Highlights
- பிரியா குடும்பத்தின் நலவாழ்வு தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக புதிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் மற்றும் அவர்களது இரண்டு மகள்களது தடுப்புமுகாம் வாழ்க்கை மூன்று ஆண்டுகளை கடந்துள்ளது.
- குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அடிப்படையாக வைத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருகிறது.
கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் கடந்த பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பம் விரைவில் விடுவிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Karen Andrews, ஏபிஸி வானொலியுடனான நேர்காணலின்போது இக்குடும்பத்தின் விடுதலை தொடர்பில் கோடிகாட்டியுள்ளார்.
பிரியா-நடேஸ் குடும்பம் பற்றி கேட்கப்பட்டபோது, இக்குடும்பத்தினரின் வாழ்க்கைச்சூழல் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதாக கூறிய அவர், இக்குடும்பத்தினரிடம் சட்டப்போராட்டம் முடிவடையும்வரை அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே ஏனைய சமூகத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு அனுமதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
இக்குடும்பத்தின் நலவாழ்வு தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கிறிஸ்மஸ் தீவிலேயே வேறு தங்குமிட வசதிகள் இருக்கின்றனவா என்பதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படுவதாகவும் Karen Andrews தெரிவித்துள்ளார்.
இதேவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் தடுப்புமுகாமில் வாழ்ந்துவரும் பிரியா-நடேஸ் குடும்பத்தின் நிலைமையைப் பார்த்து அவர் மனம் இரங்கவில்லையா எனக் கேட்கப்பட்டபோது, தான் பொதுவிலேயே இரக்ககுணம் உள்ளவர் எனக் குறிப்பிட்ட அமைச்சர் Karen Andrews, இக்குடும்பம் பற்றிய தனது மன உணர்வுகளை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.
அதேபோன்று அவருக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்து Biloela-வில் வாழ அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அமைச்சர், குறித்த குடும்பத்தின் வழக்கு நீதிமன்றில் உள்ளதாகவும் அதன் முடிவுக்கு காத்திருப்போம் எனவும் கூறினார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களான பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது.

குறிப்பாக 3 வயதான தருணிகா தனது 3 வருட வாழ்க்கையையும் தடுப்புமுகாமிலேயே கழித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இவ்வளவு நீண்டநாட்கள் தடுப்புமுகாமிலிருக்கும் குழந்தையாக தருணிகா உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்தனர்.
நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.
2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது. ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.
ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.
பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
