விலங்குகளின் cells - கலங்களில் இருந்து தயாரிக்கப்படும் இந்த சோதனைகூட இறைச்சியை அமெரிக்க உணவகங்களுக்கும், supermarkets என்ற பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதயடுத்து ஆஸ்திரேலியாவிலும் இவ விற்பனையாகும் நாள் தொலைவில் இல்லை. இறைச்சிக்காக மிருகங்களைக் கொல்வதற்கு மாற்றாக, சோதனை கூடத்திலிருந்து உங்கள் சமையலறைக்கு வந்துசேரும் இந்த இறைச்சி ‘cell-cultivated meat’ அல்லது ‘cultured meat’ என்று அழைக்கப்படுகிறது.
Plant protein என்ற தாவரப் புரதத்தைக்கொண்டு தயாரிக்கப்படும் meat alternative -இறைச்சிக்கான மாற்றுணவு என்ற முறையிலிருந்து இந்த சோதனைகூட இறைச்சி தயாரிக்கும் முறை முற்றிலும் மாறுபட்டது. இதைத்தயாரிக்க விலங்குகளின் cells கலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த cells களைப் பயன்படுத்தி விலங்குகளின் உடல்பாகங்களை சோதனைகூடத்தில் உருவாக்குகிறார்கள். US Foods and Drug Administration இந்தவகை இறைச்சி பாதுகாப்பானது என்பதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது.

‘மிருகங்களை வதைக்காமல் அல்லது கொல்லாமல் இறைச்சியைப் பெறமுடியும் என்ற கட்டத்திற்கு விஞ்ஞான தொழிலநுட்ப உலகம் முன்னேறுகிறது என்பதோடு, மிருகங்களைப் பண்ணைகளில் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் உணவு, நீர் மற்றும் வளங்கள் என்பனவற்றுக்கான செலவுகள் இல்லாமல், வளங்கள் விரயமாகாமல் இறைச்சி உருவாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும்; மிருகங்களின் கழிவுகளை அப்புறப்படுத்தும் தேவைகள் இருக்காது என்பன போன்ற பல்வேறு நன்மைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்தவகை இறைச்சியைத் தயாரிக்கும் Good Meat நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி Josh Tetrick கருத்து தெரிவிக்கும் போது, ‘மிருகங்களை வளர்க்கத்தேவையான பெருந்தொகை நிலப்பரப்பு, மற்றும் மிருகங்களுக்குத்தேவையான நீர் என்பன சற்றும் விரயமாகாமல் இறைச்சியை உற்பத்தி செய்வதற்கான மாற்றுவழி cell cultivated meat தயாரிப்பதுதான்’ என்று கூறுகிறார்.
உயிருள்ள விலங்கின் உடலில் இருந்து அல்லது கருவுற்ற முட்டையிலிருந்து cells என்ற கலங்கள் பெறப்படுகின்றன. இவை பெரிய steel tanks- எஃகு டாங்கிகளில் culture செய்யப்படுகின்றன. இந்த கலங்கள் விலங்குகளின் உடலில் நிகழ்வதுபோல இந்த டாங்கிகளில் பல்கிப்பெருகுகின்றன. இதற்கான ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது. இந்த டாங்கிகள் bio reactors என்று அழைக்கப்படுகின்றன. நான்கு முதல் ஆறு வாரங்களின் பின்னர் bio reactors களில் இருந்து எடுக்கப்பட்டு தட்டையான sheets களாக அவை மாற்றப்படுகின்றன. பின்னர் 3D printing முறை மூலமாக தேவையான உடல் பாகங்களாக மற்றும் cutlets, nuggets, sausages போன்ற பொருட்களாக வடிவமைக்கப்படுகின்றன.

10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகி இருந்தாலும் Cell cultivated meat ஐ உலகில் இதுவரை அங்கீகரித்துள்ள நாடு சிங்கப்பூர் மட்டுமே. இங்கு 2020 ஆண்டே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் Huber Butchery and Bistro என்ற நிறுவனம் தனது உணவகத்தில் இந்த முறையில் தயாரிக்கப்பட்ட கோழி இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்க துவங்கிவிட்டது. சிங்கப்பூரில் இந்த cell cultivated meat ஐ உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரே உணவகம் இது மட்டுமே. California விலுள்ள Eat Just நிறுவனத்தின் அனுசரணையுடன் தயாரித்து வழங்கப்படும் இந்த கோழியிறைச்சியின் சுவையில் எந்த வித்தியாசமுமில்லை என்று வாடிக்கையாளர்கள் சொல்வதாக இந்த நிறுவனம் சொல்கிறது.
கோடிக்கணக்கான டாலர்கள் இந்த துறையில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதன் உற்பத்தி செலவு தற்போதைய நிலையில் அதிகமாக இருப்பதாலும் மக்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகமில்லாத்தாலும் பெரிய அளவில் இது சந்தையில் இல்லை. சிங்கப்பூரில் Huber உணவகம் இந்த cell cultivated meat ஐக்கொண்ட chicken sandwich மற்றும் chicken pasta என்பவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

விலங்குகளிடமிருந்து பெறப்படும் இறைச்சிக்கு மாற்று தேவை என்பதை விஞ்ஞானிகளும், மிருகவதை எதிர்ப்பாளர்களும், பொருளியல் வல்லுனர்களும், சுற்றாடல் பராமரிப்பாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகிறார்கள். Cell cultivated meat இன் பயன்பாடுகாரணமாக பசுமை இல்ல (green gas) வாயுக்களின் வெளியேற்றம் 96 சதவீத்த்தால் குறையும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அதே நேரத்தில் cell cultivated meat ஐத்தயரிக்கத்தேவையான energy சக்தி, அதற்கு ஊட்டமளிக்க பயன்படுத்தப்படும் growth media என்பவற்றைக் கணக்கிலெடுக்கும்போது, பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பைவிட அதிகமான பாதிப்பு cell cultivated meat காரணமாக ஏற்படலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த பின்னணியில், பண்ணைகளில் இறைச்சிக்காக விலங்குகளை வளர்ப்பது தொடர்ந்து செய்யப்படக்கூடிய ஒன்றல்ல என்பதில் பலரும் ஏகோபித்த கருத்தைக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அதேநேரத்தில் மக்கள் தொகை வளர்ச்சி, குடும்பங்களின் வருமானத்தில் ஏற்பட்டுவரும் அதிகரிப்பு என்பன காரணமாக 2050 ஆம் ஆண்டளவில் இறைச்சியின் தேவை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுருக்கிறது. எனவே Cell cultivated meat இந்த தேவையின் ஒரு பகுதியை பூர்த்திசெய்யக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவில் தற்போது இந்த வகை இறைச்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதால் அங்கு அது பரவலாக பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் Upside நிறுவனம் Sam Francisco விலுள்ள Bar Crenn என்ற உணவகத்துடன் இணைந்து இதை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதே நேரத்தில் Good Meat நிறுவனம் Washington இலுள்ள பிரபல Chef, Jose Andres உடன் இணைந்து இதை அறிமுகப் படுத்தவிருக்கிறது.
அதே நேரத்தில், அமெரிக்காவில் இதற்கான அனுமதி கிடைத்திருப்பதன் காரணமாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இதுதொடர்பாக ஆர்வம் காட்டவும், முதலீடு செய்யவும் முன்வரக்கூடும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
