"அகதிகள் பொய் சொல்லி ஆஸ்திரேலியா வருகிறார்கள் என்று அமைச்சர் Dutton சொன்னார்"

அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவ சேவை பெறுவதற்காக பொய்சொல்லி ஆஸ்திரேலியா வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சு கூறி வந்ததை நிரூபிக்கத் தவறி விட்டது.

A refugee on Manus Island.

A refugee on Manus Island. Source: AAP

"Medevac" சட்டம் குறித்து நேற்று நடந்த செனட் குழு விசாரணையில் 'இந்த செயல் முறையை தவறான வழியில் பயன்படுத்தி அகதிகளும் புகலிடக் கோரிக்கையாளர்களும் தம்மைத் தாமே காயப்படுத்தி மருத்துவ சேவையை பெறுவதற்காக என்று ஆஸ்திரேலிய வருகிறார்கள்' என்று உள்துறை அமைச்சு சுமத்தி வந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறி விட்டது.

அரசின் விருப்புக்கு எதிராக "Medevac" சட்டம்  இந்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  நோய்வாய்ப்பட்ட அகதி அல்லது புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தால் அவருக்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவ சேவை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

தேர்தலின் பின், இந்த அரசாங்கம் அந்த சட்டத்தை நீக்க நடவடிக்கைகள்  எடுத்து வருகிறது. ஆனால், இது குறித்து செனட் குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது.   இந்த சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்க வேண்டுமென்று,  வைத்தியர்கள், அகதிகளுக்காகக் குரல் கொடுப்போர், வழக்குரைஞர்கள் இந்த விசாரணையில் நேற்று வாக்குமூலம் கொடுத்தார்கள்.
Accommodation facilities at a refugee settlement on Nauru.
Accommodation facilities at a refugee settlement on Nauru. Source: AAP
தடுப்பு முகாமில் இருப்பவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்று தாம் அறிந்துள்ளதாக கூறிய உள்துறை அமைச்சு, ஒருவர்  தன்னைத் தானே காயப்படுத்தினால் மருத்துவ வசதி பெறுவதற்காக ஆஸ்திரேலியா வருவதற்கு medevac சட்டத்தில் இடம் இருப்பதால் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறியிருந்தது.

வெளி நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் சிந்தனையை, உள்ளுணர்வை, தான் அறிந்துள்ளதாக Operation Sovereign Borders தளபதி Craig Furini இந்த விசாரணையில் கூறினார்.

உடலில் காயங்களை ஏற்படுத்தினால் ஆஸ்திரேலியா செல்லும் வழி இருக்கிறது என்று, மற்றைய அகதிகள் - குறிப்பாக பப்புவா நியூ கினியில் இருப்பவர்கள், சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தளபதி Furini விசாரணைக் குழுவிடம் கூறினார். ஆனால், இதற்கான ஆதாரம் எதையும் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்கும் நிலையில் தான் இல்லை என்றும் அவற்றை இன்னொரு நாள் சமர்ப்பிக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தம்மைக் காயப் படுத்திக் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று உள்துறை கூறியிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 பேர் மட்டுமே அப்படி தம்மைத் தாமே காயப் படுத்திக் கொண்டார்கள் என்றும், இந்த medevac சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் 66 பேர் அப்படித் தம்மை காயப் படுத்திக் கொண்டார்கள் என்றும் உள்துறை கூறியது.  புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏன் தம்மை காயப்படுத்தி கொள்கிறார்கள் என்று வேறு எந்த ஆய்வையும் தாம் செய்யவில்லை என்று தளபதி Furini மேலும் கூறினார்.

“ஒருவரை ஆறு வருடங்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தால், அவர்கள் தம்மைத் தாமே காயப்படுத்த, அல்லது தற்கொலை முயற்சிகளில் ஈடுபட மாட்டார்களா? அதை நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லையா?” என்று, Greens கட்சி செனட்டர் Nick McKim அதிகாரிகளிடம் கேட்டார்.
கடந்த வியாழன் வரை, 111 புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளி நாட்டிலுள்ள தடுப்பு முகாம்களிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார்கள் என்றும் ஆனால் இவர்களில் எவரும் மருத்துவமனையில் தற்போது இல்லை என்றும் உள்துறை அமைச்சின் செயலாளர் Mike Pezzullo கூறினார். பிரிஸ்பேன், மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களிலுள்ள தடுப்பு முகாம்களில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இவர்களை மீண்டும் வெளி நாட்டிலுள்ள தடுப்பு முகாமிற்கு விரைவில் அனுப்பி வைக்க இந்த சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த சட்டத்தை முற்றாக நீக்காமல், மருத்துவ சேவை பெற்ற பின்னர் புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளிநாட்டில் உள்ள தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று medevac சட்டத்தில் மாற்றத்தை அறிமுகப்படுத்தலாம் என்று Law Council of Australia அமைப்பினர் கூறினார்கள்.
Asylum Seeker Resource Center chief executive Kon Karapanagiotidis
Asylum Seeker Resource Center chief executive Kon Karapanagiotidis Source: AAP
மருத்துவ வசதி தேவைப்படும் புகலிடக் கோரிக்கையாளருக்கு, அந்த மருத்துவ சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு இந்த சட்டம் வழி செய்கிறது என்று கூறிய, அகதிகளுக்காகக் குரல் கொடுக்கும் Asylum Seekers Resource Centre தலைமை நிர்வாகி Kon Karapanagiotidis, “இந்த சட்டத்தைப் பயன்படுத்த, புகலிடக் கோரிக்கையாளர்கள் பொய் சொல்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்” என்றார்.

“வாழ்வா சாவா என்ற முடிவை வைத்தியர்கள் எடுக்கட்டும், அரசியல்வாதிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் மேலும் சொன்னார்.
ஆஸ்திரேலியாவில் விரைவில் தீர்க்கக்கூடிய வியாதிகள் எல்லாம், பப்புவா நியூ கினி மற்றும் நௌரூ தீவில் மிகப்பெரும் நோயாக வளரும் அளவிற்கு கவனமில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்று, அங்கு தன்னார்வ மருத்துவ சேவை செய்யும் நீலா ஜானகிரமணன் கூறினார்.

புகலிடக் கோரிக்கையாளர்களில் 97 சதவீதத்தினர் ஏதாவது ஒரு உடல் உபாதையைக் கொண்டுள்ளார்கள். 91 சதவீதத்தினர் மன உழைச்சலுக்குள்ளாகி உள்ளார்கள்.

“இந்த நிலை ஆஸ்திரேலியாவில் உள்ள மிகவும் பின் தங்கிய சமூகங்களில் காணப்படும் நிலைமையை விட மிக மோசமானது.  உலகின் மற்றைய பகுதிகளிலுள்ள அகதி முகாம்களின் நிலமையுடன் ஒப்பிடுகையில் மிக மிக மோசமானது” என்று நீலா ஜானகிரமணன் மேலும் கூறினார்.
முன்னர், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஆஸ்திரேலியாவிற்குக் கொண்டு வருவது சிக்கலான விடயம் என்றும், அதற்கு நீண்ட நாட்கள் எடுத்தன என்றும் Australian Medical Association தலைவர் Tony Bartone கூறினார்.

இதே வேளை, குடிவரவு, எல்லைப் பாதுகாப்பு குறித்த வல்லுநர்கள், தொழிற் சங்கங்கள், மற்றும் நிறுவனங்களுடன் Labor கட்சியினர் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.  புகலிடம் மற்றும் குடிவரவு குறித்த செயல் முறையைப் பயன்படுத்தி குறைந்த சம்பளத்துடன் தொழிலாளர்களை ஆஸ்திரேலியாவிற்கு சில நிறுவனங்கள் கொண்டு வருகின்றன என்று Labor கட்சி கவலை கொண்டுள்ளது.

தற்கொலையைத் தடுப்பது குறித்த ஆதரவையும் தகவலையும் தேடுபவர்கள் 13 11 14 என்ற இலக்கத்தில் Lifeline, 1300 659 467 என்ற எண்ணில் Suicide Call Back Service மற்றும் 1800 55 1800 (25 வயது வரை) Kids Helpline ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். மன ஆரோக்கியம் குறித்த கூடுதல் தகவல்கள் Beyond Blueவில் கிடைக்கின்றன.




Share

4 min read

Published

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand