சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்று பொலீஸாரால் சந்தேகிக்கப்படும் 31 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களாக Blue Mountains பகுதியில் தொடர்ந்த மர்மம் துலங்கியிருக்கிறது.
குயின்ஸ்லாந்து மாநிலம் Coolangatta பகுதியில் தனது பாட்டியுடன் வசித்து வந்த சிறுமியொருவர், விடுமுறையைக் களிப்பதற்காக தனது தாயிடம் நியூ சவுத் வேல்ஸ் Blue Mountains-க்கு வந்திருந்தார்.
தாயுடனும் தாயைத் திருமணம் செய்துகொள்ளவிருந்தவருடனும் நியூ சவுத் வேல்ஸ் Mount Wilson பகுதியிலுள்ள பங்களா ஒன்றில் தங்கியிருந்தபோது - கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி - சிறுமி காணாமல்போயிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாகப் பொலீஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சிறுமி தங்கியிருந்த Mount Wilson பிரதேசத்தை அண்டிய இடங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது.
அயலவர்கள் கொடுத்த தகவலின்படி, சிறுமி காணாமல்போன அடுத்தநாள் விடியற்காலை, அப்பகுதியிலிருந்து முன் விளக்கு போடப்படாத வாகனமொன்று வெளியேறியதாக பொலீஸாருக்கு அறியக்கிடைத்துள்ளது.
அந்த வாகன விவரங்களை அடிப்படையாக வைத்து, இந்த வாகனத்தின் நடமாட்டத்தை CCTV மற்றும் தடயவியல் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை செய்துவந்த பொலீஸார், சிறுமி காணாமல்போன இடத்திலிருந்து ஒரு மணிநேர வாகனப்பயணத் தூரத்திலுள்ள Colo River பகுதியை சந்தேகத்துக்குரிய இடமாக கணித்தனர்.
பொதுமக்கள் வசிப்பிடங்களையும் பயணத்துக்கு வசதியான வீதிகளையும் தாண்டி, கரடுமுரடான பாதையொன்றிற்குள் அமைந்துள்ள Wollemi National Park பகுதியைச் சென்றடைந்த பொலீஸார், அங்கு தேடுதலை ஆரம்பித்தனர்.
இந்தத் தேடுதலுக்குச் சமாந்தரமாக, பொலீஸார் சந்தேசகத்தின் பேரில் கண்காணிக்கத் தொடங்கியபோது, கொலைச்சந்தேகநபர் சிறுமியின் தாயாரைத் திருமணம் செய்யவிருந்தவரே எனத் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியைக் கொலைசெய்து, கொள்கலன் ஒன்றில் அடைத்து, அதனைப் படகு மூலம் ஆற்றுக்குள் கொண்டுசென்று போடுவதற்கு முயன்றார் என்று பொலீஸாரால் சந்தேகிக்கப்படும் இந்த நபர், ஐந்து நாட்களின் பிறகு, சிறுமியின் சடலம் மீட்கப்பட்டவுடன் கைதாகியுள்ளார்.
குறித்த கொலைச் சந்தேக நபர் திட்டமிட்டபடி படகு தொழிற்பட மறுத்ததால், சிறுமியின் சடலம் அடங்கிய கொள்கலனை, காட்டுப்புதர்கள் நிறைந்த பிரதேசத்தினால் இழுத்துச்சென்று, பற்றைகள் அடர்ந்த இடத்தில் புரட்டிவிட்டிருக்கிறார் என்றும், தடயங்களோடு தேடிச்சென்ற பொலீஸார் இதனைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலீஸார் நீதிமன்றிடம் வழங்கியுள்ள ஆவணங்களின்படி, ஜனவரி 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கும் அதற்கு அடுத்தநாள் காலை பத்துமணிக்கும் இடையில் சிறுமி கொல்லப்பட்டிருக்கிறார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில்லாத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தந்தை, தனது மகளின் பிரிவுத்துயர் தாங்காது சமூக வலைத்தளத்தில், அஞ்சலிக்குறிப்பைப் பகிர்ந்திருக்கிறார். சிறுமி காணாமல்போன நாள் முதல் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள, சிறுமியின் தாயிடம் இப்போதைக்கு விசாரணைகள் எதையும் மேற்கொள்ளமுடியவில்லை என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் பாடசாலை மாணவர்கள், சிறுமி இறந்த செய்தியறிந்து பெருந்துயருடன் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, the Suicide Call Back Service on 1300 659 467 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at Beyond Blue.org.au and on 1300 22 4636.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
