SKIP TO MAIN CONTENT

தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக! முதல்வராகிறார் ஸ்டாலின்!!

Dravida Munnetra Kazhagam (DMK) party cadres display a photograph of their leader M.K. Stalin as they celebrate early leads for the party in the Tamil Nadu state assembly elections in Chennai, India, Sunday May 2, 2021. (AP Photo/R. Parthibhan)
DMK party cadress celebrate at DMK party after the party leads on vote counts in Chennai on May 2, 2021. Source: AAP Image/AP Photo/R. Parthibhan

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் எதிர்வரும் மே 23-ம் தேதி முடிவடையவுள்ளது.
  • மே 7ம் திகதி தமிழகத்தின் புதிய முதல்வதாக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
  • இன்று காலை 9 மணிவரையான நிலவரப்படி திமுக 122 இடங்களில் வென்றுள்ள அதேநேரம் 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெருமளவிலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள அதேநேரம்  பத்து  ஆண்டுகளுக்கு பிறகு தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.

தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் எதிர்வரும் மே 23-ம் தேதி முடிவடையவுள்ளதையடுத்து, மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நேற்றுக்காலை முதல் நடைபெற்றுவந்தது.

இன்று காலை 9 மணிவரையான நிலவரப்படி திமுக 122 இடங்களில் வென்றுள்ள அதேநேரம் 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு இடதுசாரி கட்சிகளும் தலா இரண்டுகளில் வென்றுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு இடங்களில் வென்றுள்ளது.

திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேவேளை அதிமுக 64 இடங்களில் வென்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணியில் உள்ள பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாமக ஐந்து இடங்களில் வென்றுள்ளது.

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன்  உள்ளிட்ட 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

கோவில்பட்டி தொகுதியில் களம் கண்ட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தோல்வியடைந்தார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார்.

கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதியானதையடுத்து, அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்தபின், அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு தேதி அறிவிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் மே 7ம் திகதி தமிழகத்தின் புதிய முதல்வதாக மு.க. ஸ்டாலின் பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now