பெப்ரவரி 21ம் திகதி முதல் யார் யாரெல்லாம் ஆஸ்திரேலியா வரலாம்?
சுமார் 2 வருடங்களாக சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த பின்னணியில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், business travellers உட்பட ஆஸ்திரேலிய விசா வைத்திருக்கும் அனைத்து பயணிகளும் எதிர்வரும் பெப்ரவரி 21ம் திகதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு வரமுடியும்.
மார்ச் 20 2020 அன்று சர்வதேச பயணத்தடையை நடைமுறைப்படுத்தியிருந்த ஆஸ்திரேலியா, அதனை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் கட்டம் கட்டமாக தளர்த்திவந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா எட்டும் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.

முதலில் ஆஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் என ஆரம்பித்து பின்னர் skilled workers, working holiday visa வைத்திருப்பவர்கள், வெளிநாட்டு மாணவர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவந்த ஆஸ்திரேலியா தற்போது சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் பயணக்கட்டுப்பாட்டு தளர்வினை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு தற்போதுள்ள நிபந்தனைகள் எவை?
ஆஸ்திரேலியா வரும் பயணிகள் முழுமையாக கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். முழுமையாக என்பதன் அர்த்தம் இரண்டு சுற்று தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சின் இணையத்தளம் கூறுகின்றது. Booster இதில் உட்படுத்தப்படவில்லை. எனவே பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்கவேண்டும். தடுப்பூசி போடுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழைக் காண்பிக்கவேண்டும்.
உலக நாடுகள் பலவற்றிலும் பலவிதமான தடுப்பூசிகள் இருக்கின்றன. என்னென்ன தடுப்பூசிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்கிறது?
உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி AstraZeneca, Pfizer, Moderna, Sinovac, Covishield , Covaxin, Sinopharm, Sputnik, Novavax ஆகிய கோவிட் தடுப்பூசிகளின் இரு சுற்றுக்களையோ அல்லது Johnson & Johnson தடுப்பூசியின் ஒரு சுற்றையோ போட்டிருந்தால் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவர் என்று கருதப்படுவீர்கள். இதில் Sinopharm என்ற தடுப்பூசி 60 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு சுற்று Sinopharm தடுப்பூசிகளைப் போட்டிருந்தால் நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவர் என்று கருதப்படமாட்டீர்கள்.

இருசுற்று கோவிட் தடுப்பூசி போட்டிருந்தால் போதும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருந்தாலும் மாநிலங்களும் பிராந்தியங்களும் இதை மாற்றியமைக்கலாம்.
அதேநேரம் முழுமையாக கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு exemption விதிவிலக்கு அனுமதி பெறத்தேவையில்லை.
12 வயதிற்கு உட்பட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஆஸ்திரேலியா வருவதற்கு முன்னரான கோவிட் சோதனை தொடர்பில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதா?
ஆஸ்திரேலியாவுக்கு பயணமாவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் PCR சோதனையை மேற்கொண்டு உங்களுக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிக்கும் வகையில் அந்த எதிர்மறை சோதனை முடிவைக் கொண்டுவர வேண்டும். அல்லது உங்கள் பயணத்திற்கு 24 மணித்தியாலங்களுக்குள் Antigen சோதனையை மருத்துவ கண்காணிப்பின்கீழ் மேற்கொண்டு உங்களுக்கு தொற்று இல்லையென்பதை நிரூபிப்பதற்கான மருத்துவ சான்றிதழை கொண்டுவர வேண்டும்.
இதேவேளை ஆஸ்திரேலியா வருபவர்கள் அனைவரும் தமது பயணத்திற்கு 72 மணித்தியாலங்களுக்குள் உள்துறை அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கின்ற Digital Passenger Declaration-ஐ பூர்த்திசெய்ய வேண்டும். இதில் உங்களைப் பற்றியும் உங்களது பயணம் பற்றியும் முழுமையான விவரங்களை வழங்க வேண்டும்.

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு எவ்வாறு அமையும்?
ஆஸ்திரேலியா வரும் அனைத்துப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு அந்தந்த மாநில மற்றும் பிராந்திய அரசுகளால் தீர்மானிக்கப்படும்.
மேற்கு ஆஸ்திரேலியா தவிர ஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடைமுறையை நீக்கியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள்:
- நேரடியாக தமது வீடு அல்லது அவர்களது தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டும்.
- எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் Antigen சோதனையை மேற்கொண்டு உங்களுக்கு தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- Antigen சோதனைக்கான வசதி இல்லாதவர்கள் PCR சோதனையை மேற்கொள்ளலாம்.
- சோதனை முடிவு வரும்வரை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
- முடிவு எதிர்மறையாக வந்த பின்னர் நீங்கள் வெளியே செல்லலாம்.
- மீண்டும் ஆறாவது நாள் மற்றுமொரு Antigen சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஆகக்குறைந்தது 7 நாட்களுக்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள் போன்ற எளிதில் கோவிட் பரவல் ஏற்படக்கூடிய இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மற்றும் ACT பிராந்தியத்திலும் இதே நடைமுறைதான். ஆனால் ஆறாவது நாள் மீண்டும் கோவிட் சோதனையை மேற்கொள்ளத் தேவையில்லை.
Northern Territory செல்பவர்கள் அங்கு சென்று 2 மணித்தியாலங்களுக்குள் ஒரு Antigen சோதனை, பின் மூன்றாவது நாள் மற்றும் ஆறாவது நாட்களிலும் Antigen சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
டஸ்மேனியா செல்பவர்களுக்கு கோவிட் சோதனை நிபந்தனைகள் எதுவும் இல்லை. ஆனால் அங்கு செல்வதற்கு 14 நாட்களுக்குள் கோவிட் பரவல் அதிகமுள்ள பிரதேசத்திற்குச் சென்றிருந்தால் அவர்களுக்கு கோவிட் சோதனை நடைமுறைகள் இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியா செல்பவர்கள்:
- அங்கு செல்வதற்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட G2G Pass-ஐ பெற்றிருக்க வேண்டும்.
- Booster உட்பட மூன்று சுற்று தடுப்பூசியும் போட்டிருந்தால் 7 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு அனுமதிக்கப்படலாம்.வீட்டிலுள்ள ஏனையோரும் அவர்களோடு சேர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.
- 24 மணித்தியாலங்களுக்குள் PCR அல்லது Antigen சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
- மீண்டும் ஆறாவது நாள் PCR சோதனையை அல்லது ஏழாவது நாள் Antigen சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனையை வீட்டிலுள்ள ஏனையோரும் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ காரணங்கள் எதுவுமின்றி முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதென்றால் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் ACT வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கவில்லை என்றால் கட்டாயம் 14 நாட்களுக்கு அவர்களது சொந்த செலவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதேபோன்று முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் Northern Territory மற்றும் டஸ்மேனியாவிற்குள் நுழைவதற்கு முன் அனுமதி பெறவேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் என்னென்ன அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்?
- முதலில் உங்களிடம் உரிய ஆஸ்திரேலிய விசா இருக்க வேண்டும்.
- நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டவராக இருப்பதுடன் அதற்கான சான்றிதழையும் எடுத்துவரவேண்டும்.
- விமானப் பயணத்திற்கு முன்னதாக கோவிட் சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆவணத்தைக் கொண்டுவரவேண்டும்.
- Digital Passenger Declaration-ஐ கட்டாயம் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.
- சர்வதேச பயணம் குறித்த மேலதிக விவரங்களுக்கு covid19.homeaffairs.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
