Key Points
- குயின்ஸ்லாந்தில் பாம்பு கடித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் உயிரிழந்தார்.
- குயின்ஸ்லாந்தில் சில மாதங்களில் பாம்புக்கடியினால் உயிரிழந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
- சில மாநிலங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும், பாம்பைக் கொல்வது சட்டவிரோதமானது.
ஆஸ்திரேலியாவில் கோடை காலத்தில் பாம்புகள் அதிக சுறுசுறுப்பாக இருப்பதாலும், கடந்த சில மாதங்களில் பாம்பு கடியால் இரண்டு பேர் இறந்திருப்பதாலும், ஊர்வனவற்றில் ஏதேனும் ஒன்றை எதிர்கொண்டால் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நிபுணர்கள் மக்களை வலியுறுத்துகின்றனர்.
சனிக்கிழமையன்று, குயின்ஸ்லாந்தில் 60 வயதுடைய நபர் ஒருவர் பாம்புக் கடியால் இறந்தார். அன்று காலை, பிரிஸ்பேனுக்கு கிழக்கே 70 கிமீ தொலைவில் உள்ள கென்சிங்டன் குரோவ் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டில் பழுப்பு நிற பாம்பு ஒன்று அவரது கையை கடித்ததாக நம்பப்படுகிறது.
நவம்பர் 2022 இல் குயின்ஸ்லாந்தில் உள்ள கெய்ண்டாவில் மற்றொரு அபாயகரமான பாம்புக் கடி சம்பவம் இடம்பெற்றது. கோடை மாதங்களில் பாம்பு கடித்தால் ஏற்படும் அபாயத்திற்கு எதிராக கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்களை உள்ளூர் கவுன்சில் கேட்டுள்ளது.

ஆனால் பாம்புகளைக் குறிப்பாக விஷமுள்ள பாம்பினை நீங்கள் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
ஆஸ்திரேலியாவில் பாம்புக்கடி வழமையான சம்பவமா?
CSIRO வின் தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் 200 க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு விஷமானது. ஆனால் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. அதாவது அப்பாம்புகள் கடித்தால் உயிருக்கு ஆபத்தானதாகும்.
ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பாம்புக்கடி அபாயங்கள் இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 476 பேர் பாம்புக் கடியால் இறப்பதாகக் கண்டறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பேர் பாம்புக் கடியால் மரணமடைகின்றனர்.
பாம்பொன்றைக் கண்டால் என்ன செய்வது?
மேத்யூ ஸ்டாப்ஃபோர்ட் தனது தந்தையிடமிருந்து பாம்பு பிடிக்கும் திறமையைக் கற்றுக்கொண்ட பிறகு இப்போது NSW இன் Central Coast பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலை நடத்தி வருகிறார்.
குளிர்காலத்தில் அழைப்புகள் குறைவாக இருந்தாலும், கோடையின் உச்சத்தில் அவர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு அழைப்புகளைப் பெறுகிறார்.
சமீப மாதங்களில், அவர் பல்வேறு இடங்களில் பாம்புகளை சமாளிக்க அழைக்கப்பட்டுள்ளார். Adult shop, சாப்பாட்டு அறை, பள்ளி வகுப்பறை, பல் மருத்துவ மனை மற்றும் ஒரு குளம் என்பன அவற்றுள் குறிப்பிடத்தனவாகும்.
ஒவ்வொரு சம்பவமும் அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றாலும், ஒரு நபர் வெளியிடத்தில் ஒரு பாம்பைக் கண்டால், அவர்கள் தங்கள் தூரத்தை அதிகமாக வைத்திருக்க வேண்டும். மற்றும் பாம்பு திடுக்கிடாமல் இருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
"பாம்புகள் உங்களை துரத்துவதில்லை, ஆனால் நீங்கள் ஒரு பாம்பை, குறிப்பாக பழுப்பு நிற பாம்புகளைத் திடுக்கிட வைத்தால், அவை எழுந்து உங்களை நோக்கி வரும்."
பாம்பு பொதுவாக அதனை மிதித்தாலோ அல்லது பிடிக்க முயன்றாலோ மட்டுமே கடிக்கும் என்று அவர் கூறினார்.
உங்கள் வீட்டில் ஒரு பாம்பினைக் கண்டால், அதை அகற்ற ஒரு பயிற்சி பெற்ற நிபுணரையே அழைக்க வேண்டும் என்று திரு ஸ்டாப்ஃபோர்ட் கூறினார்.
Stopford's போன்றவர்கள் தமது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் சில தன்னார்வ தொண்டாகப் பாம்பு பிடிப்பவர்கள் சில பகுதிகளில் செயல்படுகின்றனர்.
"NSW இல், உரிமம் இல்லாமல் ஒரு பாம்பை பிடித்தாலோ அல்லது கொன்றாலோ, $10,000 அபராதம் மற்றும் சாத்தியமான சிறைத் தண்டனை"
இதேபோன்ற தண்டனைகள் ஆஸ்திரேலியா முழுவதும் நடைமுறையில் உள்ளன, ஆனால் மேற்கு ஆஸ்திரேலியா போன்ற சில இடங்களில், உடனடி ஆபத்தின் காரணமாக பாம்பைக் கொன்றால் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
எந்த வகையான பாம்பு கடித்தாலும் உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்குமாறு குயின்ஸ்லாந்து ஹெல்த் மக்களை அறிவுறுத்துகிறது.
With AAP.
————————————————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
