SKIP TO MAIN CONTENT

காவலாளி நடந்துகொண்ட முறை தொடர்பில் பிரியாவின் முறைப்பாடு பற்றி எதுவும் தெரியாது-ABF ஆணையர்

கிறிஸ்மஸ் தீவில் குடும்பத்துடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கையாளரான பிரியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

The Muruguppan family.
The Murugappan family. Source: Supplied

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
  • புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் மற்றும் அவர்களது இரண்டு மகள்களது தடுப்புமுகாம் வாழ்க்கை மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது.
  • குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா  குடும்பம் இதற்கெதிராக தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், பிரியா அவரது கணவர் நடேஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா, தருணிகா  ஆகியோர் கடந்த பல மாதங்களாக கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தனது தங்குமிடத்திற்கு வந்த Serco காவலாளி ஒருவர் அறை வாசலில் நின்றவாறு ஒருவித இச்சையுடன் பார்த்ததாகவும், அவரது நோக்கம் பாலியல் ரீதியாக தன்னை அணுகுவதாக இருக்கலாம் என்பதை உணர்ந்தவுடன் பாதுகாப்பு கருதி உடனடியாக அவரைத் தாண்டி அறைக்கு வெளியே தான் சென்றுவிட்டதாகவும் பிரியா பிபிஸியிடம் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் Serco நிர்வாகத்திற்கு முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் ஆனால் பிரியா தொடர்ந்தும் தனது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

General view of the perimeter fence of the North West Point Detention Centre on Christmas Island, Wednesday, March 6, 2019.
General view of the perimeter fence of the North West Point Detention Centre on Christmas Island, Wednesday, March 6, 2019. Source: AAP

பிரியா குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தபோது இச்சம்பவத்தை பிரியா தன்னிடம் தெரிவித்ததாக லேபர் கட்சியின் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் Kristina Kenneally செனட் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

இதற்குப் பதிலளித்த எல்லைப் பாதுகாப்புதுறை ஆணையர் Michael Outram, இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக தனக்குத் தகவல் கிடைக்கவில்லை எனவும் இது ஒரு புதிய செய்தியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இப்படியாக ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் தடுப்புமுகாம் பாதுகாப்புக்கென கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள Serco நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் குறித்த குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறும் அவர்கள் தங்கியிருக்கும் அறையினுள் செல்லவேண்டிய தேவையேற்பட்டால் கதவைத் தட்டிவிட்டு செல்லுமாறு காவலாளிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் Michael Outram கூறியுள்ளார்.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.

The Biloela family marking Nades's birthday on Christmas Island in December 2019.
The Biloela family marking Nades's birthday on Christmas Island in December 2019. Source: Supplied

பிரியா நடேஸ் மற்றும் கோபிகா ஆகியோரது அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டநிலையில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரியா குடும்பத்தின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் தொடர்பில் இம்மாத ஆரம்பத்தில் புதிய உள்துறை அமைச்சர் Karen Andrews ஆலோசனை பெற்றுள்ள பின்னணியில் இவர்கள் விரைவில் கிறிஸ்மஸ் தீவிலேயே சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now