ஆஸ்திரேலிய அமைச்சரவையில் அங்கம்வகிக்கும் அமைச்சர் உட்பட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை கையாண்ட முறை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் Scott Morrison தனது அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்துள்ளார்.
இதன்படி 1988-இல் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் பாலியல் வல்லுறவு தொடர்பில் குற்றச்சாட்டுக்குள்ளான Christian Porter தனது attorney-general என்ற முக்கிய பொறுப்பினை இழந்து தொழிற்றுறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய attorney-general-ஆக வேலைவாய்ப்புத்துறை அமைச்சராகவிருந்த Michaelia Cash நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று நாடாளுமன்ற கட்டடத்தினுள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள முன்னாள் லிபரல் ஊழியர் Brittany Higgins விவகாரத்தை கையாண்ட முறை தொடர்பில் சர்ச்சையில் அகப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் Linda Reynolds, பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அரச சேவைகள் மற்றும் NDIS திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரைகாலமும் குடிவரவு விவகாரங்களில் கடும்போக்கை கடைப்பிடித்துவந்ததால் விமர்சனங்களுக்கு உள்ளான உள்துறை அமைச்சர் Peter Dutton புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிற்றுறை அமைச்சராக பணிபுரிந்த Karen Andrews நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக நியமனம் பெறுகிறார்.
இதுதவிர இன்னும் சில அமைச்சுப்பொறுப்புக்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை ஆஸ்திரேலிய அரசியலில் ஈடுபட்டுள்ள மற்றும் அரசிடம் பணிபுரியும் பெண்கள் வேலையிடங்களில் நடத்தப்படும் முறைதொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் வெளியாகிக்கொண்டே இருக்கின்ற பின்னணியில், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகளவில் காணப்படும்வகையில் பிரதமர் Scott Morrison இந்த அமைச்சரவை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
