நிறுவனமான Novavax-இன் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட சோதனை நிலையில் உள்ளது.
“புரத தடுப்பூசி” என்று அழைக்கப்படும் இத்தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட சோதனைகள் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் புதிய ஆண்டில் இது அங்கீகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Pfizer/BioNTech

Pfizer/BioNtech இந்தத் தடுப்புமருந்து 95 சதவீத ஆற்றல்( efficacy) உள்ளது என்றும் சுமார் 43000 பேர் இந்த மருந்துக்கான phase 3 clinical trials ஆய்வுகளில் பங்குபற்றினார்கள் என்பதால் அது பாதுகாப்பானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் Pfizer சொல்கிறது.
இது 21 நாள் இடைவெளியில் ஒருவருக்கு இரண்டு doses மருந்தளவுகளாக கொடுக்கப்படவிருக்கின்றன.
இந்த தடுப்புமருந்து புதிய, RNA type ஐச் சேர்ந்ததாகும். RNA வகைத் தடுப்புமருந்து இதுவரை மனிதர்க்கு ஏற்ற அங்கீகரிக்கப்பட்டதில்லை. Clinical trials என்ற ஆய்வுகட்டங்களின் போதுமட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. -70 C என்ற கடுங்குளிர் நிலையில் இந்த தடுப்புமருந்து வைக்கப்படவேண்டும் என்பதும் மருந்துவரும் பெட்டிகள் திறக்கப்பட்டால் 5 நாட்கள் மட்டுமே சாதாரண குளிர்ச்சாதனப் பெட்டிகளில் fridge வைத்திருக்கமுடியும் என்பதும் இந்த மருந்தை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களாகும்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்த அளவில் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் சோதனை செய்துவந்த தடுப்புமருந்து கைவிடப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக HIV வைரஸின் பலவீனப்படுத்தப்பட்ட பகுதிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்த மருந்தை ஏற்றிக்கொண்டவர்களுக்கு HIV false positive என்ற தவறான ஆய்வு முடிவுகள் வந்ததால் இது கைவிடப்பட்டுள்ளது.
வைரஸை எதிர்த்துப் போராடும் பயிற்சியை தடுப்புமருந்து எமது உடலுக்கு வழங்கும் என்பதால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, தடுப்புமருந்தையும் பயன்படுத்துவதன் மூலமாகவே இந்த வைரஸை முற்றாக ஒழிக்கமுடியும் என்பதே நிபுணர்களின், ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
தடுப்புமருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக சந்தைக்கு வருகிறது என்ற செய்தி நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் தடுப்பு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி இந்த நோயை வெற்றிகொள்ளமுடியாது.
சர்வதேசரீதியாக எல்லோருக்கும் உடனடியாக தடுப்புமருந்து கிடைக்கும் நிலை இப்போது இல்லை என்ற நிலையில் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து பல மட்டங்களிலும் முடுக்கிவிடப்படவேண்டும்.
ஆஸ்திரேலியாவில் தடுப்புமருந்துகளை வழங்குவது குறித்த மேலதிக விபரங்கள் ஜனவரியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்த மேலதிக விபரங்களைப்பெற : விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா, Northern Territory, Australian Capital Territory
