ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் Tranmere Point கரையோரத்தில், இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கைப்பின்னணி கொண்டவர் என நம்பப்படுகிறது.
இன்று பிற்பகல் 1:30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்ட இவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இம்மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று நம்பப்படுகிறது.
கருப்பு ஜீன்ஸ், அடர் பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
குறித்த பகுதியில் மீட்புப் பணியை மேற்கொள்வது மிகவும் கடினமாக காணப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் ESCAD 168-21052023 என்ற குறிப்பு எண்ணுடன் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
