SKIP TO MAIN CONTENT

பயணத்தடை: இந்தியாவுக்கு எதிரான இனவாத அறிவிப்பா? அடியோடு மறுக்கிறார் பிரதமர்!

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் கூறியுள்ளார்.

Scott Morrison has declined to commit to a start date for when repatriation flights will resume.
Scott Morrison has declined to commit to a start date for when repatriation flights will resume. Source: AAP

2 min read

Published

Updated

By Renuka


Skip to article content

Highlights

  • இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் கூறியுள்ளார்.
  • தடையை மீறுபவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
  • அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் முன்பு கோவிட் பரவல் செறிவடைந்திருந்தபோது இவ்வளவு கடுமையான அறிவிப்பை அரசு விடுத்திருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர்.

அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் பரவல் கொடூரமான அளவில் செறிவடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி - பயண ஓட்டைகளை பயன்படுத்தி - யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான அபராதம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அண்மையில் ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால - உயிரியல் பாதுகாப்பு - சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சுகாதர அமைச்சர் Greg Hunt தெரிவித்திருந்தார்.

ஆனால், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் முன்பு கோவிட் பரவல் செறிவடைந்திருந்தபோது - அங்கு சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களை நோக்கி ஆஸ்திரேலிய அரசு, இவ்வளவு கடுமையான அறிவிப்பை விடுத்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தற்போது ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களுக்கு எதிராக எடுத்துள்ள நிலைப்பாடு இனவாதம் நிறைந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அரசின் அறிவிப்பினை தெளிவுபடுத்தும் வகையிலும் இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் குறித்த அறிவிப்பு இனவாதமானது அல்ல என்பதை மறுக்கும் வகையிலும் இன்று காலை கருத்து தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிஸன் - சீனாவில் முன்பு கோவிட் செறிவடைந்திருந்த காலப்பகுதியிலும் அரசாங்கம் இதுபோன்ற அறிவிப்பை விடுத்திருந்தது. இந்த அறிவிப்புக்கள் நாட்டின் அவசரகாலநிலை சார்ந்தது. இதில் அரசியலோ இனவாதமோ இம்மியளவும் இல்லை. நாங்கள் எதிர்கொண்டிருப்பது கொடிய கிருமியை. அதிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையே கடைப்பிடிக்கிறோம். கடந்த ஒருவருட காலமாக நாட்டில் அவசரகாலச்சட்டத்தின் கீழ் கோவிட் நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்துவருகிறோம். யாரும் இந்தக் கட்டுப்பாடுகளை மீறி சிறை சென்றது கிடையாது - என்று கூறியுள்ளார்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now