சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என கருதப்பட்டு விசா ரத்துச் செய்யப்பட்டவர்களே, இவ்வாறு கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாக, ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையின் பேச்சாளர் SBS-இடம் தெரிவித்தார்.
சுமார் 12 பேர் இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி, மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் குடிவரவுத் திணைக்களத்தினால் அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் உட்பட அகதிகள் சிலரும் அடங்குவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
அகதி என ஏற்றுக்கொள்ளப்பட்டவரின் விசா ரத்துச் செய்யப்பட்டு, அவர் குடிவரவு தடுப்புமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், இதற்கெதிராக விக்டோரிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ள பின்னணியில் இவரது சட்டத்தரணிக்கு அறிவிக்கப்படாமலேயே அவர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் பிற்பகல், குறித்த 12 பேரையும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்வதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
மெல்பன் குடிவரவு தடுப்புமுகாமிற்கு வெளியே இடம்பெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததுடன் பொலிஸார் Pepper Spray-ஐ பயன்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவத்தில் பொலிஸார் நடந்துகொண்ட முறை, மனிதர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டியதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிரீன்ஸ் கட்சி செனட்டர் Lidia Thorpe குற்றம்சாட்டியுள்ளார்.
இதுஒருபுறமிருக்க மொறிசன் அரசினால் கடந்த ஆகஸ்ட் 2020 இல் மீண்டும் திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் சுமார் 212 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
