போகாத ஊருக்கு சிட்னியிலிருந்து புறப்படும் விமானங்கள்!

Qantas plane

Qantas Airways Limited is the flag carrier of Australia Source: AAP

‘போகாத ஊருக்கு புறப்படும் விமானங்கள் ....’தலைப்பே புதுமையாக, ஒரு நாவல் ஒன்றின் தலைப்பு போல இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கக்கூடும்.

Flights to nowhere- எந்த ஊருக்கும் போகாது என்றால் ஏன் இந்த விமானங்கள் புறப்படுகின்றன?

இதில்தான் புதுமையும் சுவாரஸ்யமும் இருக்கிறது.

சுமார் 134 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் Qantas விமானம் சுமார் ஏழரை மணி நேரம் பறந்த பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே வந்து தரையிறங்கப் போகிறது. இவ்வாறான முதல் விமானம், அடுத்தமாதம் 10 ஆம் தேதி சிட்னி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருக்கிறது.
இந்த விமானத்தில் economy class, premium economy class and business class என்று மூன்று வகுப்புக்களுக்கான ஆசனங்கள் இருக்கின்றன. டிக்கட்களின் விலை 787 டாலர்கள் தொடக்கம் 3787 டாலர்கள் வரை என்று அறிவித்த பத்து நிமிடங்களில் - sold out - எல்லா டிக்கட்களும் விற்பனையாகிவிட்டன என்றும் இது Qantas வரலாற்றில் பெருஞ் சாதனை என்றும் Qantas CEO Alan Joyce அறிவித்திருக்கிறார்.
எந்த ஊரிலும் தரையிறங்காமல் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேரும் விமானத்தில் ஏறுவதற்கு இவ்வளவு ஆர்வமா?
A Qantas plane is seen as passengers walk to their flights at Sydney International Airport in Sydney.
Passengers walk to their flights at Sydney International Airport. Source: AAP Images/Lukas Coch
ஆமாம். பலருக்கு விமானத்தில் பறந்து போய் பல நாடுகளை இடங்களை, நபர்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. பலருக்கு விமானத்தில் பறப்பதே மகிழ்ச்சியைத்தருகிறது என்பதை இந்த செய்தியைப் பார்த்தபின்தான் புரிகிறது.

Covid 19 கொள்ளை நோய்காரணமாக விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு பலருக்கும் இப்போது ஏறக்குறைய முற்றிலும் இல்லையென்று ஆகிவிட்டது. பறக்கும்போது ஏற்படும் thrill - சிலிர்ப்பு, ஜன்னலூடாக நிலப்பரப்பையும் landmarks -கேந்திரக் குறியீடுகள் என்ற பிரதான இடங்களையும் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம், airline வழங்கும் உணவு மற்றும் பானங்கள், பணிப்பெண்களின் உபசரிப்பு என்று விமான பயணங்களில் அலாதி ஆர்வமுள்ளவர்களைக்கவரும் விடயங்கள் பல இருக்கின்றன.
இப்படி ஆர்வமுள்ளவர்களை travel junkies என்று செல்லமாக அழைப்பார்கள். அவர்களைத் திருப்திபடுத்தும் விதமாகவும் வானில் பறந்துகொண்டே நாட்டிலுள்ள முக்கியமான landmarks என்ற கேந்திரக் குறியீடுகளைகளைப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்குமாக, இப்போது இந்த போகாத ஊருக்கு புறப்படும் விமானங்கள் -flights to nowhere என்ற பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு உள்ள demand- தேவைப்பாடு காரணமாக மேலும் பல flights to nowhere பயணங்களை ஒழுங்கு செய்ய Qantas ஆலோசித்துவருகிறது.
இது ஏறக்குறைய scenic flight ‘பறந்துகொண்டே இடங்களைப்பார்ப்பது’ மாதிரியான ஒரு பயணம் என்று சொல்லலாம். பொதுவாக scenic flights களுக்கு தாழ்வாகப்பறக்கும் helicopterகள் தான் பயன்படுத்தப்படும். கால் மணித்தியாலம் அல்லது அரை மணித்தியாலத்தில் திரும்பி வந்தவிடும். ஆனால் இந்த flights to nowhere என்ற ஏற்பாட்டின்படி Qantas பயனபடுத்தவிருப்பது Boeing 787 Dreamliner என்ற பெரிய விமானமாகும். இது சாதாரணமாக 30000 அடி தொடக்கம் 45000 அடி உயரத்தில் பறக்கும் விமானமாகும். இது சாதாரணமாக 300 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடியது.
Boeing 787 Dreamliner
Source: Flickr
Covid 19 க்கு முன், Melbourne- Los Angeles , Perth- London non stop, Melbourne- St. Francisco ஆகிய தடங்களில் வழமையாக இவை பறந்தன. இப்போது 134 பயணிகள் ஜன்னலின் ஓரங்களில் அமரக்கூடியதாக இந்த விமானத்தில் ஆசனங்கள் configure- மாற்றியமைக்கப் பட்டுள்ளன. Boeing 787 என்ற இந்த வகை விமானத்தில் ஜன்னல்கள் சற்று விசாலமானவை என்பதால் ஜன்னல்கள் ஊடாக நிலப்பரப்பைப் பார்ப்பதற்கு செளகர்யமாக இருக்கும்.

சிட்னி விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த விமானம் NSW கடற்கரை ஓரமாகப்பறந்து, சிட்னியின் பிரதான landmarks மற்றும் Byron bay, Gold Coast, Great Barrier Reef, Uluru, Kata Tjuta கற்குன்றுகள் - Alice Springs வழியாக Blue mountains இற்கு மேலாகப் பறந்து வந்து சிட்னி துறைமுகத்திலும் Bondi கடற்கரையிலும் சூரிய அஸ்தமனத்தைப்பார்த்த பின் சிட்னி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கும். குறிப்பாக சிட்னி harbour, Great Barrier Reef, Uluru போன்ற பிரதான இடங்களில் பயணிகள் இடங்களைத்தெளிவாக பார்க்க உதவும் வகையில் விமானம் தாழ்வாகப்பறக்கும் என்றும் கூறப்படுகிறது.
Uluru, also known as Ayres Rock
Source: AAP
இதைத் தவிர வேறு விசேட அம்சங்களை இந்த பயணத்தில் பயணிகள் எதிர்பார்க்கலாம். காலை 10:30இற்கு விமானம் புறப்படும் என்ற நிலையில் காலை 8:30 மணிக்கு மிகப்பிரத்தியேகமான breakfast -காலை உணவு Domestic terminal - Qantas Business Lounge இல் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து Qantas 747 memorabilia என்ற ஞாபகார்த்த பொருட்களின் ஏலத்தில் கலந்துகொள்ளவும் பின்னர் Boeing 787 விமான simulator இல் விமானத்தை இயக்குவது தொடர்பான பாட அலகுகளை கற்றுக்கொள்ளவும் பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

10:30 இற்கு விமானம் புறப்பட்ட பின்னர் விமானத்தில் விசேட பான வகைகள் சிற்றுண்டிகள் வழங்கப்படும். அதன் பின்னர் பிரபல chef, Neil Perry யால் வடிவமைக்கப்பட்ட menu வின்படி மதிய உணவு வழங்கப்படும். அத்தோடு பயணிகளை மகிழ்விக்க, surprise celebrity host என்ற பிரபலமான நபரின் தலைமையில் entertainment கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதைத்தவிர commemorative flight certificate என்ற சான்றுப் பத்திரம், Qantas business pyjama set மற்றும் பரிசுப் பொதி என்பன பயணிகளுக்கு வழங்கப்படும் என்று Qantas சொல்கிறது.
in flight meal
Source: Flickr
தாய்வான், ஹாங்கொங், ஜப்பான் புரூனாய், போன்ற நாடுகள் இந்தமாதிரியன flights to nowhere விமான பயணங்களை ஆரம்பித்திருக்கின்றன. Singapore Airlines இந்த மாதிரியான பயணங்கள் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றது. தாய்லாந்து விமான நிலையத்தில் விமானத்தில் வழங்குவதற்கு ஒப்பான உணவுப்பொட்டலங்கள், விமான நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. தாய்வானில் China Airlines இல் பயணிகளை விமானத்தில் ஏற்றி பின்பு இறக்கி airline food களை அவர்களுக்கு கொடுத்து அனுப்பும் விசேட ஏற்பாட்டை China airlines செய்கிறது.

இதைத்தவிர விமான நிலையங்களில் விமானத்திற்கு உணவுப்பொதிகளை வழங்கும் Gate Gourmet என்ற நிறுவனம் freeze பண்ணப்பட்ட உணவுப்பொதிகளை சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் விற்பனை செய்யத்தொடங்கியிருக்கிறது. விமான பயண அனுபவத்தை அசைபோடும் விதமாக பலர் இந்த பொட்டலங்களை வாங்கிச்செல்கிறர்கள்.
Australian airport
Source: Flickr
இவ்வாறாக, விமான பயணம் இல்லாக்குறை உணர்ந்தவர்கள் , விமான உணவை மற்றும் பானங்களை , immigration, customs இவற்றைக்கடந்து செல்லும் அனுபவத்தை அசை போட விரும்புபவர்கள் என்று பலர் எம்மிடையே பலர் இருப்பதால், அவர்களைத்திருப்திப்படுத்தும் விதமாகவும, 6 மாதங்களாகப் பறக்காத விமானங்களை தூசுதட்டி, ‘போகாத ஊருக்குப் புறப்படும் விமானங்களாக’ அவற்றை மாற்றவும் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அவனவன் பிரச்சனை அவனவனுக்கு. ‘கஞ்சிக்கு உப்பில்லை’ என்பவனுக்கும் ‘காலுக்கு காலணி இல்லை’ என்பவனுக்கும் அவரவர் இடத்தில் இருந்து பார்க்கும் போது இரண்டுமே, நியாயமாகவே தோன்றும். அதுபோலத்தான் இந்த ‘போகாத ஊருக்கு புறப்படும் விமானங்களும்’ என்று சொல்லலாமா?
இடம், பொருள், காலம் என்பவற்றின் அடிப்படையிலேயே தேவைகள் நிர்ணயமாகின்றன. அப்படிப்பார்க்கிறபோது இந்த வியாக்கியானம் சரி என்றே படுகிறது.


Share

Published

Updated

By R.Sathiyanathan

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand