Highlights
- இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
- திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணிமுதல் இத்தடை நடைமுறைக்கு வருகிறது.
- தடையை மீறுபவர்களுக்கு ஐந்து வருட சிறை அல்லது 66,600 டொலர் அபராதம் விதிக்கப்படும்.
கோவிட் பேரவலத்துக்குள் சிக்கியுள்ள இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கான பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தடையை மீறுபவர்களுக்கு ஐந்து வருட சிறை அல்லது 66,600 டொலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணிமுதல் இத்தடை நடைமுறைக்கு வருகிறது.
ஆஸ்திரேலியா வருவதற்கு 14 நாட்களுக்கு இடையிலான காலப்பகுதியில் இந்தியாவில் இருந்த அல்லது இந்தியாவுக்கு பயணம் செய்த அனைவருக்கும் இத்தடை பொருந்தும் என சுகாதார அமைச்சர் Greg Hunt அறிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த முடிவினை அவ்வளவு இலகுவாக எடுக்கவில்லை எனவும் ஆஸ்திரேலிய பொது சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் Greg Hunt கூறினார்.
நாடு திரும்புவதற்காக பதிவு செய்துவிட்டு உலகெங்கிலும் பல ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் காத்திருக்கிறார்கள். இவர்களில் சுமார் 9000 பேர் இந்தியாவில் உள்ளனர் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கோவிட் பரவலையடுத்து, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் இந்தியாவுக்கான விமானப்பயணங்களை தற்காலிகமாக தடைசெய்துள்ளன.
எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிவரையில் இடைக்கால பயணத்தடையை அறிவித்துள்ள ஆஸ்திரேலியா, இந்தியாவின் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு, அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்டுவருவது தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசின் இடைக்காலத்தடையை மீறி, சிலர் இந்தியாவிலிருந்து மூன்றாவது நாடு வழியாக அல்லது விமான சேவைகளின் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் வருகிறார்கள் என்ற தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இந்தக் குறுக்குவழிகள் தற்போது முற்றாக அடைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் உறுதியளித்துள்ளார்.
ஆனால், இந்த தடைகள் - கட்டுப்பாடுகள் - இறுக்கமான அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை மீறி, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டமூலத்தின் கீழுள்ள அதிகாரத்தின்படி ஐந்து வருட சிறை அல்லது 66,600 டொலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share




